Thursday 21 November 2019

பண்பு

பண்பு..! - 

அப்பா, அம்மா, மகன், மகள் நால்வரும் காரில் வெளியூர் சென்றார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி போகும்போது கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது.

நல்லவேளையாக அப்பாவுக்கு பஞ்சர் ஒட்டத்தெரியும். அவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். குழந்தைகளான மகனும் மகளும் அக்கறையுடன் அப்பாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் அப்பா தங்களுக்காக அப்படி சிரமப்படுவதில் உள்ள கவலை தெரிந்தது.

ஆனால் அம்மாவோ அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து, பென்சிலும் கையுமாக குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மகனுக்கும் மகளுக்கும் அம்மாமீது கோபம் வந்தது. அப்பாவும் தன் மனைவியை அதிருப்தியுடன் பார்த்தார். அம்மா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

டயரை மாற்றிய பிறகு பயணம் தொடர்ந்தது. அம்மாவிடம் குழந்தைகள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

‘‘அம்மா, நீங்க ஏன் அப்பா கார் ரிப்பேர் பண்ணும்போது மரத்தடில இருந்து கிராஸ்வேர்ட் போட்டீங்க. அப்பா பக்கத்துல வந்து நின்னுருக்கலாம்ல!’’

‘‘அம்மாவுக்கு எப்படி கார் டயரை மாத்துறதுன்னு தெரியாதே!’’

‘‘எங்களுக்கு மட்டும் தெரியுமா அம்மா? இருந்தாலும் நமக்காக அப்பா கார் ரிப்பேர் பண்ணும்போது ஒரு பண்புக்காக ‘என்ன பண்றீங்க’ அப்படின்னு கேட்டிருக்கலாமே?’’

‘‘ஆமா, அப்படி ஒரு பண்பு இருக்கு இல்ல!’’

‘‘என்னம்மா, எங்களுக்கு பண்பு சொல்லித் தந்ததே நீங்கதான். ஆனா நீங்களே இப்படி பண்பில்லாம நடத்துக்கிறீங்களே?’’

‘‘சரி, அம்மா ஒரு கேள்வி கேட்கிறேன். நான் ஆபீஸ் வேலைக்கும் போயிட்டு வீட்ல வந்து சமைக்கும்போதும், துணி துவைக்கும்போதும், பாத்திரம் கழுவும்போதும், வீடு துடைக்கும்போதும் நீங்களும் அப்பாவும் அதே பண்போட என் பக்கத்துல வந்து நின்னுருக்கீங்களா?’’

‘‘எங்களுக்கு அந்த வேலை தெரியாதும்மா!’’

‘‘அது மாதிரிதான் எனக்கும் டயர் மாத்துறது தெரியாது. நான் போய் மரத்தடில உக்காந்துக்கிட்டேன்.’’

இப்போதுதான் அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும், எப்படி அம்மாவின் மனதை கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தது.

அம்மா தொடர்ந்தார். ‘‘இன்னைக்கு நாம வெளிய கிளம்பினது காலைல ஏழு மணிக்கு. நான் காலையில் மூன்று மணிக்கு எழுந்தேன்.

உங்கப்பாவுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. காலை டிபன், மதியம் சாப்பாடு, நடுவில் தின்பதற்கு பணியாரம், சுழியன் எல்லாம் செய்தேன். அப்போது நீங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டும், டி.வி பார்த்துக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டும்தானே இருந்தீர்கள். அப்போது நான் ஏதாவது கேட்டேனா?

இப்போது உங்கள் அப்பாவுக்காக இரக்கப்பட்டு என்னிடம் கேள்வி கேட்டது மாதிரி, எனக்காக இரக்கப்பட்டு உங்கப்பாவிடம் கேள்வி கேட்டீர்களா? அல்லது நீங்கள்தான் உதவி செய்தீர்களா?’’

இதைக் கேட்டதும் மூவருக்கும் கண்ணில் நீர் பெருகியது. தங்கள் தவறை உணர்ந்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர்.

அம்மா மனம் நிறைந்து, தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல், ‘‘இந்தாங்க தேங்காய்ப்பால் முறுக்கு, சாப்பிடுங்க’’ என்று கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்தார்.

நான் ரசித்த கதை

Friday 15 November 2019

அனுபவி

முழுமையாக அனுபவி - ஓஷோ 


உனக்கு வசிக்க ஒரு மாளிகை கிடைத்ததா...???

