Sunday 22 February 2015

வெற்றி

வெற்றி தரும் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை என்பது சிலருக்கு தானாக இருக்கும். சிலர் அதை தனது பழக்க வழக்கங்களின் மூலம் வளர்த்துக்கொள்வார்கள். முயன்றால் முடியாது எதுவும் இல்லை என்பதற்கு ஏற்ப நாம் முயன்றால் நமது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் நமது முயற்சிகளிலும், செயல்களிலும் வெற்றிகளை குவிக்க இயலும்.
எனக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது என்று தயங்குபவர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில விஷயங்கள் கொடுக்கப்பட்டள்ளது. இவற்றை பின்பற்றி வந்தால் உங்கள் தன்னம்பிக்கை நிச்சயம் வளரும்.
அழகாய் உடுத்துங்கள்..
'ஆள் பாதி ஆடை பாதி' என்றொரு பழமொழி உண்டு. ஒரு மனிதனுக்கு கம்பீரத்தையும், தோற்றப்பொலிவையும் தருவது உடைகள் தான். எனவே எப்போதும் நன்றாக உடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடைகள் ஒழுங்காகவும், கவர்ச்சியாகவும் இல்லை என்றால் மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பாது.
குறிப்பாக வேலைக்கான இன்டர்விïக்களுக்கு செல்லும் போது உங்கள் உடை சுத்தமானதாக, நேர்த்தியானதாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் பேண்ட், சட்டை அணிந்து, அதை 'டக் இன்' செய்து கொள்ள வேண்டும். உங்கள் உடை கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில், டிசைனில் இருக்க கூடாது. அதே போல பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்து செல்லலாம். எந்த நிலையிலும் உடல் அழகை வெளிப்படுத்தும் உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். உங்களின் கண்ணியத்தை வெளிப்படுத்தும் வகையில் உங்கள் உடைகள் அமைய வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் இளம் தாடியுடன் இருப்பதை விரும்புகிறார்கள். இது தவறாகும். வேலைதேடும்போதும், வேலைக்கான இன்டர்வியூக்களின் போதும், வேலை செய்யும் இடத்திலும் சுத்தமாக முகச்சவரம் செய்து செல்வது நன்மதிப்பை தரும்.
மிக முக்கியமானது உங்கள் உடைகளில் தேவையில்லாமல் பைகள் வைத்துக்கொள்வது, கிழிந்த உடைகளை அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சுறுசுறுப்பாய் இருங்கள்...
ஒருவரது நடையைப்பார்த்தே அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிடமுடியும் என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்வார்கள். எனவே உங்கள் நடை சுறுசுறுப்பாக, கம்பீரமாக இருக்கட்டும். மெதுவாக, தளர்வாக நடப்பது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். எனவே நடக்கும் போது தன்னம்பிக்கை தரும் வகையில் நிமிர்ந்த பார்வையுடன் நேராக, வேகமாக நடக்கப்பழகுங்கள். வேகமான நடைஎன்றால் அது ஓடுவது போல இருக்க கூடாது. உங்கள் நடையில் சுறுசுறுப்பு காணப்பட வேண்டும் அவ்வளவு தான்.
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை...
ஒருவரது பார்வையை வைத்தே அவரது உள்ளத்தில் உள்ளதை அறிந்து கொள்ள முடியும். துவண்ட தோள்களும், தளர்ந்த நடையும் கொண்டவரால் எந்த செயலிலும் வெற்றி காணமுடியாது. செய்யும் செயலில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு செயல்பட்டால் தான் அவருக்கு வெற்றி வசப்படும். எதிரில் இருப்பவரை நேருக்கு நேர் பார்த்து பேசுவது, உங்கள் உடல் அசைவுகள் நேராகவும், ஓழுங்காகவும் இருப்பது அவசியம். எனவே எப்போதும் நேராக பார்த்து பேசுங்கள், அமரும் போது நிமிர்ந்த பார்வையுடன் அமருங்கள். தலைநிமிர்ந்து செய்யப்படும் காரியங்கள் உங்களை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும்.
எந்த செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட தயங்க வேண்டாம். முன்வரிசையில் இருப்பவர்களால் தான் எதிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட துரிதமாக செயல்பட வேண்டியது அவசியம். முன் வரிசையில் அமர்ந்தால் நாம் அதிகம் கவனிக்கப்படுவோம், நம்மிடம் அதிகம் கேள்வி கேட்பார்கள் என்று மாணவ-மாணவிகள் நினைப்பதுண்டு. இதுதவறான கருத்து. முன்வரிசையில் அமரும்போது தான் கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது. ஆசிரியரின் கண்காணிப்பும் நம் மீது உள்ளது என்ற எண்ணமே ஒருவரை கவனிக்கத்தூண்டும். இதன் மூலம் கல்விஅறிவு பெருகும். மேலும் முதல் வரிசையில் அமரும் போது பய உணர்வு குறையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
தயக்கத்தை விரட்டுங்கள்...
சிலர் திறமைகள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அதை வெளிப்படுத்த தயங்குவார்கள். நமது கருத்து தவறாக இருக்குமோ, மற்றவர்கள் நமது கருத்தை கிண்டல் செய்துவிட்டால் என்ன செய்வது என்று தயங்கியே மவுனம் காத்துவிடுவார்கள். இதுமிகவும் தவறு. நமக்குதெரிந்த தகவல்களை வெளிப்படுத்த தயங்க கூடாது.
குறிப்பாக வேலைக்கான நேர்முகத்தேர்வு மற்றும் குழுவிவாதங்களின் போது உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசினால் தான் வெற்றி பெறமுடியும். எனவே எந்த நிலையில் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேசவும், உங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் தயங்க கூடாது. இவ்வாறு பேசினால் தான் தயக்கம், பயம் அகன்று தன்னம்பிக்கை பிறக்கும். நமது பேச்சில் தவறுகள் இருந்தாலும் அது என்ன தவறு, அதை சரி செய்வது எப்படி என்று அறிந்து கொண்டு செயல்படமுடியும்.
ஹோம் ஒர்க் அவசியம்...
பள்ளிகளில் படிக்கும் போது ஹோம் ஒர்க் கொடுப்பது உண்டு. இந்த வீட்டுப்பாடம் என்பது நாம் வகுப்பில் படித்தவற்றை எழுதிப்பார்க்கும் செய்து பார்க்கும் ஒரு முறையாகும். வீட்டுப்பாடம் எழுதும் போது நமக்கு படித்தவற்றை நினைவு படுத்திக்கொள்ள முடியும், நமது நினைவுத்திறனும் இதனால் அதிகரிக்கும்.
இந்த ஹோம் ஒர்க் முறை வேலை தேடும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய அம்சமாகும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, குழுவிவாதம் போன்றவற்றில் கலந்து கொள்ளும் முன்பு அதற்கு உங்களை தயார்படுத்திக்கொள்வது வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற பயிற்சி அவசியம்.