Saturday, 19 October 2019

சோர்வு

# மனச்சோர்வு...

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.

மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது… அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது?

நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள்.

நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.

உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது?

உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்?

அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது!

எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை. வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.

துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயேதான் உற்பத்தியாகின்றன.

உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை.

அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும். நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும்.

மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள்.

வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!

எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள்... மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள்... அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.

கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்...

# வெற்றி_நிச்சயம்..

# வாழ்க_வளமுடன்.

Wednesday, 2 October 2019

நன்றி

*நன்றியுணர்வின் சக்தி*

வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை,  பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை  சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை  கேட்டது.

"கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.

தன் குருவை  அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்.

இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய ஞானி  "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை பணிந்து வேண்டினார்.

குருவும் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார்.  *அனைத்தும் நன்மைகே  அனைத்திற்கும் நன்றி* என்பதுவே அந்த மாமந்திரம்.

குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும்  அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.

அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.

குருவிற்கு  மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு  கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச் சென்றார்.

குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால் *அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி* என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால்  நிலைமை மாறியது.

பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது.

வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.

*சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது*.

எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று  பதில் கூறினார்.

ஞானியும் தன் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.

ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பித்தார்  சந்திக்கும் எல்லா சூழல்களிலும்

*அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி*

என்று உளமார கூற ஆரம்பித்தார்.

அதுவரை அவர்  பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.

அதை போல் நாமும்  உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் .... என அனைத்திலும், எல்லா  சூழ்நிலைகளிலும், நடப்பவை  அனைத்தும் நன்மைக்கே, எனவே
*நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறுங்கள்*.

இந்த கதையை  மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .

அவர்களது வாழ்விலும் மாபெரும் மாற்றங்கள் வரும்

இந்த எளிமையான மாமந்திரம்  வாழ்வில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வரும்.

தன்னம்பிக்கை  எவ்வளவு சக்தி மிக்கது.

தன்னபிக்கை  ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின் பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.

இந்த மந்திரத்தை அறியாமல்தான் பிறவி மேல் பிறவியாக கர்ம வினையைச் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மாமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உச்சரித்து வருவோமெனில் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கி உணர்வோம்.

வாழ்க வளமுடன் !

Monday, 30 September 2019

அன்பு

*#கேள்வி*

மனிதர்கள் ஏன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்?

*#ஓஷோபதில்*

அது ஒரு அடிப்படைச் சிக்கல்.

அதன் அடிப்படையைக் காண மாபெரும் உளவியல் அறிஞர்களாலும் முடியவில்லை.

கொடுக்க யாரும் விரும்புவதில்லை.

எல்லோரும் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

அதன் மனோதத்துவம் எளிமையானது.

நீங்கள் காலியாக இருக்கிறீர்கள்..

உங்கள் உள்ளே அன்பு இல்லாமல் மொத்த இடமும் காலியாக இருக்கிறது.

அதில் எதையாவது போட்டு நிரப்ப பார்க்கிறீர்கள்.

யாராவது ஏதாவது கொடுக்க மாட்டார்களா என எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறீர்கள்.

உங்கள் உள்ளே உள்ள காலி இடமோ மிகப் பெரியது.

பணம்,அதிகாரம்,பெருமை,மரியாதை இவை எவற்றாலும் உங்கள் காலியிடத்தை நிரப்ப முடியாது.

இவை எல்லாம் கிடைத்து விட்டாலும் வெறுமையைத் தான் உணர்வீர்கள்.

அப்புறம்,என் வாழ்வே வீண் என்று கவலைப் படுவீர்கள்.

வெறுமையே கருமித்தனத்தை உருவாக்குகிறது.

பொங்கும் அன்பு வெள்ளமே அதனை அடித்துச் செல்லக்கூடியது.

நீங்கள் அன்பினால் நிறைந்து வழியும்போது கருமித்தனம் நில்லாது.

*#ஓஷோ*

Tuesday, 3 September 2019

கோபம்

கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள் . கோபத்தை எப்படி குறைப்பது ?

முதலில் கோபம் எதனால் வருகிறது? கோபம் அடைவதனால் நன்மை என்ன? கெடுதல் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோபம் எதனால் வருகிறது? என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.  இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.

அது சரி...

நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்ன்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும். நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.  இதை தடுக்க  டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப ்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார் கள். 55 வயத ுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக…

சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

இது பொய்யல்ல. சத்தியமான உண்மை இது. இதெல்லாம் நீங்க சொன்னீங்க...உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு நீங்க சொல்றதும். அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது... அப்படி வாங்க வழிக்கு. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது
உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 15 வழிகள்

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

7. மதம் சம்பந்தான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

13. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

14.. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

15. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். 

முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்க. நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. யார்மேல தவறுன்னு சிந்தியுங்க... கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க...தனியா உக்காந்து யோசிங்க. அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற  கொடிய நோயை  பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதரி தான். தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.  நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

நன்றிகளும்
பிரியங்களும்.

