Saturday, 13 August 2016

உற்சாகமாக இருப்பது

உற்சாகமாக இருப்பது ஒரு கலை.... அது மிக சிலருக்கு இயற்கையாகவே அமைந்துவிடும்....

பாருங்களேன்.... பெரும்பாலும் உற்சாகமாக இருப்பவருக்கு அதிக கஷ்டங்கள் வருவதில்லை..வந்தாலும் அவ்வளவு பாதிப்பு இருப்பதில்லை... கடல்போல் வந்தாலும் பனிபோல் மறைந்துவிடும்.... அவர்களை சுற்றி எப்போதுமே கூட்டம் இருக்கும்...

பிரச்சனைகளை அதிகம் கொண்ட நோய்கள்கூட அதிகம் தாக்குவதில்லை இத்தகையவர்களை....

எப்பொழுதும் உற்சாகமாக வளையவருபவர்களுக்கு உறவுகளும்..சுற்றமும் அதிகரிக்கும் நாளுக்குநாள்...

இதிலிருந்து என்ன தெரிகின்றது..எல்லோரது மனமுமே அந்த உற்சாகத்திற்கு ஏங்குகிறது...
ஆசைகொள்கிறது.... அந்த உற்சாகத்தை அனுபவிக்கின்றது...

தான் இருக்கும் நிலையைவிட அந்த உற்சாக நிலை தன்னை எளிதில் ஆட்கொள்கின்றது....

இயற்கையாக அமைந்தால்தான் என்றில்லை... தனக்கு பிடித்ததுபோல் தன்னை மாற்றிகொள்ளலாமே.... அதில் என்ன தடை இருக்கின்றது....

இந்த மாதிரி விஷயங்களில் தயக்கமும்..கூச்சமும் நமது மிக வலுவான எதிரிகள்..... அவர்களை கழுத்தைபிடித்து அப்புறப்படுத்திவிட
வேண்டும்

ஒருவரை சந்திக்கும்போது...ஹாய் என்ற நமது உற்சாக குரலே அந்த சூழ்நிலை எப்படி இருந்தாலும் கலகலப்பாக்கவல்லது...

அதே சூழ்நிலையை... அழுமூஞ்சியாக்குவதும் நமது கையிலேயே..நடவடிக்கையிலேயேதான் இருக்கின்றது...

பலர்கூடியிருந்தாலும்..மோசமான மந்தநிலை நிலவினாலும்.. ஒரே ஒரு உற்சாகவாதி அங்கே தலைகாட்டினால்போதும்... எல்லா முகங்களும் ஆட்டோமேட்டிக்காக டியூப்லைட் போட்டுக்கொள்ளும்.... புன்னகையும்.. உற்சாகமும்.. சிரிப்புகளும்..கலகல பேச்சுகளும் தீபோல் பற்றிக்கொள்ளும்

இறுக்கம் மாறும்.... வெண்கல கடையில் யானை புகுந்ததுபோல். மிக கலகலப்பாகும்...  இரத்த ஓட்டம் சீராகும்..
சுகர் லெவலை உடனே பார்த்தால் தெரியும் மாற்றமாகியிருக்கும்... மன உளைச்சலும்... அழுத்தமும் சீரடையும்...

சுவாசம் இழுத்துவிடப்படும்.... சாப்பிடவேண்டும்போல் இருக்கும்... உற்சாகத்தோடு அடுத்த வேலையில் ஈடுபடதோன்றும்... நல்ல உறக்கம் இருக்கும்..

மொத்தத்தில் இலவசமாக கிடைக்கும்...
காஸ்ட்லியான ஒன்று
இந்த உற்சாகம்....
பல வகையிலும் பயனளிக்ககூடிய ஒரு சொத்து இந்த உற்சாகம்....

இந்த சொத்தை மட்டும் சேர்த்துவிட்டோமானால் போதும்..
எந்த பிரச்சனையையும் எளிதாக கடந்துவிடுவோம்...

இலவசம்தான் நமக்கு பிடிக்காதே....
அதுவும் நல்ல விஷயங்கள் ஆகவே ஆகாது...
வறட்டு கௌரவம் வேறு... சிரிக்கவே காசுகேட்டால் என்ன செய்வது...

அவ்வப்போது கொஞ்சம் உற்சாகமாக சந்தோஷமாக... ஜாலியாக இருக்கலாமே....

என்ன பிரச்சனை நாமும் சிரிக்கமாட்டோம்... மற்றவன் சிரித்தாலும் பிடிக்காது என்றிருந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது...

