Monday, 10 February 2020

தோல்வி- நன்றி

மனசு போல வாழ்க்கை 25: தோல்விகளுக்கு நன்றி!


தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொண்டாட நினைக்கிறோம். தோல்வியை மறக்க நினைக்கிறோம். தோல்வி தரும் வலிதான் காரணம். தோல்வியை நினைக்கையில் நம்மையும் அறியாமல் சிறுமைப்பட்டுப் போகிறோம். வெளியில் சொல்லாவிட்டாலும் குறுகிப்போகிறோம். இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம்.

மூடி மறைத்தல்

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. தோல்வி வருவது நமக்கு ஒரு பாடம் புகட்டத்தான். அந்தப் பாடத்தை வலிமையாகக் கற்றுத்தரத் தோல்வியால் தான் முடியும். வெற்றியால் வரும் பாடங்கள் அகந்தையை வளர்க்கும். தோல்வி தரும் பாடங்கள் அகந்தையை அழிக்கும்.

நம் அகந்தை அழிய அவ்வளவு சீக்கிரம் நாம் அனுமதிப்போமா?

பொய்யான காரணங்களை அகந்தை உற்பத்தி செய்யும். ஒரு தற்காலிக அமைதியை உருவாக்கி அதில் தோல்வி அனுபவத்தை மூடி வைக்கும். அந்த மூடி மறைத்தலில் தோல்வி நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் மனதில் ஏறாமல் போய்விடும்.

தோல்வி நிலையானதா?

வெற்றியாளர்களின் சாகசங்களைக் கேட்பதில் 100- ல் ஒரு பங்கு கூடத் தோல்வியாளர்களின் அனுபவங்களை நாம் கேட்பதில்லை. வெற்றி பெற்றவர்களின் பழைய தோல்வி அனுபவங்கள்கூட சாகசங்களாகத்தான் பார்க்கப்படும். நிறைய தோல்விகளைச் சந்தித்தவர்களின் அனுபவங்கள் வளமான வாழ்க்கைப் பாடங்கள். அனைத்துத் தோல்விகளையும் நாமே பெற்றுக் கற்றுக்கொள்வதைவிடப் பிறர் தோல்விகளில் பாடம் கற்பது புத்திசாலித்தனம்.

தோல்வியடைந்தவர்களை உடனே உதாசீனப்படுத்துவது போன்ற மடத்தனம் எதுவுமில்லை. முதலில், வெற்றி, தோல்வியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது மலிவான செயல். இரண்டாவது, தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை. ஒரு வெற்றி கூடச் சமயத்தில் வாழ்க்கையின் உச்சத்துக்கு இட்டுச் செல்லலாம். மூன்று, தோல்வியாளர்கள் தங்கள் பாடங்களைப் பகிரத் தயாராக இருப்பார்கள். ஆறுதல் கிடைக்கக் கூடப் பகிரலாம். ஆனால், வெற்றி பெற்றவர்கள் பலர் தங்கள் தோல்வி அனுபவங்களைப் பகிர மாட்டார்கள். ஆதலால் தோல்விகள் பாடங்கள் என்றால் தோல்வி அடைந்தவர்கள் ஆசிரியர்கள்.

நாம் ஏன் தோல்வி களைக் கண்டு இப்படிப் பயந்து நடுங்குகிறோம்? சிறு வயது முதலே தவறுகளையும் தோல்விகளையும் ஒதுக்கத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

வெற்றியின் மீதான வெறி

சரியும் தவறும் கலந்ததுதான் வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பது தான் இயல்பு. ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை. நம் தெய்வங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

படிக்காதவர்கள், நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள், நல்ல வேலை கிடைக்காதவர்கள், பணம் சம்பாதிக்காதவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி என்றால் படிப்பு, வேலை, சொத்து சேர்த்தவர்கள் முழுமையான வெற்றியாளர்களா? பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள், விவாகரத்துகள், விவகாரங்கள்? இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?

நம்பிக்கையே மருந்து

யோசித்துப் பார்த்தால், வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவ்வளவு தான்.

எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக ஆக்கி விடுவது நம் எண்ணங்கள் தான். அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும்.

