ஒரு ஜென் கதை………
அவர் ஒரு கவிஞர். பெரிய விருதுகள், பாராட்டுகளைப் பெற்றவர்.
அவரது கவிதைகளுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இப்போதும் உண்டு.
ஒருநாள், கவிஞர் ஒருவர் நண்பரைப் பார்க்க வந்திருந்தார். ‘எழுத்து வேலையெல்லாம் எப்படிப் போகிறது?’
என்று விசாரித்தார்.
’பிரமாதம்!’ என்றார் கவிஞர்.
‘நேற்றுமுழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு கவிதை எழுதினேன், ஏழு வரிகள், அருமையாக அமைந்துவிட்டன!’
‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் நண்பர்.
‘இன்றைக்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’
’இன்றைக்கு இன்னும் பிரமாதமான வேலை ஒன்று செய்தேன்’
பெருமிதத்தோடு சொன்னார் கவிஞர். ‘நேற்று எழுதிய கவிதையை மீண்டும் படித்துப் பார்த்தேன், அதில் ஆறு வரிகள் அவசியமற்றவை என்று தோன்றியது.
நீக்கிவிட்டேன்!’
எது அவசியம், எது அநாவசியம் என்று யோசிக்கும்போது, ஜென் சொல்லும் ஒரே வரி விதி, *‘நத்திங் எக்ஸ்ட்ரா’* – தேவையில்லாத ஆடம்பரங்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள், தேவையில்லாத பாரங்களைச் சுமக்காதீர்கள், உன்னதம் என்பது செதுக்குவதால் வருவது அல்ல, அநாவசியமானவற்றை நீக்குவதால் வரும்!