Wednesday, 17 July 2019

அகந்தை

*நம்முடைய அகந்தை நம்மை என்ன செய்யும்?*

ஒரு குரு இருந்தார்.  அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர்.  அவருடைய  குரு குலத்தில்  பல மாணவர்கள் தங்கி வில் வித்தை பயின்று வந்தார்கள்.  அதில் ஒரு மாணவன் மிகச் சிறப்பாக சகல வித்தைகளையும்  கற்றுத்  தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர். இதையெல்லாம் கேட்கக் கேட்க அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.  அது கற்றுக் கொடுத்த  குருவையே அலட்சியமாக நினைக்க வைத்தது.  அவனுக்குள் ஒரு தீய  எண்ணம் வேர்விட்டது.

"இனியும்  நான்  ஏன் பொறுத்திருக்க வேண்டும்?  குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது  எனக்கும் தெரியுமே! இன்னும் கூட அதிகமாகக் கற்றுக் கொள்ள எனக்கு  இளமையும்,  வயதும் இருக்கிறது.  இனி நான்தான்  குரு.  பழைய குருவை விரட்டுவேன். நானே குரு ஆவேன்" என்று எண்ணி  ஒரு  ஆலோசனை செய்தான்.  மறுநாள் அவனுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு  குருவின் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று சத்தமிட்டான்.

"கிழட்டு  குருவே வெளியே வாரும்.  இனி நீரல்ல, நான்தான்  குரு.  உம்மோடு போட்டியிட்டு ஜெயிக்க வந்திருக்கிறேன்.  தைரியம் இருந்தால் மோதிப் பாரும்.  இல்லை என்றால்  இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு ஆசிரமத்தை என்னிடம் ஒப்புவியும்" என்றான்.

குரு இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.  வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததில்  கொஞ்சம் நிலை குலைந்து போனார். ஆனாலும் உறுதியான  குரலில் சொன்னார் . " போட்டி துவங்கலாம் ". துவங்கியது.

முதலில்  குரு அம்பை எடுத்து தூரத்திலிருந்த ஒரு மரத்தை நோக்கி  எய்தார். அது சரியாய் ஒரு காயை வீழ்த்தியது.  சிஷ்யனும் அதே போல்  ஒரு  அம்பை எய்ய அது  இரண்டு காய்களை வீழ்த்தியது. சிஷ்யனின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

அடுத்து  குரு இரண்டு  அம்புகளை ஒன்றாக விடுத்தார்.  அதில் சரியாக  ஒரு  இலையும்,  ஒரு காயும் விழுந்தன.  சீடன்  அலட்சியமாக மூன்று அம்புகளை  ஒன்றாய்  எய்ய  அது  ஒரு இலையையும் ,  ஒரு காயையும் ,  ஒரு பூவையும் கூட அழகாய் வீழ்த்தியது.  சீடனின் கூட்டம் இன்னும் சத்தமிட்டது. குரு இப்போது தரையைப் பார்த்து தலைகுனிந்தபடி வானத்தை நோக்கி அம்பு விட்டார்.  அது குறிபார்த்து எய்ததுபோல் விண்ணில் பறந்து கொண்டிருந்த  ஒரு பறவையின்  மார்பில் தைத்து அதைக் கீழே விழ வைத்தது.

சிஷ்யனின்  கூட்டம் சற்றே மிரண்டது. சிஷ்யனோ சற்றும் மிரளவில்லை. புன்னகைத்தபடியே  அவனும்    தலையைக் குனிந்தவாறே   ஒரு  அம்பை  எய்தான். அவனது  அம்போ இரண்டு பறவைகளை ஒன்றாக  வீழ்த்தியது.  சிஷ்யனின் கூட்டம்  கூத்தாடியது.

மரியாதை இல்லாமல் குருவின்  அருகே வந்து அவரை சுற்றி நின்று கைதட்டியது.

மற்ற சீடர்களின் கண்களில் கண்ணீர்.  குரு  அவமானப் படுத்தப்படுவதை அவர்களால்  தாங்கிக்கொள்ள முடியவில்லை.  குரு வில்லையும் , அம்பையும் கீழே போட்டுத் தரையில் மண்டியிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

குரு தோல்வியை  ஒப்புக் கொண்டு விட்டாரோ?

எல்லாரும் மௌனமாய் குருவின் முகத்தையே பார்த்தனர்.

திடீரென்று குரு கண்ணைத் திறந்து வானத்தை  ஏறிட்டுப் பார்த்தார்.  அவர் பார்த்த மாத்திரத்திலேயே வானத்தில் பறந்து சென்று கொண்டிருந்த சில பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.  இப்போது சீடனின் முகம்  இருண்டது .

"குருவிடம்  இப்படி ஒரு வித்தையை நான் பார்த்ததே இல்லையே "

மனதுக்குள் மிரண்டாலும் அவனும் அவரைப்  போலவே மண்டியிட்டு வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்தான்.  ஒன்று கூட விழவில்லை.  பதற்றமாக மீண்டும் பார்த்தான்.  அப்போதும் எதுவும் விழவில்லை.  மீண்டும் ஒரு முறை பார்த்தான். அப்போதும் பயனில்லை. அவமானத்தில் குன்றிப் போனான் .  திடீரென  எழுந்து குருவின்  பாதங்களில்  விழுந்து அழுதான். 
*"குருவே! எப்போதுமே நீங்கள் மட்டுமே  பெரியவர். என்னை மன்னிப்பீர்களா?"* என்றான். குரு  அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

" நீங்கள் பார்க்கும்போது விழுந்த பறவைகள் நான் பார்க்கும்போது விழவில்லையே. ஏன் குருவே?

குரு சொன்னார்

*" தாழ்மை வந்தால்தான்  மேன்மை வரும்.  அகந்தை வந்தால்  அழிவுதான் வரும் "*

"ஆம்  குருவே,  நான் பாவி.  ஒன்றும்  அறியாத நிர்மூடன்" என்று அவரது பாதத்தைப் பிடித்து அழுதான்.

குரு சொன்னார், " இப்போது மேலே பார்" பார்த்தான்.  பறந்து கொண்டிருந்த  ஐந்தாறு பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.

செல்லமே!  மேன்மைக்கு ஏதுவான தாழ்மையை இந்த நாளில் ஆண்டவரிடம்  வேண்டிப் பெற்றுக்   கொள்வோமா?

*"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் ".*
======================