Saturday 4 January 2020

அடிமை

*ஓஷோவின் ஞானக் கதைகள் :*
   
 . ஒரு  நாள்  இரவு  ஒரு  சந்நியாசி  அரண்மனைக்கு  வந்தார்.  அரசனின்  அவையிலிருந்து  அறிவைப் பெறுவதற்காக  அவருடைய குரு அவரை அனுப்பியிருந்தார்.  
        அரசவைக்குப் புறப்படுவதற்கு முன் சந்நியாசி  குருவிடம்  கேட்டார்:
         "தவ உலகமாகிய இந்த  ஆசிரமத்தில்  கற்றுக்  கொள்ள முடியாததை எப்படி  ஒரு  அரசனின்  அரண்மனையில் கற்றுக்  கொள்ள முடியும்?"
        குரு  சொன்னார் :
         "பேசாமல்  நான்  சொல்வதைக் கேள். அங்கு  போய் அரசனைக் கேட்டுக் கொள்!"
     சந்நியாசி  அரண்மனையை அடைந்த போது அரசவையில் உள்ளவர்கள்  மது அருந்திக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருந்தார்கள். 
         இவற்றைக் கண்டதும்  சந்நியாசி  துணுக்குற்றார்.
         'நாம் ஏன்  இந்த  சங்கடத்தில்  மாட்டிக் கொண்டோம்? நம்மை முட்டாளாக்கி  விட்டார்கள்.  குரு  என்னை ஏளனத்துக்குள்ளாகும்படி செய்து  விட்டார்.  ஒருவேளை  நான்  இல்லாமல் இருப்பது  அவருக்கு  விடுதலையாய் இருக்கிறது  போலும். ஆனால்  இப்போது  திரும்பிச் செல்வது முறையற்றது' என்று  தனக்குள்ளேயே  சொல்லிக் கொண்டார். 
          அரசன், சந்நியாசியை வரவேற்று மிகவும்  உபசரித்தான். அவரை கண்டிப்பாக அன்று  இரவு அரண்மனையில் தங்கிச் செல்லுமாறு  வற்புறுத்தினான். 'அன்று இரவு அங்கு  தங்கிச் செல்வது அர்த்தமற்றது' என்று  சொன்னார்  சந்நியாசி. 
          "தாங்கள்  நாளை காலை குளித்து உணவருந்திவிட்டுச் செல்லலாம்" என்று  அரசன் கூறினான்.  
        சந்நியாசி  தங்கினார். 
        அன்று இரவு முழுவதும் அவருக்கு  நித்திரை இல்லை.  
        'இது பைத்தியக்காரத்தனம். மது தாராளமாக  உபயோகிக்கப்படுவதும், அழகிய மாதுகள் நடனம் ஆடுவதும், செல்வம் எங்கும் கொட்டிக் கிடப்பதும், ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்த அரண்மனையிலிருந்து எப்படி நான் ஞானத்தைப் பெற முடியும்?  நான்  மிகவுயர்ந்த ஞானத்தைத் தேடிச்  செல்பவன். இன்று இரவை நான் வீணாக்கி விட்டேன்! ' என்று  வருந்தினார்  சந்நியாசி. 
          காலையில்  அவர் எழுந்தவுடன்  அரசன் அவரை அரண்மனைக்குப் பின்னால்  உள்ள  நதியில் நீராட அழைத்தான். 
        அவர்கள் நீராடிக் கொண்டிருக்கும்  போது பயங்கரக் கூச்சலைக் கேட்டனர். 
         அரண்மனை நெருப்புப் பற்றி  எரிந்து கொண்டிருந்தது. தீயின் ஜூவாலைகள் வானளாவிச் சென்றன. 
           அரசன் சந்நியாசியைப் பார்த்து, "இதைப் பார்த்தீர்களா?" என்றான், நெருப்பைச் சுட்டிக் காட்டி. 
          சந்நியாசி  நதியை விட்டு வெளியேறி, "நீங்கள்  என்ன  சொல்கிறீர்கள்? அங்கு  பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?  என்னுடைய துணிகள் அரண்மனையில் இருக்கின்றன. அவையும் தீப்பற்றிவிடும். நான்  ஓடுகிறேன்" என்று  ஓடத் துவங்கினார். 
          அவர்  அரண்மனையை  நோக்கி  ஓடும் போது, 'அரசனது அரண்மனையே தீப்பற்றி எரிகிறது.  ஆனால்,  அவர் நதியில் நின்று  கொண்டிருக்கிறார். நானோ அங்கிருக்கும் கோவணத்துணியை எடுத்து  வர ஓடுகிறேனே' என்று  அவர் மனதில்  பட்டது. திரும்பி வந்தார். 
        தண்ணீரில்  நின்றபடி சிரித்துக் கொண்டிருக்கும்  அரசனது கால்களில் விழுந்தார். பிறகு,
       "உங்களுடைய அரண்மனையே தீப்பற்றி எரிந்து  கொண்டிருக்கிறது. நீங்கள்  இப்படி  நின்று  கொண்டிருக்கிறீர்களே? இதை என்னால் புரிந்து  கொள்ள  முடியவில்லை " என்றார்.  
         அரசன் சொன்னான் :
        " நான்  இந்த  அரண்மனையை என்னுடையதாகக் கருதி இருந்தால் நான்  இந்நேரம்  இங்கு  நின்று கொண்டிருக்க முடியாது. அரண்மனை  என்பது அரண்மனை. நான்  என்பது நான்.  எப்படி அரண்மனை என்னுடையதாக முடியும்? நான்  பிறப்பதற்கு முன்பே  அரண்மனை இருந்தது. நான்  இல்லாமற் போன பிறகும் கூட அரண்மனை இருக்கும். அது  எப்படி  என்னுடையதாக இருக்க முடியும்?  
           நீ அந்தக் கோவணத்துணியை  உன்னுடைய தாகவும்,  அரண்மனை என்னுடையதாகவும் எண்ணினாய். ஆகவே, அவற்றின் பின்னால் ஓடுகிறாய்!" 
           *ஓஷோ*  கூறுகிறார் :
          "மனிதன்  அவனுடைய  நோக்கத்தினாலேயே அடிமையாகிறான். அவன்  அதை மாற்றுவதினாலோ, அல்லது  தகர்ப்பதாலோ விடுதலை  பெற முடியும் .💦