கொடுங்கோலாக இருந்து என்னத்த கொண்டுபோகபோறோம்
எல்லாம் தெரிந்த விஷயம்தான்..
ஃபாலோதான் பண்ணுவதில்லை...

இனியாவது யோசிப்போமா.... ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்ன என்று...

Friday, 12 August 2016

அலையின் தொடர்பு*

*அலையின் தொடர்பு*

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

- *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

Wednesday, 10 August 2016

மனதின் தொலைவு

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....பின்னர்.. சீடர்களில் ஒருவர்:= கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்! துறவி:= ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்! நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே! ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்...... ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி பதில் கூறுகிறார்..... எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்! மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்! ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்! துறவி தொடர்ந்து கூறுகிறார்.....இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்! துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்........ அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, ""உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!"" அப்படி செய்யாமல் போனால், ""ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்

Tuesday, 9 August 2016

உண்மையான அறிதல்

"தன்னைத்தானே அறிவது உண்மையான அறிதல் அதன் மூலம் இறைவனை அடைந்து கொள்வான்"

♦ வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும், அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

♦  மனிதன் தன்னை அறியும் படி வைப்பதும் தன்னை அறிய விடாமல் வைப்பதும் மனது தான். எனக்கு எல்லாம் தெரியும், என்னைவிட அறிவாளிகள் யாருமில்லை என்ற ஆணவத்தை உண்டாக்குவதும், கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனது தான்.

♦ தன்னை அறிய வேண்டிய மனிதன் முதன் முதலில் வெல்ல வேண்டிய மிகப் பெரிய எதிரி தன் மனது.

♦இரண்டாவது ஒரு காமிலான ஷெய்கிடம் நாடி பையத் என்னும் முரீத் அந்தஸ்தை அடையவேண்டும்.

​​
♦  மூன்றாவது ஏழு நப்ஸிகளுடன் போராடி யுத்தம் செய்து வெற்றிகொள்ள வேண்டும்.

♦  மனதை நன்றாக அறிந்து கொண்டவன் தான் உலகை வெல்ல முடியும், எதையும் வெல்ல முடியும் என்பது நபிகள் நாயகம் அவர்களின் அமுத வாக்காகும்.

♦  தன்னை அறிந்து கொண்டால் நிச்சயம் அல்லாஹ்வை அறிந்து கொள்வான்.

நான், நீ, அவன் என்ற அகங்காரம், மமதை முதலில் நம்மில் இருந்து நீங்க வேண்டும் எல்லாம் இறைவனுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற நினைவு உள்ளத்தில் பிரகாசிக்க வேண்டும்.

♦ மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே எல்லா அறங்களிலும் அடிப்படையாகும். மனக்குற்றத்தோடு செய்பவை உலகை ஏமாற்றும் ஆரவாரத்தனமே ஆகும். ஆனால் மனது கலங்கப்படாதிருக்குமானால் அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.

♦  ஷெய்க்மார்களின் அருளிய திருமந்திரத்திலே ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை, தன்னை அறியாமல் தானே கெடுகிறான், தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந்தானே!’ ‘தானே தனக்குப் பகைவனும் நண்பனும், தானே தனக்கு மறுமையும், இம்மையும், தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும், தானே தனக்குத் தலைவனும் ஆமே!

♦ "என் வயிற்றை கவனித்து பார்த்தேன்
அது கேட்கும் "பசியை " உணவை கொண்டு சமாதானப்படுத்தி விட்டேன்"
"என் வாலிபத்தை கவனித்து பார்த்தேன்
அதே கேட்கும் "காமத்தை " மனைவி கொண்டு சமாதானப்படுத்திவிட்டேன்"
"என் கண்களை கவனித்து பார்த்தேன்
அது கேட்கும் "காட்சியை" பார்வையை கொண்டு சமாதானப்படுத்திவிட்டேன்"
"என் கல்பை கவனித்து பார்த்தேன்
அது கேட்கும் "அல்லாஹ்வை " ஷெய்கை கொண்டு சரண்டராக்க பார்த்தேன்.. முடியவில்லை. ஏன் !!

​பின்தான் உணர்ந்தேன் வயிற்றோடு உணவை கலந்த நீ பசியில் மீண்டாய், வாலிபத்தோடு மனைவியை கலந்த நீ காமத்தை உண்ர்ந்தாய், கண்களோடு பார்வையை கலந்த நீ காட்சியை அடைந்தாய், அதேபோல் உன் கல்போடு ஷெய்கை நீ கலந்திருந்தால் நீ அல்லாஹ்வை அடைந்திருப்பாய்.

