Thursday 11 June 2015

எண்ணங்கள்

ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம் என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.
மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.

நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து,மட மாளிகை,புது மாடலான வண்டி வாகனங்கள்,பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி,பயிரிடுகிறார்கள்.எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து ,போட்டி,பொறாமை,புறம் பேசுதல்,பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல்,உண்மையாக உழைத்தல்,எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள். இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும்,உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.
எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.

ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால்,அது நல்லதோ,கேட்டதோ அது நடந்தே தீரும். ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்"என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள். உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.

Wednesday 10 June 2015

“எல்லாம் செய்துவிட்டேன்

“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.
வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்
1 கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல…
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.
2 தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.
3 தேவை தெளிவு – குருட்டு நம்பிக்கை அல்ல
ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.
உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?
வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.
4 கொஞ்சம் வளைந்து கொடுங்கள்
நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.
5 எனக்கு என்ன கிடைக்கும்?
உயர்ந்த மனிதனாக ஆக வேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதைத் தாண்டி இருந்தது. “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்
.
அப்போது இயல்பாகவே “என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!

முன்னேற்றத்தின் மூலமந்திரம்

”நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று சிலர் புலம்புகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.
தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?
கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்

வெற்றிக்கு நேரம்

வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லதுஎப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றிகிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றிபெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டைபார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவுநன்றாக இருக்கும்’ என்று தோன்றும்.
பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் கலர் லேப் என்ற நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்த விஷயம் எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பதிலில்லை ஆச்சரியம். ஒரு நிமிடம் தாமதம் ஆனால்கூட பணம் வாபஸ் என்பதுதான் ஆச்சரியம்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ பிரிண்ட் செய்து தரப்படும் என்றஅறிவிப்பை பார்த்ததும், எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். ஆனால் அரைமணி நேரமாவது ஆகும் என்று தோன்றும்.
நிறுவனங்களின் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல,இப்பொழுதெல்லாம் யாரும் நம்புவதில்லை.
அதனால் அந்த நிறுவனம் அறிவிப்பில் ஒரு வரியை கூடுதலாக சேர்த்திருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி தாமதமானாலும் பிரிண்ட் இலவசம் . பணம்கட்டத்தேவையில்லை.
தொழிலில் ‘வெற்றி பெறச் செய்வோம்’ என்ற வாக்குறுதியைப் போலவே நிச்சயம் அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் பத்தே நிமிடத்தில் வாடிக்கையாளர்கள் மனங்களை வென்று விடுகிறார்கள்.

