Tuesday, 11 June 2019

மூன்றாம் பிறை

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக *'சந்திர தரிசனம்'* என்று குறிப்பிட்டுள்ளது.

*மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்களே ஏன் ?

சிவகுடும்ப ஓவியத்தின் விளக்கம்..

*சிவன் என்பது சூரிய கலை (பிங்கலை)*

*பார்வதி என்பது சந்திர கலை (இடங்கலை)*

*விநாயகர் என்பது மூல அக்னி (சுழுமுனை)*

இம்மூன்று நாடியும் ஒன்று சேர்ந்த அமைப்பைக் கொண்ட மனித தேகம் என்னும் உடற்கூற்று தத்துவத்தை உணர்த்துவதே சிவ குடும்பமாகும்..............!🌞🔥🌝

*மூன்றாம் பிறை தரிசனம்* !!
*******************************

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.  சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

*மூன்றாம்பிறை பிறந்த கதை :*
*************************

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.

*மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :*
*************************

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்க ளை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

*அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:*
******************************************************

மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதென்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொண்டுள்ளன. அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வ ங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

*பிறை பார்ப்பதன் புண்ணியம்*
***********************************

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.

மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர்
     *திங்கள் ஆயிரம் தொழுதாள்* என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!

*பிறை பார்க்கும் பயன்*
**************************

*மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால்* மூர்க்கனும் அறிவு பெறுவான்.

*ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால்* ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

*ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால்* திருமணம் தடையின்றி நடக்கும்.

*ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால்* ஏற்பட்ட கடன் தீரும்.

*பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால்* பாரில் புகழ் ஓங்கும்.

*வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.*

*நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்  ( முத்திப்பேறு )*

*மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்.* தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

*அதற்கான முறைகளையும் காண்க:*
***************************************

ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதில் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்,அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள், பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள், தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, தர்ம பலம் . மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது .

ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்,வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு. தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும், இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி.

மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், குறிப்பாக சந்தோஷ மன நிலையில் பிறையை காண வேண்டும், என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்,அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்,இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும், திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும், சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும், எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள் அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .

Friday, 7 June 2019

கவலை

*👉ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.*

*👉தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.*

*👉இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது,* *குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.*

*👉குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.*

*👉இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.*
*"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”.*
*👉அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும்.* *அதனால் தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து* *வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.* *அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”.*

*👉இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.*

*🙏நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!*

Sunday, 2 June 2019

தியானம்

தியானம் கற்றுத் தர ஆரம்பித்தார் <3

மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, இன்னமும் தியானம் கற்று தரவில்லையே என்று கேட்டான் சீடன். ஜென்குரு, இன்றில் இருந்து உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார்.

அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட அனால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும். நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான்.

குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.

தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான்.

மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.

பின் குரு, நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ புறப்படலாம். என்றார்.

நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த குருவை அடிக்க வேண்டும். என்று தோன்றியது. இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம்.என எண்ணினான்.

அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை. இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல அதிலும் நான் உன் குரு.. என்றார்.

இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.

குரு, ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். அப்போது நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார்.

நிம்மதி

நிம்மதியே இல்லை! முல்லா கதை

ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.

முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.

தங்கள் கவலைக்குக் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று வினவினார். அந்த மனிதன் முல்லாவை நோக்கி, ”நண்பரே! நீர் நினைப்பது போல, நான் வசதிகள் நிறைந்த ஒரு செல்வக்குடிமகன்தான். எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் நிறைய உண்டு. இவ்வளவு சுகபோக வசதிகள் இருந்தும் என்னால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

”எனக்கு இருக்கும் செல்வங்களை யாராவது வஞ்சனை செய்து பறித்துக் கொள்வரோ என்று எனக்கு எப்போதும் பெருங்கவலையாக இருக்கிறது.

இப்போது கூட இதோ என் கையிலிருக்கும் பைக்குள் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் வீடு போய் சேர்வதற்குள் இந்த பணப்பைக்கு யாரால் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது,” என்று கூறினார்.

முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன செல்வந்தன், ‘

‘ஐயோ என் பணம் போய்விட்டதே… என் பணம் போய்விட்டதே!” என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.

முல்லா எங்கெங்கோ ஓடி ஆட்டம் காண்பித்த பின்னர், செல்வந்த முதலில் சந்தித்த மரத்தடிக்கே வந்து சேர்ந்தார்.

பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்

தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.’பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன்.

கடவுள் அருளால் என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் செல்வந்தன்.புதருக்குப் பின்னால் இருந்து வெளிவந்த முல்லா செல்வனை நோக்கி, ”செல்வக் குடிமகனாரே! வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?”கொஞ்ச நேரமாவது நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றுதான் பணப்பையை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

பறிபோய்விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த பணப்பை திரும்பக் கிடைத்ததும் கொஞ்ச நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அல்லவா? அது உங்களுக்கு ஒரு லாபம் தானே!” என்று கூறினார்.

அதைக்கேட்ட செல்வன், ”நீ கூறியது உண்மைதான். நீர்

சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,” என்று கூறினான்.

பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.

‘அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?” என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.

”அது மிகவும் சாதாரண விஷயம்தான்.

மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோசற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம்!”முல்லா கூறியது ஒரு மகத்தான உண்மை என்ற உணர்வு செல்வந்தனுக்கு ஏற்பட அதை பற்றி அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.