Tuesday, 4 August 2020

கற்பித்தல்

நீங்கள் யார்?

ஒரு முறை பயணிக்கும் போது புலவர் காளிதாசனுக்கு மிகவும் தாகமாக இருந்தது. 

அப்போது ஒரு பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதைப் பார்த்தார்.

கிணற்றடிக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டார்.

பெண்: "தருகிறேன். ஆனால் நீங்கள் யார்? உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்" என்றாள்.

காளிதாசர்: தான் யார் என்று இந்த கிராமப்புற பெண் அறிய அருகதை அற்றவள் என்று எண்ணினார். 

எனவே, "நான் ஒரு பயணி" என்றார்.

பெண்: "இந்த உலகில் இரண்டே பயணிகள் தானே உண்டு. 

அது சூரியனும் சந்திரனும் ஆகும். தினமும் உதித்து பிறகு அஸ்தமித்து சதா பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்".

காளிதாசர்: "சரி. அப்படியானால் நான் ஒரு விருந்தினர்" என்றார்.

உடனே அந்த பெண்: இந்த உலகில் இரண்டே விருந்தினர்தானே உண்டு - இளமையும் செல்வமும்... 

இரண்டும் தற்காலிக மானவை. எனவே அவற்றைதான் விருந்தினர் என்று ஏற்க முடியும்" என்றாள்.

ஆச்சரியப்பட்ட காளிதாசர்: "சரி, நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்" என்றார்.

அதற்கு அந்த பெண்: இந்த உலகில் இரண்டே பொறுமைசாலிகள்தான் உண்டு. 

அவை, பூமியும் மரமும் ஆகும். 

யார் பூமியை எத்தனை மிதித்தாலும், பழத்திற்காக மரத்தின் மேல் எத்தனை கல் எறிந்தாலும், அவை பொறுமையாக இருக்கின்றன" என்றாள்.

பொறுமை இழந்த காளிதாசர்: "மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்" என்றார். 

அதற்கு அந்த பெண்: புன்னகையோடு இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டுதான் - நம் நகமும் தலைமுடியும் ஆகும். 

நாம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும்" என்றாள்.

பொறுமை இழந்த காளிதாசர், கோபமாக, "சரி, நான் ஒரு முட்டாள்" என்றார்.

அந்த பெண் சிரித்துக்கொண்டே,

"இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும், அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்" என்றாள்.

தான் தோல்வி அடைந்ததை உணர்ந்த காளிதாசர் அந்த பெண்ணின் கால்களில் விழுந்து அவள் பாதங்களைப் பற்றி பின் எழுந்த போது, தான் கண்ட காட்சியில் உறைந்து விட்டார். 

கற்பித்தல் மற்றும் அறிவுக்கும் கடவுள் ஆன அன்னை சரஸ்வதியை அங்கே காட்சி தந்து, "காளிதாசா, நீ புத்தி உள்ளவன். ஆனால் நீ உன்னையே உணர்ந்தால்தான் நீ மனுஷ்யா. எவன் ஒருவன் தன்னை அறிவதில்லையோ அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை" என்று ஆசீர்வதித்தார்.

இந்த கதையை சொன்ன உபன்யாசகர், "குழந்தைகள் வளர்ந்து மனுஷ்ய உணர்வு பெற்று தங்களையே அறிய வேண்டும். 

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு பணம் மற்ற வசதிகள் சம்பாதிக்க கற்றுத் தருவதைத் தவிர்த்து, குழந்தைகள் தங்களையே உணர்ந்து சிறந்த மனிதர்களாக வாழ கற்றுத்தர வேண்டும் என்றார்.