ஆரம்பம் மட்டுமே

நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமையாளர்களைப் பார்க்கிறோம். நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே அந்தந்த துறைகளில் வெற்றி அடைகிறார்கள் என்பதையும் பெரும்பாலோனோர் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரியாமல், இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போவதையும் பார்க்கிறோம்.
அப்போதெல்லாம் நம்மால் வியப்படையாமல் இருக்க முடிவதில்லை. அதுவும் வெற்றியடைந்தவர்களை விட அதிகத் திறமை கொண்டவர்கள் என்று நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போய் விடும் போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி நமக்குள் எழாமல் இருப்பதில்லை. அதற்கு ‘விதி’ என்ற மிக வசதியான பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அபூர்வமாய் ஒருசில விதிவிலக்குகள் தவிர அந்த விதி அவரவர்களால் எழுதப்படுவது அல்லது ஏற்படுத்திக் கொள்வது என்பதே நிதர்சனமான உண்மை.ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தோல்வி அடையும் அனைவருக்கும் பொதுவாக மூன்று குணாதிசயங்கள் இருப்பதை நம்மால் காண முடியும். அதில் முதலாவது,அவர்களுக்குள்ளே சாதனை புரிந்தே ஆக வேண்டும் என்ற அக்னி இருப்பதில்லை. இது இல்லாத வரை எத்தனை திறமை இருந்தாலும் அது பிரகாசிப்பதில்லை.
இரண்டாவது, அவர்கள் ஈடுபாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விஷயத்தில்இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஈடுபாடு, நாளை வேறு ஒன்றில் தீவிர ஈடுபாடு, சில நாட்களில் புதிதாக ஒன்றில் பேராவல் என்று மாறிக் கொண்டே போகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல ஆரம்பங்கள் இருக்கின்றன, திறமைக்கும்குறைவில்லை என்றாலும் எதிலும் முழுமை இருப்பதில்லை.
மூன்றாவது, அவர்கள் வெற்றி வரும் வரை பொறுமையாக தாக்குப் பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளிலேயே பின்வாங்கி விடுகிறார்கள். தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிடப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை. இதை தங்கள் துறையில் சிகரத்தை எட்டிய இருவர் வாழ்க்கை அனுபவங்களைப் படித்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.பாஸ்கல் (Pascal) என்கிற கணித மேதையை அறியாதவர் இருக்க முடியாது. அவர்பிற்காலத்தில் தத்துவஞானியாகவும் விளங்கினார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில்சட்டம் மட்டுமே மேல்நிலை மக்களின் கௌரவமான தொழிலாகக் கருதப்பட்டது.எனவே அவர் தந்தை மகன் சட்டப் பேரறிஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். பாஸ்கலோ கணிதத்தில் தான் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார்.எத்தனை அறிவுரை கூறியும் மகன் மாறாததைக் கண்ட தந்தை கடைசியில் மகனை சட்ட புத்தகங்கள் மட்டுமே நிறைந்த அறையில் வைத்துப் பூட்டி வைக்கத் துவங்கினார். உள்ளே கணிதக் கோட்பாடுகளை மகன் எழுதிக் கொண்டு இருப்பதை பின்னர் கண்டு பிடித்து அங்கிருந்து எழுத்துக் கருவிகள், தாள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திப் பார்த்தார்.
ஆனால் பாஸ்கலோ கரித்துண்டில் தரையில் எழுதிப் பார்க்கத் துவங்கினார்.கடைசியில் தந்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர் ஆவலுடன் தன் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பிற கணித மேதைகள் இவருடையவித்தியாசமான, புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். தடங்கல்களைக் கண்டு தளராமல் தொடர்ந்தஇத்தகைய ஈடுபாட்டிற்குப் பின் வராத வெற்றியும் உண்டா? வெற்றியும், புகழும்கடைசியில் அவருக்கு உலக அளவில் கிடைத்தன.பெர்னார்டு ஷா (Bernard Shaw) எழுதுவதில் காட்டிய ஈடுபாடு மகத்தானது. இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வேலை செய்து கொண்டிருந்தாலும், தினமும்குறைந்தது ஐந்து பக்கங்களாவது எழுதுவது என்று உறுதியுடன் ஓய்வு நேரங்களில்தொடர்ந்து எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கும், பிரசுரங்களுக்கும் அனுப்பியும் வந்தார். எழுதி அனுப்பிய முதல் ஒன்பதாண்டுகளில் அவருக்குத் தாள்,பேனா மை, தபால் செலவுகளுக்கான பணம் கூடக் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஓரிரு தோல்விகளைக் குறுகிய காலத்தில் சந்தித்தாலே மனம் ஒடிந்து போகும் மனிதர்கள் மத்தியில் ஒன்பதாண்டு காலம் தொடர்ந்து சந்தித்த தோல்விகளையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து எழுதி பிற்காலத்தில் பிரபலமாகி மிகப்பெரிய செல்வந்தரானார். அவர் எழுத்து இன்றளவும் பேசப்பட்டும், மேற்கோள் காட்டப்பட்டும் வருகிறது என்பது வரலாறு.
இவர்கள் எல்லாம் துவக்கத்தில் சந்தித்த எதிர்ப்புகளும் தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல. வெற்றி சுலபமாக வந்து விடவில்லை. இடைக்காலத்தில் விதி என்றுதீர்மானித்துக் கொண்டு தங்கள் பாதைகளில் இவர்கள் திரும்பிப் போய் விடவில்லை. தங்கள் பார்வைகளையும், ஈடுபாடுகளையும் வேறிடத்திற்குத் திருப்பிக் கொள்ளவில்லை. உலகம் தோல்வி என்ற சான்றிதழைத் திருப்பித் திருப்பித் தந்தாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு உள்ளே இருந்த அக்னி வெளியே இருந்த இருண்ட சூழ்நிலைகளிலும் ஒளி கொடுத்து வழி காட்டியது. வெற்றி வரும் வரை காத்திருந்தார்கள். தங்கள் விதியைத் தீர்மானிக்க மற்றவர்களுக்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
எனவே திறமை இருப்பவர்களே, ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். திறமைமட்டுமே போதுமானதல்ல, அது வெறும் ஆரம்பம் மட்டுமே என்பதை மனதில் வையுங்கள். உடனடி லாட்டரி போல வெற்றி வந்து மடியில் விழும் என்று எண்ணாதீர்கள்.
தடங்கல்கள் சகஜம் என்று எதிர்பார்த்துத் தயாராக இருங்கள். உங்கள் சக்திகளைஎதிர்மாறான பல துறைகளில் அடிக்கடித் தாவி சிதறடிக்காதீர்கள். தொடர்ந்து ஈடுபாடு குறையாமல் செயல்படுங்கள். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். துவண்டு விடாதீர்கள். நீங்களாக ஏற்றுக் கொள்ளாத வரை தோல்வி சாசுவதமல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக் கொண்டு முயற்சியைக் கை விட்டு விடாதீர்கள். விதியின் நாயகனான இறைவன் திறமையை உங்களுக்குத் தந்திருக்கிறார் என்றால் அது நீங்கள் வெற்றி பெறவே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.