♦ காட்சி தினம் கண்டு
மனிதன் உயர்வதற்கும் அவன் தாழ்வதற்கும் தன்னைத் தானே அறியாமல் இருப்பதே அடிப்படை காரணமாகும். தன்னை அறிந்து அல்லாஹ்வில் அழிந்தவன் நேர்மையான உள்ளம் கொண்டு நேரிய வழியில் செல்கின்றான். நற்பண்புகளையும் உயர்ந்த குணங்களையும் தன்னுல் உண்டாக்கி கொள்கின்றான். நல்ல காரியங்களை விரும்பிச் செய்கின்றான். தன்னை அறியாதவன் தீய உள்ளம் கொண்டவன் நேர் எதிரானவன்.அவனிடம் உயர் குணங்களையும் நற்பண்புளையும் எதிர்பார்க்க முடியாது. நேரிய வழியும் அதன் உயர்வும் அவனுக்கு தெரியாது.

அறிஞர்கள் நற்குணம் பெற்றிருந்தார்கள். திருத்தூதர்கள் அனைவரும் உயர்ந்த பண்புடையவர்களே. அவர்களின் உள்ளங்கள் நீரேடையை விடத் தெளிவானவை. அவற்றில் அழுக்குக்கு இடமில்லை. கறைபடிய மார்க்கமில்லை.

இத்தகைய குணங்களுக்கெள்ளலாம் அண்ணல் நபி அவர்கள் நிலைக்களனாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களை பின்பற்றி நடந்த மேதைகள், சட்ட நிபுணர்கள், உத்தமர்கள் அனைவருமே குணத்தின் குன்றுகளாகத் திகழ்ந்தனர். பன்பின் சிகரங்களாக விளங்கினார்கள்.

ஒரு மனிதனை நற்குணங்கள் மூலம் உயர்த்துவதற்கு முதலில் தன்னைத் தானே அறிந்து இறைவனை அடைந்து கொள்ள முயற்சி செய்து கொள்வோமாக!

மனம் கலங்காதிருக்க..."*

*"மனம் கலங்காதிருக்க..."*

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏🏻

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*

*ஜபமாக இருக்கலாம்...*

*தொழுகையாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

*விடாது நாம ஜபம் செய்வோம்...

*தொடந்து தொழுகை செய்வோம்...*

*திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்..

Monday, 8 August 2016

பண பயம்

பணக்கஷ்டம் தரும் பாடங்கள்
யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை?

பணக்கஷ்டம் தரும் பாடங்கள்
யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை?
எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே! ஏன் நம்மில் பலருக்கு பணப்பற்றாக்குறை உள்ளது? ஆழ்மனச் சக்தி, அஃபர்மேஷன், நேர்மறை சிந்தனை எல்லாம் வேலை செய்யவில்லையா பண விஷயத்தில்?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பணம் இல்லை என்று குறை சொல்பவர்களைக் கொஞ்சம் அலசலாமா?

பண பயம்

“பணம் என்ன மரத்திலயா காய்க்குது!, “ பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படணும்.” “பணம் வந்தா நிம்மதி போயிடும்”, “ நம்ம ராசி சாண் ஏறுனா முழம் சறுக்கும்”, “பண விஷயத்தில யாரையும் நம்ப முடியாது” “அளவுக்கு அதிகமா ஆசைப்படக்கூடாது”, “ஒரு செலவு போனா அடுத்த செலவு கரெக்ட்டா வந்திரும்” “நம்மளுக்கு கை கொடுக்க ஆளில்லை”, “நமக்கு இதுவே ஜாஸ்தி”, “ஒரு ஜாக்பாட் அடிச்சா எல்லாம் சரியாயிடும்” “கடனைக் கடன் வாங்கித்தான் அடைக்க வேண்டியிருக்கு” - இப்படி அதிகமாக அவர்கள் பேசும் எண்ணங்கள் என்ன என்று கூர்ந்து நோக்குங்கள். காரணம் புரியும்.

பணம் சம்பாதிக்கும் லட்சியத்தை விடப் பணம் பற்றிய பயமும் பேராசையும்தான் தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.