அனுபவி....

கிடைக்கவில்லையா...???

ஒரு குடிசையாக இருந்தாலும் ஆனந்தமாயிரு.அந்த குடிசையே மாட மாளிகையாகி விடும்.

வேறுபாடு என்பது அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது.

ஒரு மரத்தடியில் இருக்க நேர்ந்தாலும் அங்கேயும் ஆனந்தமாய் இரு.சூரிய ஒளி, காற்று, தென்றல், வண்ணமலர்கள், அந்த மரம், வானம் அனைத்தையும் அனுபவிக்க தவறிவிடாதே.

மாட மாளிகையில் இருந்தால் அந்த மாளிகையில் இருக்கும் பொருள்களை ரசி.சரவிளக்கையும், சலவைக்கல் தரையையும் கண்டுகளிக்க தவறாதே.

நீ எங்கே இருந்தாலும் அங்கங்கே அதை நீ அனுபவி.எதையும் உடமையாக்கி கொள்ளாதே.எதுவும் நமக்கு சொந்தமில்லை.வெறும் கையேடு இவ்வுலகத்திற்கு வந்தோம்.வெறும்கையோடு இந்த உலகை விட்டு போகப்போகிறோம்.இந்த உலகம் உனக்கு அளிக்கப்பட நன்கொடை.அது இருக்கும் பொழுதே அனுபவித்து விடு.இந்த பிரபஞ்சம் உனக்கு தேவையானவற்றை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை நினைவில் வை.

தன்னைப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகள் எப்போதுமே தேவையில்லை.காரணம் விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான் .

 ஓஷோ

Sunday 10 November 2019

எண்ணங்களோடு பந்தப்படாதே

🍃எண்ணங்களோடு பந்தப்படாதே!🍃

எண்ணங்களுடன் பந்தப்பட்டுப் போகாதீர்கள். நீங்கள் அவற்றிலிருந்து விலகி நிற்கும்போது அவை உயிரற்று பலமிழந்து போய்விடுகின்றன. அவற்றுக்குச் சக்தி கிடைப்பதில்லை.

விளக்கின் சுடரை அனைத்துவிட ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அதற்குப் பதில் விளக்குக்கு மேலும் எண்ணெய் வார்க்கிறீர்கள்.  

அதுதான் பிரச்சனை.

ஒரு கையால் விளக்கின் சுடரை அணைக்க முயன்று கொண்டே மறுகையால் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றவும் செய்கிறீர்கள்.

முதலில்
எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள்.
விளக்கில் மீதமிருக்கும் எண்ணெய் விரைவில் தீர்ந்துவிடும். பிறகு விளக்கு தானே அணைந்து போய்விடும்.

விளக்கிற்கு எது எண்ணெயாக இருக்கிறது? ஏதாவது ஒரு எண்ணம் உங்களை ஆக்கிரமிக்கும் போது நீங்கள் 
அதனுடன் கலந்து விடுகிறீர்கள்.

❤கோபம் வந்தால் நீங்கள் அதுவாகவே  மாறிவிடுகிறீர்கள். அப்போது உங்கள் சக்தி அதனிடம் சென்று சேர்ந்துவிடுகிறது. கோபம் உங்கள் எஜமானனாக மாறிவிடுகிறது. நீங்கள் அதன் நிழல் பிம்பமாகிவிடுகிறீர்கள்.

கோபம் வரும்போது விலகி நின்று கவனித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் இப்படிச் செய்வது கடினமான காரியமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியிருக்கும்.  படிப்படியாக நாளடைவில் அது பழக்கத்திற்கு வந்துவிடும்.  

உங்கள் எண்ணங்களுக்கும் உங்களுக்கும் சற்று இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எவ்வளவு அதிகமான தூரத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் எஜமானத்துவம் ஸ்தாபிதப்படத் தொடங்கும்.

பசியாக இருக்கும்போது "எனக்குப் பசிக்கிறது" என்று சொல்லாதீர்கள். 
"உடம்பு பசியுடன் இருப்பதைக் காண்கிறேன்" என்று சொல்லுங்கள். 

உண்மையில் அதுதான் நிஜம்.

