Tuesday 4 July 2017

அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’

இன்றைய தேதியில் குழந்தைகளை வைத்துப் பட்டிமன்றம் நடத்தினால், அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? ‘அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’ என்பதைத்தான் தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு அட்வைஸ் என்ற குளம் வெட்டி, குழந்தைகளை அதில் அமிழ்த்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவுரைகளினாலேயே பல வீடுகளில் பிள்ளைகளின் பார்வைக்குப் பெற்றோர் எதிரிகளாகத் தெரிகிறார்கள்.
உலகில் எல்லோரும் அடுத்தவருக்கு இலவசமாக அள்ளித்தருவது அட்வைஸ்தான். ஆனால், நாமும் அந்த அறிவுரைகளின்படியே நடந்திருக்கிறோமா என்பதை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
கதை ஒன்று சொல்லுவார்கள். நீங்களும்கூட அறிந்திருக்கலாம்.
‘‘எப்போது பார்த்தாலும் என் பிள்ளை இனிப்பு அதிகம் சாப்பிடுகிறான்’’ என்ற புகாருடன் தன் மகனை துறவி ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார் ஒரு பெண்மணி. எட்டில் இருந்து பத்து வயதிருக்கும் அவனுக்கு. துறவி, இருவரையும் பார்த்தார். பின், “நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “என்ன சாமி, இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் ஏதாவது புத்திமதி சொல்லி, அவனை இனிப்பு உண்பதில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றார் அப்பெண்மணி. சிறிது யோசித்த துறவி, ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார். அப்பெண்மணியும் சரியென திரும்பிப் போனார்.
ஒரு வாரம் கழித்து, திரும்பவும் துறவியைக் காண வந்தார் அப்பெண்மணி. இப்போது துறவி அப்பையனை அழைத்து, அவனுக்குப் புரியும் விதத்தில் எளிமையாக, இனிப்பு அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பட்டியலிட்டார். “இப்படியான பொருளை கட்டாயம் உணவில் சேர்ப்பது அவசியமா?” என்று கேள்வி எழுப்பினார். ‘இல்லை’ என்பதுபோல சிறுவனும் தலையசைத்தான். “அப்படியெனில் அதிக இனிப்பு உண்பதை உடனடியாக விட முடியாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு, பின் கைவிடலாம்” என்று கூறினார் துறவி. ஒருவழியாக அவனும் ஒப்புக்கொண்டான்.
“இந்த அறிவுரையை அன்றே சொல்லியிருக்கலாமே சாமி! ஏன் ஒரு வாரம் கழித்து வரச்சொன்னீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார் அச்சிறுவனின் தாயார். “கடந்த வாரம் வரையிலும் நானே அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால் அப்போது உங்கள் மகனுக்கு அறிவுரை சொல்லுவது சரியல்ல என்று சொல்லவில்லை. ஒரு வார காலம் இனிப்பு சாப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன். அதனால் இப்போது நான் சொல்லுவது சரியாக இருக்கும் என்பதால் சொன்னேன்.
அதுவும்கூட அறிவுரையாக இல்லாமல், அதிக இனிப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை அவனுக்குப் புரிய வைத்தேன்” என்றார் துறவி.
இதுதான் இன்றைய நிலை, “இன்றைய வளரிளம் பருவத்தினர், அறிவுரைகளைவிட ஆலோசனைகளைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள்” என்கிறார், குழந்தைகள் மனநல மருத்துவர் தேவகி.
மேலும் அவர், “எப்போதுமே வளரிளம் பருவத்தினர் சந்திக்கும் சங்கடங்களில் முதன்மையானவை இரண்டு. முதலாவது, உடலில் ஏற்படும் மாறுதல்கள். அடுத்தது, உளவியல் குழப்பங்கள். இந்தச் சமயத்தில் இவர்களைக் கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டும். இவ்வயதில் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களே வாழ்நாள் பயணத்தின் முழுமைக்குமான முதல்படியாக இருக்கின்றன. இன்று சமூகம் கொண்டாடும் பல பெரிய மனிதர்கள் எல்லாம், பதின்பருவத்தில் பாதையை முடிவுசெய்து நடக்கத் தொடங்கியவர்கள்தாம். பிள்ளைகளுக்குத் தங்களைப் பற்றிய ஒரு சுய மதிப்பீடு வளர்ந்துவரும் இச்சமயத்தில், கட்டளைகளாக வரும் அறிவுரைகளை இவர்கள் அறவே வெறுக்கிறார்கள். அதேசமயம் ஆலோசனைகளை வரவேற்பவர்களாகவ
ே இருக்கிறார்கள்.