நன்றியுணர்வு

நன்றியுணர்வு
       பிறக்கும் போதே சித்தார்தர் புத்தராகப் பிறக்கவில்லை. ஒரு காலத்தில் அவரும் உங்களைப் போல் சாதாரண மனிதர் தான். சாதாரண சித்தார்த்தனால் புத்தனாக முடியும் போது உங்களால் முடியாதா?
       ஒரு சூஃபி ஞானி தினமும் ஒவ்வொரு தடவையும் இறைவனுக்கு நன்றி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பிரார்த்தணை செய்யமாட்டார், இறைவனுக்கு நன்றி மட்டும் தான் சொல்வார். அவ்வளவுதான்.
       "இறைவா ஒரு நாள் முழுவதும் என்னை கவனத்தில் எடுத்துக் காத்துக் கொண்டாயே! நன்றி"
       இன்று கண் திற‌ந்தேன்! அற்புதமான நாள்! நன்றி"
       "இன்னும் சுவாசிக்கிறேன்! நன்றி"
       இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் சூஃபி ஞானி நன்றி சொல்ல சொல்ல, சீடர்களும் நன்றி சொன்னார்கள். வழக்கம் போல சீடர்கள் அவர்களின் குருவோடு சேர்ந்து யாத்திரையை தொடர்ந்தார்கள்.
       இஸ்லாமியத்தின் ஒரு பகுதி தான் சூஃபித் தத்துவம் என்றாலும், அந்த காலத்தில் சூஃபி ஞானிகளுக்கு பெரிய மரியாதை கிடைக்காது. உணவு தரமாட்டார்கள்.
       ஒரு நாள் ஒரு ஊரில் சாப்பாடு கிடைக்கவே இல்லை. மறுநாள் அடுத்த ஊருக்கு சென்றார்கள். அந்த ஊரிலும் உணவு கிடைக்கவே இல்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உணவு கிடைக்கவேஇல்லை.
       ஆனால் அந்த ஞானி தங்களை பகல் முழுவதும் வழிந‌டத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி சொல்லாமல் விடவில்லை.
       நான்காவது நாளும் அவர்களை ஒரு ஊரில் கூட தங்க விடாமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர். அன்று வேறு வழியில்லாமல் ஒரு சுடுகாட்டில் படுத்துக்கொண்டனர்.
       நான்கு நாள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போயினர். பசியின் கோரம் அவர்களைத் தூங்க விடவில்லை.
       ஐந்தாம் நாள் காலையும் சூஃபி ஞானி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பிதார். ஆனால் சீடர்களோ... நன்றி சொல்ல மறுத்தனர். மறுத்ததோடு நில்லாமல், தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர்.
       "மூன்று நாட்களாக உணவு இல்லை, நான்காம் நாள் தங்க இடமில்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்று கேட்டனர்.
       ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார்: " மூன்று நாள் இறைவன் உணவு வழங்காததற்காக இவ்வளவு கவலைப் படுகிறீர்களே, நமக்கு முப்பது வருடங்களாக இறைவன் உணவு வழங்கி வருகிறாரே!
       ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை ஆனால், முப்பது வருடமாக இந்த உலகத்தில் தங்கியிருக்கிறோம்.
முப்பது வருடம் நம்மைக்காத்தவருக்கு இந்த மூன்று நாட்கள் பற்றித் தெரியாதா என்ன?
       முப்பது வருடம் நம்மைக் காத்ததற்க்கு இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே. நம் நன்றிக்கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும்?" எனக் கேட்டார்.
       வாழ்க்கையில் இயற்கை நமக்கு எல்லாமும் கொடுத்திருந்தாலும் அதிருப்தியே நம்மில் பலரிடம் காணப்படுகிறது.
       அதிருப்தி பிறந்ததற்கான காரணம் நன்றியுணர்வு என்ற பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுதான்.
       நம் வாழ்வில் சரியாக யோசித்துப் பார்த்தால் புரியும் இந்த வாழும் வாழ்க்கையே நமக்கு ஒரு பரிசு போலத்தான்.
       ரமண மக‌ரிஷி அற்புதமான ஒரு சுலோகம் சொல்வார்....
       "கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கி காண்பித்து
       கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கி காண்பிக்கும் -
       மடமனம்!"
       நம்முடைய மனதின் இயல்பே, எவ்வளவு கிடைத்தாலும், அதை அனுபவிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய பெரிய விசய‌ங்களை நோக்கியே ஆசையை திசை திருப்பி விடும்.
திருப்தியோடு வாழ அதற்க்கான காரணங்களை கண்டுபிடித்து, அதனோடு ஒன்றி நன்றியுணர்வு கொண்டு வாழ ஆரம்பிதீர்கள் என்றால் ஆனந்தமே உஙள் வாழ்வில் பொங்கும். நன்றியுணர்வே ஆனந்தத்தை கொண்டுவரும் சக்தி....

வாழ்க வளமுடன்!