மதிப்பெண்கள் குறைவதும், காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையே ஸ்தம்பிக்க வைப்பவை. ஆனால் அதைக் கடந்தும் வாழ்க்கை ஓடும். அதை விடச் சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும். நாளை பற்றிய நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.

தோல்விகளுக்கு நன்றி

மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள். விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஜமாகிறது. இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது. எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.

உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும் போது, “அங்கு வழுக்கல் அதிகம். பார்த்துப் போ!” என்று சொல்லாமல் சொல்கிறார். உங்கள் விபத்தைத் தடுக்கிறார்.

உங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்குக் காரணமான அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள்.

வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ள வேண்டாம். தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவும் பகலும் போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்!

Tuesday, 4 February 2020

வெற்றி

*சாணக்கியர் உரைத்த வெற்றிக்கான தந்திர குறுக்கு பாதைகள் பற்றி தெரியுமா?*


மௌரிய பேரரசின் ஒரு முக்கிய பங்காற்றியவர் சாணக்கியர். இன்றைய அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள தக்ஷஷிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றியவர். நீதி சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் போன்ற சிறந்த படைப்புகளை இந்த உலகதிற்கு அளித்த தத்துவ ஞானி. இவரது படைப்புகள் 1915இல் தான் கண்டுபிடிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சாணக்கியரின் தந்திரம் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை போன்ற அறிவுடையோர் தத்துவங்களை ஏற்பதால் நாமும் நம் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.



இந்த உலகம் ஜெய்த்தவர்களை தான் திரும்பி பார்க்கும். தோற்றவர்களை ஏளனம் மட்டுமே செய்யும். தட்டி கொடுக்க ஒரு கை நமக்கு இருந்தால் போதும் எட்டி பிடிக்க ஒரு வானம் பத்தாது. உன்னால் முடியும் என்ற சொல்லை கேட்டாலே போதும் ஒரு புதிய உத்வேகம் வந்து விடும் மனதிற்குள். அது தான் மாயை. சிறிய தீப்பொறி போதும் காட்டையே சாம்பாலக்க. அது போல தான் சிறிய வழிகாட்டுதல் போதும் அனைத்தையும் நம் வசப்படுத்தி விடலாம்.


 
வாழ்க்கையில் ஜெய்க்க நேர்மை தேவை தான். ஆனால் தந்திர வழிகளும் தேவைப்படுகிறது. யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும் ஒரு மகத்தான மந்திரமே. இந்த தந்திரத்தை பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று இப்பதிவில் காண்போம் வாருங்கள்.



எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை மற்றவர்கள் காணும் விதத்திலும் நீங்கள் காணும் விதத்திலும் வித்தியாசம் இருக்குமாறு மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். யாரையும் பின் தொடராதீர்கள்.

போட்டி என்று வந்துவிட்டால் எப்போதும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைக்காமல் உங்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். யாரையும் 100% திருப்தி படுத்திவிட முடியாது. இலக்கை அடையும் போது அங்கு கருணைக்கு வேலை இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உங்களை சுலபமாக இவ்வுலகம் தோற்கடித்துவிடும்.



செல்வம் இல்லாதவர்களை உலகம் துச்சமாக நினைக்கும், அலட்சியபடுத்தும், தூக்கி எரிந்து விடும். செல்வம் பெற்ற ஒருவன் என்ன கூறினாலும் அதை நிஜம் என்று உலகம் நம்பும். செல்வம் படைத்தவன் மென்மேலும் செல்வத்தை சேர்த்து கொண்டே போக முடியும். இல்லாதவன் தன்னை காத்து கொள்ளவே பெருமளவு போராடுவான். எனவே செல்வம் இல்லையென்றாலும் அதை வெளியில் கட்டி கொள்ளாமல் தந்திரமாக இருந்து சாதிக்க வேண்டும். வெற்றி பெற்ற யாவரும் ஒரு காலத்தில் பல அவமானங்களை சந்தித்தவர்களே என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சரியான பாதையா? என்று நிச்சயம் ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்து அதன் பின் அதை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கும் பயணத்தில் கண்ணை மூடி கொண்டு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் அல்லாமல் 360 டிகிரி கோணத்தில் சுற்றியும் உங்களது பார்வை இருக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் உங்களுடைய இலக்கிற்கான குறிப்புகள் தென்படுகிறதோ அவற்றையெல்லாம் சேகரித்து கொள்ள வேண்டும். மனதை ஒருமுகபடுத்தி எந்த குழப்பமும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று உரைக்கின்றார்.