இச்சமயத்தில் கட்டளைகள் இடாமல், அதிக நெருக்கடி கொடுக்காமல், கடிந்து கொள்வதைவிட, பிள்ளைகளின் மனம் அறிந்து பேசுவதே பலன் தரும். ‘தோளுக்குமேல் வளர்ந்தால் தோழன்’ என்ற பழமொழி நம்மூரில் இருக்கிறதல்லவா! பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று புறக்கணிக்காமல், பெற்றோர்கள் மனம் விட்டுப் பேசுவது நல்லது” என்கிறார், மருத்துவர் தேவகி.
வளரிளம் பருவத்தில் பிள்ளைகளுக்கு முதலில் எதிரியாகத் தோன்றுவோர் பெற்றோர்தாம். அதற்கு அவர்கள் கொட்டும் அறிவுரை மூட்டைதான் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் நூலிழைதான் வித்தியாசம் என்பதைப் பெற்றோர் உணரவேண்டும்.
உங்கள் வீட்டுத் தொட்டியில் செடி வளர்க்கிறீர்கள். தொட்டிச்செடிக்க
ு சொட்டுச் சொட்டாக நீர் விடவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அது தினமும் நீங்கள் செய்யும் வேலை. ஒருநாள் பிள்ளையிடம் அதைப் பணிக்கிறீர்கள். “சின்ன டம்ளர்ல தண்ணீர் எடுத்து ஊற்று, போதும்! பெரிய மக்குல அள்ளிக் கொட்ட வேண்டாம். என்ன புரியுதா? சொதப்பினா, செடி எல்லாம் நாசமாகப் போயிடும். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்திருக்கேன்..” என்று தொடங்கி தவளையாய்க் கத்தினால், அது கட்டளை வழியாகச் சொல்லப்படுகின்ற அறிவுரை.
இதையே, “தொட்டியில செடி வளர்வதால், சின்ன ஒரு டம்ளர் தண்ணீரே போதும். நிறைய தண்ணீர் ஊற்றினா, செடி அழுகிடும். இல்லாட்டி மண்ணு இளகி, செடியோட வேர் எல்லாம் வெளியில வந்துடும். செடியோட வேர் வெளியே வந்துட்டா, அப்புறம் செடி வளருமா?” என்று கேள்வி கேட்பது, அவர்களையும் அப்பணியில் ஈடுபடுத்தி சிந்திக்க வைக்கும்.
இன்றைய பிள்ளைகளுக்குப் புரியாதது என்று எதுவும் கிடையாது. அவர்களை மதித்து, நாம் அவர்களுடன் உரையாடத் தயாரானால், பிள்ளைகளுக்குப் பெற்றோரைவிட நல்ல நண்பர்கள் யாரும் இருக்க முடியாது.
அறிவுரை சொல்லப் போறீங்களா? இதோ பிடியுங்கள் ஆலோசனைகளை..!
வளரிளம் பருவத்தினருக்கு அம்மா, அப்பாவைவிட சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பள்ளி ஆசிரியர், ஆசிரியை, தோழன், தோழி என்று யாராவது ஒருவரை மிகவும் பிடித்துப் போயிருக்கும். பெற்றோர் சொல்ல வேண்டியதை, அவர்களின் வாயிலாகச் சொல்லச் சொல்லலாம். அப்போது பிள்ளைகள் காதுகொடுத்துக் கேட்க வாய்ப்புகள் அதிகம்.
‘சின்னப் பையன்.. இவனுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது? எல்லாவற்றையும் நாம்தான் செய்யவேண்டும்’ என்ற எண்ணமிருக்கும் பெற்றோரே, பிள்ளைகளுக்கு அதிகம் கட்டளை இடுபவர்களாக இருக்கிறார்கள். அதனால், வளர்ந்துவரும் பிள்ளைக்கும் எதுவும் புரியும் என்பதை உணர்ந்து உங்கள் எண்ணங்களை, தோழமையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வளரிளம் பருவத்தில் பிள்ளைகள் தங்களின் அழகுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் உடுத்தும் ஆடைகளைப் பற்றி, பெற்றோருக்கு மாற்றுக் கருத்து இருந்தால், நாசூக்காக எடுத்துச் சொல்லலாம். மாறாக, மோசமான விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.
இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று சொல்லுவதைவிட, இதை இப்படிச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லும்போது, பிள்ளைகள் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.
ஒரு செயலின் நன்மை தீமை பற்றி பிள்ளைகளுக்குப் புரியும்வண்ணம் எடுத்துச் சொல்லுவது நல்ல பயனைத் தரும்.