உடலுக்குப் பசியெடுக்கிறது.
நீங்கள் அதை பார்க்கும் பார்வையாளராக இருக்கிறீர்கள்.
உயிருக்குப் பசி இருக்காது.
சாப்பிடும் உணவு உடலையே சென்று சேர்கிறது. தசையும், ரத்தமும் வேண்டும் என்று உடல்தான் விரும்புகிறது.

உடல்தான் சோர்வடைகிறது. உயிர் தளர்ந்து போவதில்லை. உயிர் எண்ணெய் இல்லாது எரியும் விளக்கு போன்றது. உணவோ எண்ணெயோ அதற்குத் தேவையில்லை. உடலுக்கு உணவும், நீரும் தேவைப்படுகிறது. அதுவே அதன் எரிபொருளாகும்.

உடல் இயந்திர இயக்கம் போன்று செயல்படுகிறது. உயிருக்கு அந்த இயக்கம் கிடையாது. பசியோடு இருக்கும்போது உடலுக்கு உணவளியுங்கள். உடல் பசியுடன் இருக்கிறது. 

அதை நீங்கள் தள்ளி நின்று பார்க்கிறீர்கள்  என்பதை மட்டும் நினைவில் வையுங்கள். அதன் தாகத்துக்குத் தண்ணீர் கொடுங்கள். 
அப்படித் தருவது அவசியமாகும்.
இயந்திரத்திற்கும் அதை நீங்கள் கொடுக்கிறீர்கள்.

உடல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். உடல் இயந்திர இயக்கம் போன்றது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பயன் அளவற்றது.

உடல் ஏணிபோன்றது. 
அது உங்களைத் துயரம் நோக்கி அழைத்துச் செல்கிறது. அதுவே பேரின்ப நிலை நோக்கியும் கூட்டிச் செல்கிறது.

அதன் ஒரு முனை தரையையும் மறுமுனை வானத்தையும் தொட்டுக் கொண்டிருப்பது அதன் ஸ்பெஷாலிடி!

அந்த ஏணியைப் பயன்படுத்தி நீங்கள் கீழேயும் வரலாம், மேலேயும் உயரலாம்.  உடல் என்ற ஊடகத்தின் துணையுடன் நீங்கள் நரகத்தில் விழலாம், சொர்க்கத்துக்கும் போகலாம்.  

உடலின் உதவி பெற்று நீங்கள் நித்திய விடுதலை பெறவும் முடியும்.

                            🍃ஓஷோ🍃

தானம்

#நீங்கள்_இறந்த_பிறகும்_வாழ_வேண்டுமா...?

நீங்கள் இறந்த பிறகும் வாழ நினைத்தால் தானம் செய்யுங்கள ஆனால் தானம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பின் தானம் செய்யுங்கள். 

தானம் என்றாலே இரத்த தானம், உடல் உறுப்பு தானம், அன்னதானம் அவற்றை மட்டுமே நினைக்கிறோம். இவைகள் மட்டும்தான் தானமா என்றால் இல்லை என்பதுவே உண்மை.

அப்படியெனில் உண்மையில் தானம் என்பது என்ன?

"உங்களிடம் இருக்கும் ஒன்றை பிறருக்கு கொடுக்கும் ஒவ்வொன்றும் தானம் தான்". 

உதாரணமாக,

ஒரு குழந்தை பிறந்து பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தானம் செய்கிறது. குழந்தை வளரும் பொழுது படிப்பதன் மூலமாகவும், விளையாடுவதன் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெருமையை தானம் செய்கிறது.

ஒருவருக்குத் தேவைப்படும் நேரத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் செய்யும் சிறிய உதவியும் ஒருவகை தானம். நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர் என அவர்களிடம் நீங்கள் செலவு செய்யும் உங்களுடைய அன்பான நேரமும் ஒரு வகை தானம். 

தேவைப்படும் நபருக்கு நீங்கள் கொடுக்கும் உங்களுடைய அறிவும் ஒருவகையில் தானம். 

காற்றைப் நீங்கள் மாசுபடுத்தாமல் இருந்தால் அது நம் பூமியில் வாழும் ஓவ்வொரு மனிதனுக்கும் நீங்கள் செய்யும் தூய காற்று தானம்.

நீங்கள் தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கு மட்டும் சரியாக பயன்படுத்தினால் அது உங்கள் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யும் தண்ணீர் தானம்.