நீங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் அதை எண்ணி கவலைபடக்கூடாது. கவலைப்படுவதால் எதுவும் மாறிவிட போவதில்லை. அறிவுடையோர் நிச்சயம் இதை செய்யமாட்டார்கள். முயற்சியை காட்டிலும் விடாமுயற்சியே வெற்றியை தேடி தரும். தொடர்ந்து சிந்தித்து கொண்டே இருங்கள். கவலைபட்டு உடலையும், மனதையும் பலவீனமாக்கினால் வெற்றியை ஈட்ட முடியாது.

உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யும் அந்த செயலினால் விளைய இருக்கும் விளைவுகள் என்னென்ன? நீங்கள் செய்ய இருக்கும் அந்த செயல் எந்த அளவிற்கு பயனுடையது? இதை பற்றிய தெளிவான அலசல் செய்து கொள்ளுங்கள்.



பிறரை ஏமாற்றுபவர்கள் உங்களையும் ஏமாற்ற தயங்க மாட்டார்கள். அத்தகையவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது தான் அறிவு. நமக்கு தெரிந்தே சில தவறுகள் நாம் செய்து விடுவோம். அதற்கு காரணம் விரைவாக யோசிக்கும் ஆற்றல் இல்லாமையே. விரைவாக சிந்திக்க வேண்டும். அறிவாக செயலாற்ற வேண்டும். யோசிப்பதில் நேரத்தை செலவிடுபவர்களால் எதையும் சரியாக செய்ய முடியாது. அந்த தகுதியை நீங்கள் தான் வளர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பின்னர் பின்வாங்க கூடாது. அதனால் விளையும் பிரச்சனைகளை கையாள்வதில் உறுதி கொள்ள வேண்டும். பின் வாங்குபர்களால் வெற்றி பெற முடியாது என்கிறார் சாணக்கியர். உங்களின் பலவீனம் உங்களை தவிர வேறு ஒரு நபருக்கு தெரியவே கூடாது.

ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்
மறை விமர்சனங்கள் இரண்டையுமே எதிர்கொள்ள வேண்டும். 
ம், எதிர்மறை விமர்சனங்களால் துவண்டும் போகாமல் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சென்றால் வெற்றி எளிதில் வந்தடையும்.

உங்களுக்கு கீழ் உள்ளவர்களை எடை போடுவதில் தவறு செய்து விடாதீர்கள். கீழே தானே இருக்கிறார்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று ஒருபோதும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அது வெற்றியின் தூரத்தை அதிகரிக்கும் ஒரு முட்டாள் தனமான செயல் என்று சாணக்கியர் உரைக்கிறார்.



Sunday, 2 February 2020

நிதானம்

"நிதானம்"

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,அவரைத் தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார், 
"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.உணவை, நீரை அருகில் வையுங்கள்.ஆனால் உண்ணும் படிக் கூற வேண்டாம்.பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.சீடர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லித் தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகி விடுகிறார்",
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!

தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்குப் பட்டினி ..!!

அமைதியாக இருங்கள் ..
எல்லாம் சரியாகும் .
ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை ..!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..

நிதானம் நீளமானது ..!!

வாழ்க நிதானத்துடன் .

அவசரம்





இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.. எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகி விட்டதை தினம் தினம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

அர்ஜன்ட்( Urgent) என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் 

பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவது இல்லை.

 மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டி உள்ளது. அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும்,

அதிகபட்சமாக அவசியம் இல்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை.

அதிகமாக அவசரப்படுவதால் சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலக, செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப்போய் விடுகிறது. 

ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது.

இன்னும் சொல்லப் போனால் பின் விளைவுகளை யோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது. 

அப்படியானால் எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.

ஆம், நண்பர்களே.,

நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். 

அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்ப்படுவதை தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து நிம்மதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.

Thursday, 30 January 2020

ரசிப்பு

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்!!*

விரித்த படுக்கை விரிப்பில் 
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்*!!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு 
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன்*!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!*

*கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது*

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ? 

மழலை மொழியில் 
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில் 
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு 
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!*

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை      அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி 
அலைபேசியில் விசாரிப்பு.

*நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.*

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

*நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!*

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

*யாரோ  ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.*

*வாழ்க்கையை ரசித்து அனுப வியுங்கள்*.

Saturday, 4 January 2020

அடிமை

*ஓஷோவின் ஞானக் கதைகள் :*
   
 . ஒரு  நாள்  இரவு  ஒரு  சந்நியாசி  அரண்மனைக்கு  வந்தார்.  அரசனின்  அவையிலிருந்து  அறிவைப் பெறுவதற்காக  அவருடைய குரு அவரை அனுப்பியிருந்தார்.  
        அரசவைக்குப் புறப்படுவதற்கு முன் சந்நியாசி  குருவிடம்  கேட்டார்:
         "தவ உலகமாகிய இந்த  ஆசிரமத்தில்  கற்றுக்  கொள்ள முடியாததை எப்படி  ஒரு  அரசனின்  அரண்மனையில் கற்றுக்  கொள்ள முடியும்?"
        குரு  சொன்னார் :
         "பேசாமல்  நான்  சொல்வதைக் கேள். அங்கு  போய் அரசனைக் கேட்டுக் கொள்!"
     சந்நியாசி  அரண்மனையை அடைந்த போது அரசவையில் உள்ளவர்கள்  மது அருந்திக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருந்தார்கள். 
         இவற்றைக் கண்டதும்  சந்நியாசி  துணுக்குற்றார்.
         'நாம் ஏன்  இந்த  சங்கடத்தில்  மாட்டிக் கொண்டோம்? நம்மை முட்டாளாக்கி  விட்டார்கள்.  குரு  என்னை ஏளனத்துக்குள்ளாகும்படி செய்து  விட்டார்.  ஒருவேளை  நான்  இல்லாமல் இருப்பது  அவருக்கு  விடுதலையாய் இருக்கிறது  போலும். ஆனால்  இப்போது  திரும்பிச் செல்வது முறையற்றது' என்று  தனக்குள்ளேயே  சொல்லிக் கொண்டார். 
          அரசன், சந்நியாசியை வரவேற்று மிகவும்  உபசரித்தான். அவரை கண்டிப்பாக அன்று  இரவு அரண்மனையில் தங்கிச் செல்லுமாறு  வற்புறுத்தினான். 'அன்று இரவு அங்கு  தங்கிச் செல்வது அர்த்தமற்றது' என்று  சொன்னார்  சந்நியாசி. 
          "தாங்கள்  நாளை காலை குளித்து உணவருந்திவிட்டுச் செல்லலாம்" என்று  அரசன் கூறினான்.  
        சந்நியாசி  தங்கினார். 
        அன்று இரவு முழுவதும் அவருக்கு  நித்திரை இல்லை.  
        'இது பைத்தியக்காரத்தனம். மது தாராளமாக  உபயோகிக்கப்படுவதும், அழகிய மாதுகள் நடனம் ஆடுவதும், செல்வம் எங்கும் கொட்டிக் கிடப்பதும், ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்த அரண்மனையிலிருந்து எப்படி நான் ஞானத்தைப் பெற முடியும்?  நான்  மிகவுயர்ந்த ஞானத்தைத் தேடிச்  செல்பவன். இன்று இரவை நான் வீணாக்கி விட்டேன்! ' என்று  வருந்தினார்  சந்நியாசி. 
          காலையில்  அவர் எழுந்தவுடன்  அரசன் அவரை அரண்மனைக்குப் பின்னால்  உள்ள  நதியில் நீராட அழைத்தான். 
        அவர்கள் நீராடிக் கொண்டிருக்கும்  போது பயங்கரக் கூச்சலைக் கேட்டனர். 
         அரண்மனை நெருப்புப் பற்றி  எரிந்து கொண்டிருந்தது. தீயின் ஜூவாலைகள் வானளாவிச் சென்றன. 
           அரசன் சந்நியாசியைப் பார்த்து, "இதைப் பார்த்தீர்களா?" என்றான், நெருப்பைச் சுட்டிக் காட்டி. 
          சந்நியாசி  நதியை விட்டு வெளியேறி, "நீங்கள்  என்ன  சொல்கிறீர்கள்? அங்கு  பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?  என்னுடைய துணிகள் அரண்மனையில் இருக்கின்றன. அவையும் தீப்பற்றிவிடும். நான்  ஓடுகிறேன்" என்று  ஓடத் துவங்கினார். 
          அவர்  அரண்மனையை  நோக்கி  ஓடும் போது, 'அரசனது அரண்மனையே தீப்பற்றி எரிகிறது.  ஆனால்,  அவர் நதியில் நின்று  கொண்டிருக்கிறார். நானோ அங்கிருக்கும் கோவணத்துணியை எடுத்து  வர ஓடுகிறேனே' என்று  அவர் மனதில்  பட்டது. திரும்பி வந்தார். 
        தண்ணீரில்  நின்றபடி சிரித்துக் கொண்டிருக்கும்  அரசனது கால்களில் விழுந்தார். பிறகு,
       "உங்களுடைய அரண்மனையே தீப்பற்றி எரிந்து  கொண்டிருக்கிறது. நீங்கள்  இப்படி  நின்று  கொண்டிருக்கிறீர்களே? இதை என்னால் புரிந்து  கொள்ள  முடியவில்லை " என்றார்.  
         அரசன் சொன்னான் :
        " நான்  இந்த  அரண்மனையை என்னுடையதாகக் கருதி இருந்தால் நான்  இந்நேரம்  இங்கு  நின்று கொண்டிருக்க முடியாது. அரண்மனை  என்பது அரண்மனை. நான்  என்பது நான்.  எப்படி அரண்மனை என்னுடையதாக முடியும்? நான்  பிறப்பதற்கு முன்பே  அரண்மனை இருந்தது. நான்  இல்லாமற் போன பிறகும் கூட அரண்மனை இருக்கும். அது  எப்படி  என்னுடையதாக இருக்க முடியும்?  
           நீ அந்தக் கோவணத்துணியை  உன்னுடைய தாகவும்,  அரண்மனை என்னுடையதாகவும் எண்ணினாய். ஆகவே, அவற்றின் பின்னால் ஓடுகிறாய்!" 
           *ஓஷோ*  கூறுகிறார் :
          "மனிதன்  அவனுடைய  நோக்கத்தினாலேயே அடிமையாகிறான். அவன்  அதை மாற்றுவதினாலோ, அல்லது  தகர்ப்பதாலோ விடுதலை  பெற முடியும் .💦

