Tuesday, 18 June 2019

வெற்றி

கவலைகளை வெற்றிகொள்வது எப்படி?

✓ 1. பழக்கம். கவலையும் ஒரு பழக்கம்தான். அது நீண்ட காலமாக நமக்குள் வளர்ந்து வருவது. உங்களால் ஒரு பழக்கத்தை உருவாக்க முடிந்தால், அதை உடைத்தெறியவும் முடியும்தானே. எனவே எதைப் பார்த்தாலும் கவலைப்படும் உங்கள் பழக்கத்தை உடனடியாக சுக்கு நூறாக உடைத்தெறியுங்கள்.

✓ 2. மூச்சுத் திணறடித்தல். கவலை என்பதன் அடிப்படைப் பொருள் இதுதான்: உங்கள் கழுத்தை நெரித்து மூச்சுத் திணறடிக்கும். கவலை உங்களது இயற்கையான திறனையும், சக்தியையும் அடியோடு வெட்டி வீழ்த்தி விடும். எனவே கவலை மிகுந்த எண்ணங்களால் உங்களை நீங்களே மூச்சுத் திணறடித்துக் கொள்ளாதீர்கள்.

✓ 3. முட்டாள்தனம். கவலை என்றால் என்ன? நமது மன வலிமையின் முட்டாள்தனமான குப்பை. உங்கள் கவலைகளின் 40 சதவிகிதம் கடந்த காலத்தைப் பற்றியது. 50 சதவிகிதம் எதிர்காலத்தோடு தொடர்புடையது. எஞ்சிய 10 சதவிகிதமோ நிகழ்கால சிக்கல்களை மையமிட்டது. நீங்கள் கவலைப்படும் 92 சதவிகிதம் கவலைகள் வாழ்க்கையில் ஒருபோதுமே நிகழ்வதில்லை. எஞ்சிய வெறும் எட்டு சதவிகித கவலைகளை மட்டுமே யதார்த்தத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

✓ 4. மறத்தல். கடந்த காலத் தவறுகளைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்த சிறந்த ஒரே வழி, அவற்றை மறந்து விடும் அளவுக்கு நீங்கள் திறமைசாலியாவதுதான். நடந்தது நடந்ததுதான், எனவே அதை மறந்து விடுங்கள்.

✓ 5. புறக்கணி. “எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதுதான் மேதமையின் உச்சம்.” இது பிரபல மனோதத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸின் புகழ்பெற்ற வரிகள். கவலைப்படுபவன், கவலை தரும் விஷயங்களைப் புறக்கணிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறான். கவலை குறைகிறது, பதற்றம் விலகுகிறது. “இதைக் கடந்து செல்வோம்” என்னும் புதிய மனப்பாங்கு உருவாகிறது. கவலையை விரட்டியடிக்க இது முக்கியமானது.

✓ 6. எதிர்காலம். எதிர்காலத்தின் இருண்ட புள்ளிகளைத் தேடுவதை நிறுத்தி விட்டு, ஒளி நிரம்பிய எதிர்காலத்தை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்புங்கள். ஏனென்றால் அங்கிருந்துதான் கடவுள் உங்களை கவனிக்கிறார். என்ன நிகழுமோ என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, ஆழமான நம்பிக்கையின் உதவியால் மிகச் சிறந்த நிகழ்வுகளை உருவாக்குங்கள்.

✓ 7. நிலை குலையா அமைதி. அமைதி குலையாத மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால், கவலை உங்களை நெருங்கவே நெருங்காது. எப்படிப்பட்ட நெருக்கடியிலும், பதட்டத்திலும் உங்களுக்குள் முழு நம்பிக்கையுடன் பின்வருமாறு சொல்லிக் கொள்ளுங்கள்: “கடவுள் என்னை அமைதியாகவும், சாந்தியாகவும் இருக்கச் செய்துள்ளார்.”

✓ 8. வெறுமை. எதுவுமே இல்லாத வகையில் மனதை வெற்றிடமாக வைக்க வேண்டும். எனவே வீண் கவலைகளால் உங்கள் மனதை நிரப்புவதை நிறுத்திவிட்டு, உடனடியாக அவற்றை உங்கள் மனதிலிருந்து வெளியேற்றும் வழியைப் பாருங்கள். இதைச் செயல்படுத்துவதற்கான முக்கிய வழிகளில் ஒன்று, “இப்போது என்னுடைய மனது கவலைகள், பதற்றங்கள், பயம், பாதுகாப்பின்மை போன்றவை எதுவுமே இல்லாமல் வெறுமையாக இருக்கிறது”என்று உங்களுக்குள்ளேயே உறுதியாகச் சொல்லுங்கள்.

✓ 9. நிரப்பு. மனதின் அமைப்பு, வெகு நேரத்துக்கு அதை வெறுமையாக இருக்க அனுமதிக்காது. எனவே நேர்மறை எண்ணங்களால் அதை உடனடியாக நிரப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால், கவலையைத் தூண்டும் எதிர்மறை எண்ணங்கள் அங்கே மறுபடியும் நுழைந்துவிடும். எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் மனதுக்குள் வலுக்கட்டாயமாக வலிமை மிகுந்த, ஆரோக்கியமான சிந்தனைகளை உட்செலுத்துங்கள். இவ்வாறு உரக்கச் சொல்லுங்கள்: “கடவுள் இப்போது என் மனதை துணிச்சல், வலிமை, அமைதி, நம்பிக்கை ஆகியவற்றால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்.”

✓ 10. இருப்பு. துணிச்சல் மிகுந்த வாழ்க்கைக்கான பிரபலமான நுணுக்கங்களில் ஒன்று, கடவுளின் இருப்பை எப்போதுமே தக்கவைத்துக் கொண்டிருப்பதாகும். இரவும் பகலும், ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை உணரும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்வரும் இந்த உறுதிமொழியை தினந்தோறும் சொல்லுங்கள்: “கடவுள் ஒருபோதும் என்னை விட்டு விலகமாட்டார். நான் தனியாக இருப்பதே இல்லை. அவரது இருப்பு என்னை பாதுகாக்கிறது.”

நன்றி

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!