தடால் தீர்வு

பணச்சிக்கலில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தப் பணத்தேவையையும் ஏதாவது ஒன்றைத் தடாலெனச் செய்து தீர்க்க நினைப்பார்கள். பணம் தேவையா? எங்காவது கடன் வாங்கு அல்லது அடகு வை அல்லது எதையாவது விற்று ஏற்பாடு பண்ணு. எதையாவது செய்து பணம் புரட்டு. இந்த அவசரமும், எதையும் அலசி ஆராயாமல் எடுக்கும் முடிவுக்குக் காரணமான எண்ணம்: “இதை இப்போது சமாளிக்கலாம். பிறகு வருவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!” என்பதுதான்.

இந்த எண்ணமும் செயலும் காலம் காலமாய்த் தொடரும். பிறகு இது வாழ்க்கை முறை ஆகும்.

ஒரு நண்பர் சொன்னார்: “எனக்கு வர வேண்டிய கடன் தொகை 16 லட்சம். கொடுக்க வேண்டிய கடன் 12 லட்சம் தான். ஆனால் வர வேண்டியது நேரத்துல வராததால் சொத்தை வச்சு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கிறேன்..” ரொட்டேஷன் என்பது தமிழ்ச்சொல் போலவே ஆகிவிட்டது. இது நாயர் பிடித்த புலி வால் கதைதான். முதலில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு புது ஆளிடம் கடன் வாங்குவது. எந்தக் காலத்திலும் செலவும் குறையாது. கடனும் முடியாது. கடனால் மூழ்கிய குடும்பங்கள் பல எனக்குத் தெரியும்.

பணக் கண்ணோட்டம்

வரவுக்கும் மேலே செலவு செய்வது, தெரியாத தொழிலில் முதலீடு செய்வது, பணம் இல்லை என்பதற்காக எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ளாதது, எப்படியாவது கடன் வாங்கலாம் என்ற துணிச்சல், தவறான பொருளாதார முடிவுகள் எடுப்பது, பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது என்று ஏராளமான தவறான முடிவுகளுக்குக் காரணம் பணம் பற்றிய பிசகான எண்ணங்களே. பண ஆசை இருந்தும் பணம் பற்றிய பிழையான எண்ணங்கள் தவறான முடிவுகளையே எடுக்க வைக்கும்.

உலகின் பணம் கொழிக்கும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் சரி, மார்வாடிகளாக இருந்தாலும் சரி, செட்டியார்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் பற்றிய சில அடிப்படையான கண்ணோட்டங்கள் உண்டு.

வேலை,தொழில் தரும் பணம்

சிக்கனம் முக்கியம். சின்ன வரவு செலவுக்கும் கணக்கு வேண்டும். உறவு என்றாலும் பண விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். வீணான பகட்டுச் செலவை விடக் கையிருப்பு சொத்தே சமூக மதிப்பு. எல்லா வயதிலும் உழைக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும். உத்தரவாதம் தராத தொழில்களில் முதலீடுகள் கூடாது. எல்லாவற்றையும் விட “பணம் சம்பாதிப்பது மிக முக்கியம். அதைத் திறன்படச் செய்வது தான் உயர்வுக்கு வழி” என்பதை உணர்ந்தவர்கள்.

மீட்டர் வட்டி, சீட்டுக்கம்பெனி மோசடி என அனைத்துப் பொருளாதார மோசடிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். “எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும்” எனும் எண்ணம் தான் அவர்களைப் புதைகுழியில் தள்ளுகிறது.

நல்ல வேலையில், நல்ல தொழிலில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் பணத்தை எண்ணுவதை விட அதன் காரணமான வேலையையும் தொழிலையும் பற்றி அதிகம் எண்ணுவர். தொழில் மேம்படும்போது செல்வம் கொழிக்கும்.

பற்றாக்குறை மனநிலை

பிடித்ததை நம்பிக்கையுடன் செய்யும்போதும் பணம் வரும். இதுதான் உண்மை. பணம் பற்றிய பயம் இல்லாதபோது பணம் வரும். பணம் பற்றிய எண்ணத்துடன் கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை உள்ளபோது செல்வம் சேராது.

பற்றாக்குறை மன நிலையில் பணத்துக்காகப் போராடுகையில் பணம் என்றும் பற்றாக்குறையாகவே இருக்கும்.

பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருங்கள். லக்ஷ்மி வரும் போது வரவேற்பது போல, போகும்போதும் வாழ்த்தி, நன்றி சொல்லி, மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தியுங்கள்.

பணம் தரும் பாடங்கள்

“எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.

பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.

பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு சில பாடங்களை உங்களுக்கு வழங்க முயல்கிறது. அந்த பாடங்களை நீங்கள் கற்கும் வரை அவை உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்