உங்கள் உணவை நீங்கள் வீணாக்காமல் இருந்தாலே அது இன்னொருவரின் பசியைப் போக்கிய தானம் தான். மேலும் அது அன்னதானத்திற்கு இணையான தானம்.

இறந்த பிறகும் வாழ நினைத்தால் தானம் செய்யுங்கள் என்பதன் பொருள் நீங்கள் வாழும் பொழுது எப்படி வாழ்கிறீர்கள் எதையெல்லாம் பிறருக்காக கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது.

"ஒருநாள் செய்வதல்ல தானம். ஒவ்வொரு நாளும் எதேனும் ஒரு நல்லதைச் செய்வதுதான் தானம்".

இந்த நொடியிலிருந்தே தானம் செய்யலாம். 

தானம் செய்ய யாரெல்லாம் தயார்...?

Sunday 3 November 2019

ஆமை

#மூன்று_குரங்குகள்_போலவே_மூன்று_ஆமைகள்...!

மூன்று குரங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தேவையின்றி பார்ப்பது, கேட்பது, பேசுவது தவறு என்பதை உணர்த்தும். அதைப்போலவே மூன்று ஆமைகள் பற்றியும் அவை உணர்த்தும் தத்துவங்கள் பற்றியும் தெரியுமா?

மூன்று குரங்குகளின் தத்துவத்தைப் போலவே மிகவும் வலிமையான மற்றும் மனித வாழ்வை மாற்றப்போகும் மூன்று ஆமைகளின் தத்துவத்தைப் பற்றி இன்று தெரியுமா?

இன்று தெரிந்துகொள்வோமா?

இத்தனை வருடங்களாக மனித வாழ்வில் நடந்துள்ள எந்தவொரு நன்மையோ? தீமையோ? அதற்கான காரணம் இந்த மூன்று ஆமைகள்தான்.

தற்போது நடந்துவரும் அனைத்து நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த மூன்று ஆமைகள்தான்.

அது என்ன மூன்று ஆமைகள்...? 
அது எந்த மாதிரியான மாற்றத்தை 
நம் வாழ்வில் கொடுத்துள்ளது? 

தெரிந்துகொள்வோம் வாருங்கள்...!

பல ஆண்டுகளாக மனித இனம் சந்தித்துவரும் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமே இந்ந மூன்று ஆமைகள்தான்.

ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சரிகளைத் தீர்மாணிப்பது இந்த மூன்று ஆமைகள்தான்.

இதில் என்ன சிறப்பு என்றால்?

ஒவ்வொரு நாளும் இந்த மூன்று ஆமைகளையும் நாம் சந்தித்து வருகிறோம் அதுவும் நம் வாழ்நாள் முழுவதும் என்பதுதான்.

என்னதான் அந்த மூன்று ஆமைகள்?

1. அறியாமை
2. கல்லாமை
3. முயலாமை

#அறியாமை ஏன்? எதற்கு? எப்படி? என்ன? என்பது புரியாமல் பிறர் கூறுவதை, பிறர் பின்பற்றுவதை அப்படியெ பின்பற்றி வாழ்தலே அறியாமை.

#கல்லாமை என்றால் ஏட்டுக் கல்வியை மட்டும் கூறவில்லை. எதையும், எதிலிருந்தும் கற்றுக்கொள்ளாமல் தயக்கத்துடன் வெறுமென வாழ்தலே கல்லாமை. 

#முயலாமை வாழ்நாள் முழுவதும் வேறு எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு வட்டத்திற்குள் மட்டும் முயற்சி செய்துகொண்டு அதற்குள்ளேயே வாழ்வது முயலாமை.

நம்மை நாமே கவனிக்கும் திறன் இருந்தால் இந்த மூன்று ஆமைகளையும் சரியாக வளர்க்கலாம்.

கோயில்

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. 

நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம்.
பூங்காவுக்கு அருகிலேயே, அம்மன் கோயில் ஒன்று பாழடைந்து கிடந்தது. 

விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. 
பாவப்பட்ட குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். 
.
எடக்குமடக்கின் மனைவி, ''பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்'' என்பாள். 

உடனே எடக்கு மடக்கு, ''அந்த அம்மனுக்கு பவரே கிடையாது. பவர் இருந்தால், தன் கோயிலைப் பாழடைய விட்டிருப்பாளா?'' என்று 
விதண்டாவாதம் செய்வார் .
.
ஒருநாள் காலையில்... வழக்கமாக 
பெரிய டம்ளரில் காபி எடுத்து 
வரும் 'எ-ம'-ன் மனைவி, மிகச் சிறிய டம்ளரைக் கொண்டு வந்தாள். 

