Thursday, 31 December 2020

கவலைப்படாதே

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)

.     பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்...
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்...அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்... நன்றி.

Monday, 28 December 2020

நீயா நானா



ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம்னு நினைத்தார். ஆனால் ராத்திரி நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"

"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"

பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள் சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.

மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..

ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..

இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப்படாத கடிகாரத்தை போல் நாமும் நன்கு பழகியவர்களிடம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாக்கி கொள்கிறோம்.

நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்கின்றன.

ஒன்று ஒருவர் சொல்லும் காரணம்

இன்னொன்று இன்னொருவர் சொல்லும் காரணம்

மூன்று உண்மையான காரணம்

இந்த உண்மையான காரணம் என்ன என்று இருவரும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வர என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் அதற்கு என்ன தீர்வு என்று எளிதில் கண்டு பிடிக்க முடியும்.. இல்லையென்றால் நமக்குள் இருக்கும் Ego வை போகச் சொன்னாலே போதும்... 

உண்மையாக உள்ள நிலையினை அறியாமல்... தடுமாறும் கற்பனைகளில் மூழ்காமல்... வெளிப்படையான மன பரிமாற்றங்களால் நமது வாழ்வை மேலும் மேலும் இனிமையாக முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 

எந்த சூழலிலும் 
நீயா-நானா என்பது "விஷம்" 
நாம் என்பதே "நலம்" 
என்பதை முழுமையாக உணருங்கள். 

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Sunday, 29 November 2020

நேரம் நமக்கு



*அழகான நேரங்கள்..!!*

உங்கள் வாழ்க்கை வளமாக உங்களுக்காக சில நிமிடங்களை நீங்கள் செலவிட்டே ஆகவேண்டும்.

எனக்கு நேரமில்லை. என்னால் நேரத்தை ஒதுக்க முடியாது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.

ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரங்களில் நமக்கான நேரம் இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். 

நம்மை நாம் செதுக்கி கொள்ளவும் நம்மை நாம் யாரென்று உணரவும் நமது எண்ணங்களை செயல்பாடுகளாக மாற்றவும்.

அந்த செயல்பாடுகளில் வெற்றி பெறவும் நமக்கான கால நேரம் மிகமிக அவசியம்.

ஒரு நாளின் துவக்கத்தை மிக  அழகாக மாற்றும் சக்தி உங்கள் ஒருவருக்கே உண்டு என்பதனை மறந்து விடாதீர்கள்.

அதிகாலையில் எழுந்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

இந்த வழக்கம் உங்களை மிக  உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இது வெற்றியாளர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை.

அதிகாலை துயில்  எழுந்து விட்டால் மட்டும் போதாது.

உங்களையும் உங்கள் சிந்தனைகளையும் லட்சியங்களையும் உங்களுக்காக  உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற மாற்றிக்கொள்ளுங்கள்.

யாருக்காகவும் நீங்கள் மாறவேண்டாம்.

அது உங்கள் சுயத்தினை தொலைத்து விடும். உங்கள் கொள்கைகளை மாற்றுங்கள். உங்கள் நடவடிக்கைகளை மாற்றுங்கள். உங்கள் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுங்கள். உங்கள் பேச்சை குறைத்து செயலில் வேகத்தையும் உறுதியையும் கூட்டுங்கள்.

உங்களுக்காக நீங்கள்  ஒதுக்கிய நேரத்தில் உங்கள் வாழ்கையை மாற்றி அமைக்கும் காரணிகளை பற்றி ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். 

இன்னும் சில  வருடங்களில் நீங்கள்  என்னவாக வேண்டும் என்பதனை எழுதுங்கள். 

நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்களையும் சந்திக்க வேண்டிய நபர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் அடைய வேண்டிய  இலக்குகளையும் தினம்தோறும் எழுதுங்கள்.

இப்படி செய்து கொண்டு வாருங்கள் மிகமிக விரைவில் நீங்கள் அடைய வேண்டிய அனைத்தையும் அடைவீர்கள்.

*இது முற்றிலும் உண்மை...!*

*ஆனந்தமான வாழ்வுக்கு ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்....*

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Monday, 2 November 2020

பாடம்

● ஒரு குட்டி நீதிக்கதை.....