குற்றவுணர்வு

குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.

உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன. 

ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.

அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம். 

மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். 

வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.

நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.

இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்.

தவறு செய்வது மனித இயல்பு.

அதே போல் மன்னிப்பதும் மனித இயல்பு தான்.

நீங்கள் உங்களையே முதலில் மன்னித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி உங்களையே உங்களுக்கு மன்னிக்கத் தெரியாவிட்டால்,பிறரை உங்களால் எப்படி மன்னிக்க முடியும்?

உமர்கயாம் என்ற சுபி புலவர்,தன்னுடைய 'ரூபையாத்'என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தில்,''நான் குடிக்க விரும்புகிறேன்,ஆட விரும்புகிறேன்,பாட விரும்புகிறேன்.நீங்கள் கருதும் சகல பாவங்களையும் செய்ய விரும்புகிறேன்.

ஏனெனில் கடவுள் கருணை உள்ளவர்.

அவர் என்னை நிச்சயம் மன்னிப்பார்.

என்னுடைய பாவச் செயல்களை அவருடைய கருணையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.''என்கிறார்.

உமர்கயாம் ஞானம் அடைந்தவர்.மிகவும் தெளிவான ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்.

அவர் சொன்னதில் உள்ள முக்கிய கருத்து,

''நீங்கள் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்''என்பதே.

**#ஓஷோ*