''ஏன்... ஸ்பூன்ல கொண்டு வர்றது தானே?!'' என்று எரிச்சலானார் எடக்கு.
.
''இது காபி இல்லை; நல்லெண்ணெய். வாய்ல புண்ணுன்னு சொன்னீங்களே... அதான்!
.
நல்லெண்ணெயை அரை மணி நேரம் வாயிலே வெச்சிருந்து, பிறகு கொப்பளிச்சா, வாய் புண் குணமாகும்னு பத்திரிகையில படிச்சேன். 
நீங்க வாக்கிங் போகும் போது வாயில நல்லெண்ணெயை ஊத்திக்குங்க. வீட்டுக்கு வந்ததும் கொப்பளிச்சிடுங்க'' என்று புரோகிராம் போட்டுக் 
கொடுத்தாள் மனைவி.
.
ஆனால், சோதனையாக, எடக்கு வாயில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு தெருவில் இறங்கிய ஐந்தாவது நிமிஷம், அவருடைய ஆபீசர் எதிரே வந்தார். ''அடடே! உன் வீட்டுக்குத்தான் வர்றேன்!'' என்று ஸ்கூட்டரை நிறுத்தினார். 

வேறு வழியில்லாமல், எண்ணெயைத் துப்பிவிட்டு அவரிடம் பேசினார் எடக்கு. வீட்டுக்குப் போனதும், நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
.
அவள் விடுவாளா! 

மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன 
எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். 
''வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதிலிருந்து எடுத்து வாயில் ஊத்திக்குங்க'' என்றாள்.
.
தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு,  ''தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?'' என்று கேட்டாள்.

அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதையெல்லாம் விளக்க விரும்பாமல், 'ஆமாம்' என்று தலையாட்டி வைத்தார் நம்மாள்.
.
மறுநாள்... அந்தப் பெண்மணியின் கையில் ஒரு சொம்பு எண்ணெய். ''தயவுசெஞ்சு இதையும் சேர்த்துக்கங்க'' என்று எண்ணெயை அவரது எவர்சில்வர் தூக்கில் ஊற்றினாள். 

இதே போலவே அடுத்தடுத்த நாட்களில் நிறையப் பேர் காத்திருந்து, எடக்குமடக்கின் தூக்கில் தங்கள் பங்காக கொஞ்சம் எண்ணெயை ஊற்றினார்கள்.
.
கோயிலுக்கு எண்ணெய் ஊற்றுவதை வேண்டாம் என்று சொல்ல மனமின்றி, அவரும் தட்டாமல் வாங்கிக் கோயிலுக்கு அந்த எண்ணெயைக் கொடுத்து வந்தார்.
.
நிறைய எண்ணெய் கிடைத்ததால், தினமும் கோயிலில் ஏராளமாக விளக்கேற்றி வைத்தார் குருக்கள்.
.
அதிகப்படியான எண்ணெயை 
விற்றுப் பிரசாதம் செய்து, வருபவர்களுக்கு விநியோகித்தார்.
.
பூங்கா கோயில் மாலை வேளையில் ஜெகஜ்ஜோதியாகிவிட்டது.

காணிக்கைகள் ஏராளமாக வந்தன.
.
கொஞ்ச நாளில் கோயில் புதுப்பிக்கப்பட்டுப் கும்பாபிஷேகமே நடந்தது.
.
எடக்குமடக்குவிடம் அவர் மனைவி சொன்னாள்...
''அந்த அம்ம னுக்கு பவர் இல்லை;  தன் கோயிலையே அவளால் கட்டிக்க முடியலே'ன்னு சொன்னீங்களே... 
இப்ப பார்த்தீங்களா, உங்களைக் கொண்டே அதை நிறைவேத்திக்கிட்டா!''
.
எதை, எப்படி, எப்போது யாருக்குச் 
செய்ய வேண்டும் என்பதை தெய்வத்துக்கு நாம் சொல்லித்தர வேண்டியதில்லை. 

தனக்கே என்றாலும், தெய்வத்திற்க்கு
 தெரியும்... எதை, எப்போது செய்வது என்று!....!!!!