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார. விறகு வெட்டுவார். அதை கொண்டு போய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது.

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. 

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்...

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்....

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார், ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...
மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்தியா போய்ட்டது...

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்.

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்...

ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...
தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா?, நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும், மழைலயும் கஷ்டபடனும் ..?...
எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார்..... அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை...

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார்.

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்..

" கடவுள் நம்மை காப்பாத்துவார் ... அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,
கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார்.

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு..

சாப்பாடு வந்த பாடில்லே.. !
இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா இளைச்சு போய்டுச்சு எலும்பும், தோலுமா ஆயிட்டார் .

ஒரு நாள் ராத்திரி நேரம், கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...

"ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?" ன்னாரு

🙏இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....

முட்டாளே!... நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ....அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....

🙏நாம் யாரிடம் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

🙏விடா முயற்சியுடன் கூடிய உழைப்பின் பலனிலும், உயர்விலும் கடவுளின் வழிகாட்டுதல் உள்ளது.

Sunday, 18 October 2020

ஞானம்

🍁ஓஷோ ஞானக் கதைகள்🍁 

🌸 நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன்... 

புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.

🌸 புத்தர் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்...

யாரோ வேட்டையாடுபவர்களின் அம்பானது அவனது உடலில் பாய்ந்திருந்தது.

அவன் உயிருக்குப் போராடுகிறான். 

அவன் ஒரு தத்துவவாதி. 

🌸 புத்தர் அவனிடம்,

"இந்த அம்பை உனது உடலில் இருந்து எடுத்துவிட முடியும்.

அதை எடுப்பதற்கு என்னை அனுமதி" என்று கேட்டார்...

அந்த மனிதன்,

"கூடாது, தயவுசெய்து இதற்குக் காரணம் யார் என்று முதலில் எனக்கு தயவு செய்து கூறுங்கள்? 

🌸 எனது விரோதி யார்? 
இந்த அம்பு ஏன் எனது உடலைத் துளைத்தது? 
என்ன கர்மத்தின் பலன் இது? 

இந்த அம்பில் விஷம் தடவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கூறுங்கள்"என்று கேட்டான்.

🌸 அதைக்கேட்ட புத்தர்,

"விசாரணையை, 
நீ பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்த அம்பை வெளியே எடுக்க விடு.

ஏனெனில், நீ இப்போது சாவின் விளிம்பில் இருக்கிறாய். 

🌸 முதலில் 
இந்த விசாரணைகள் எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் 

இந்த அம்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என்றால்,

நீ உயிர்பிழைக்கப் போவதில்லை." என்று 
பதில் கூறினார்.

🌸 இந்தக் கதையை புத்தர் நிறைய தடவை கூறியுள்ளார். 

இதன் மூலம் அவர் கூறுவது என்ன?

"நாம் அனைவரும் சாவின் விளிம்பில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம்." 

மரணத்தின் அம்பு உன்னை ஏற்கனவே துளைத்து விட்டது.

 நீ அதை அறிந்திருக்கலாம். அல்லது அறியாமல் இருக்கலாம். 

🌸 மரணத்தின் அம்பு ஏற்கனவே உன்னுள் 
ஊடுருவி விட்டது.

அம்பு கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கஷ்டம் இருக்கும். 
நீ படும் துன்பம்,

"மரணத்தின் அம்பு 
உனக்குள் ஊடுருவிச் சென்று விட்டதாகக் காட்டுகிறது."

🌸 எனவே, 

"இந்த உலகைப் படைத்தது யார்? 

ஏன் படைத்தான்? 

நான் ஏன் படைக்கப்பட்டேன்? 

எனக்குப் பல பிறவிகள் உண்டா? அல்லது 
ஒரு பிறவிதானா?

நான் இறந்த பிறகு உயிரோடு இருப்பேனா அல்லது இல்லையா?" 

என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்காதே.

🌸 அதனால்தான் புத்தர், 

"பிறகு விசாரணை செய்து கொள். 

முதலில் துன்பம் என்னும் இந்த அம்பு வெளியே எடுக்கப்படட்டும்"
என்று கூறுகிறார்.

🌸 மேலும் புத்தர் சிரித்துக் கொண்டே, 

" துன்பம் என்னும்,
இந்த அம்பு வெளியே எடுக்கப்பட்ட பிறகு,

இதைப் போன்று விசாரணை செய்கின்ற யாரையும்,

நான் ஒருபோதும் கண்டதில்லை." 
என்று கூறினார்.

🌿ஓஷோ🌿

Sunday, 9 August 2020

தவறுகள்



*💗இன்றைய சிந்தனை...*

*தவறுகளை பூதக்கண்ணாடி வைத்து பார்க்காதீர்கள்..!!*

மன்னிப்பு வழங்குதல் ஓர் ஆன்மிகச் சுத்திகரிப்பு என்று தான் துறவிகள் நம்பினார்கள். தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப, இதை அவர்கள் கையாண்டார்கள். பிறகு, அதன் சுகமளிக்கும் பலனைக் கண்டு உளவியல் சிகிச்சையில் இதைப் பெரிய அளவுக்குப் பயன் படுத்த தொடங்கினார்கள். தற்போது மருத்துவ சிகிச்சையில் மன்னிப்பு வழங்குதலின் பலன்கள் ஆராயப்படுகின்றன. மன்னிப்பு வழங்கும் போது, உடல் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுகிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது; புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களில் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் விரைவில் குணமடைகிறார்கள்.

*மன்னிக்கும் டயரி..*

மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதி வெளியேற்றுவது மிகச் சக்தி வாய்ந்த சிகிச்சை முறை. ஒரு நாளில் யார் யார் மீது கோபமும் பகையும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்டீர்களோ, அவர்கள் ஒவ்வொருவரையும் மனதார அழைத்து மன்னிப்புக் கோரி அவர்களை விடுவியுங்கள். நடந்தவற்றை தர்க்கரீதியாகப் பார்த்தால், உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். மன்னிப்பு கேட்பதே தவறு என்று கூடத் தோன்றலாம். ஆனால், மன்னிப்பு வழங்குதல் மட்டுமே உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று உணரும் போது, அதை இயல்பாகச் செய்வீர்கள்.

*அன்பும் - கோபமும்..*

யாரிடமெல்லாம் உங்களுக்குத் தினசரி கோபம் வருகிறது என்று பட்டியல் இட்டுப் பார்த்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். நீங்கள் அதிகம் அன்பு செலுத்துவோர் மீது தான் நிராசைகளும், ஏமாற்றங்களும், கோபங்களும் அதிகம் இருக்கும். குறிப்பாகச் சொன்னால், நீங்கள் யாரிடம் அதிக நன்மை பெறுகிறீர்களோ, அவர்கள் மேல் தான் அதிக ஏமாற்றங்கள் இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், நமக்கு உதவும் உறவுகள் என்று யாரெல்லாம் நமக்கு அதிகம் செய்கிறார்களோ, அவர்கள் மேல் தான் எல்லா வருத்தங்களும் இருக்கும். அதிகம் பெறாத உறவுகளில் எதிர்பார்ப்புகளும் குறைவு; ஏமாற்றங்களும் குறைவு.

உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை; எதுவும் செய்யவில்லை என்றால் அது பெரும் துயராக இருந்தாலும், அதை விரைவில் மனம் ஏற்றுக் கொள்ளும். நாளடைவில் பெரிதாக எதையும் எதிர்பார்க்காது. ஆனால் தந்தைக்கும் சேர்த்துப் பங்களிக்கும் தாயின் மேல் அன்பும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அம்மா செய்யும் தவறுகள் பெரிதாகத் தெரியும். இது ஒவ்வோர் உறவுக்கும் பொருந்தும். உங்கள் மீது அன்பு செலுத்தும் காதலர் அல்லது வாழ்க்கைத் துணையின் சிறு குறைகள் பூதாகரமாகத் தெரியும். உங்களை மதிக்காத, அன்பு செலுத்தாத பலரை மிக இயல்பாக நடத்துவீர்கள். அடிப்படை இது தான், செய்யச் செய்ய எதிர்பார்ப்புகள் ஏறும். ஏமாற்றங்கள் எகிறும். செய்ததைப் பார்க்காத மனம், செய்யாததைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும்.

ஒரு படத்தில் நடிகர் சூரி சொல்லும் வசனம் இதை அழகாக உணர்த்தும்: “செய்யாதவனை விட்டுருவீங்க. செஞ்சவனைத்தான் வச்சு செய்வீங்க!” மனதின் இயல்பு இது. இல்லாததைத் தேடி ஓடுவது. ஏமாற்றம் கொள்வது; அஞ்சுவது; சீறுவது. இதை சற்று உற்று நோக்கினால் நம் மனம் நம் வாழ்க்கைக்கு எதிராகச் செய்யும் உள்ளடி வேலைகள் புரியும்.

*பலிகடா உறவுகள்..*

இரு தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.

“பிறந்த நாளுக்கு ஒண்ணும் தரலை. வெறுங்கையை வீசிட்டு வந்து நின்னார். அதுலேர்ந்து தான் பேசறதை நிறுத்திட்டேன். அவ்வளவு சாதாரணமாப் போயிட்டோமா என்ன?”

“அடியே... உம் புருஷன் பரவாயில்லை. எங்காளு நான் சம்பாதிச்ச காசு நூறு ரூபா இருந்தாலும் எடுத்துட்டு குடிக்க கிளம்பிடுவாரு. உனக்கு இன்சூரன்ஸ் இருக்கு. எனக்கு ஏதாவது வந்தா எந்த நாதியும் கிடையாது.”

“அவரு முதல்லேர்ந்து அப்படிடீ. இவருக்கென்ன கேடு? போன வருஷம் அவங்க அக்கா பொண்ணுக்கு மட்டும் போயி கரெக்டா சீர் பண்ண தெரியுதுல்ல? அப்ப நான்னா என்ன வேணா பண்ணலாம்... கேக்க மாட்டான்னுதானே எண்ணம்?”

இதற்கு முன்னும் பின்னும் என்ன நடந்திருக்கும் என நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். வரங்களை மறக்கும்; சாபங்களைத் தினம் தேடித்தேடி கற்பனை செய்துகொள்ளும். இந்த மன விளையாட்டின் பலிகடாக்கள் நம் நெருங்கிய உறவுகள். ஏமாற்றமும் கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர் போவோரிடமெல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும்.

முகம் தெரியாத ஆட்கள் முதல் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவுகள் வரை யார் மீது வருத்தமும் கோபமும் கொண்டாலும், அவை தங்கிப் போகும் பாத்திரம் உங்கள் உடல் தான். அத்தனை உஷ்ணத்தையும் அழுக்கையும் காலகாலமாக சேர்த்து வைத்தால் அந்தப் பாத்திரம் என்னாகும்? அதைத் தினசரி துலக்குதல் நன்று. தவறு யார் மீது இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம்.

*வெப்பத்தைத் தணியுங்கள்..*

இப்படி அழுக்கும் உஷ்ணமும் நாளும் சேராமல் இருந்தால், நாள் தோறும் மன்னிப்பு கேட்டு கழுவி வைக்க வேண்டிய அவசியமே இருக்காதே என்று தோன்றுகிறதா? அதுவும் சாத்தியம் தான். மனம் கோபம் கொள்ளும் போதே, அதை உணர்ந்து மன்னிப்பு கோரி வெளியேற்றிவிடுவது.

“நீ சொல்வதைக் கேட்டால் எனக்குக் கோபம் வருகிறது. ஆனால், கோபம் கொள்ளுதல் என் உடலுக்கும் நம் உறவுக்கும் நல்லதல்ல. எதை முடியுமோ அதை மட்டும் செய்யலாம். வீண் வார்த்தைகள் வேண்டாம். நான் கோபம் கொண்டதற்கும் மன்னிப்பு கேட்கிறேன். நீயும் இந்தக் கோபத்திலிருந்து வெளியேறி விடுதலை கொள்!” என்று அந்த நொடியிலேயே விழிப்புணர்வுடன் பிரார்த்திக்கலாம்.

எப்படி அந்த விழிப்புணர்வை அடைவது? தியானம் தான் அதற்குச் சிறந்த வழி. அந்த அளவு விழிப்புணர்வு வரும் வரை தினசரி மன்னிப்புக் கோருதல் அவசியமாகிறது..!!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

Thursday, 6 August 2020

பிரேக்

*“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”* 
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம் 

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” 

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு"  என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். 

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. 

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. 

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. 

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். 

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.

*வெற்றி நிச்சயம்*