Friday, 27 March 2020

ஹைக்கூ

🌸 இந்த கட்டுரை சற்று நீளமானது. அவசியமில்லை என கருதுவோர் கடந்து செல்க 

ஜென் ஊடாக ஹைக்கூ

இந்த உலகில் உள்ள மூன்று பிரதான மதங்களினுடாக மூன்று தத்துவங்கள் மக்களை  நல்வழிபடுத்தும் நோக்கில் தத்தமது பிரயாணத்தை ஆரம்பித்தன

அந்தவகையில் இந்து மதத்திலிருந்து மாயா தத்துவமும்

இஸ்லாம் மதத்திலிருந்து சூபியிசத் தத்துவமும்

பௌத்த மதத்திலிருந்து ஸென் தத்துவமும் வெளிப்படுத்தப்பட்டன

ஸென் மேற்கூறிய மூன்று மதங்களின் தத்துவங்களையோ, செயற்பாடுகளையோ 

அல்லது அவற்றின் போசகத்தன்மைகளையோ பரப்புரைகளையோ குறிப்பதாக இல்லை

இன்னும் சொல்லப்போனால் இவை தத்துவங்கள் அவ்வளவுதான்

அந்தவகையில் ஸென் தத்துவம் புத்த மத துறவிகளினால் உருவான ஒரு தத்துவம் என பொதுவாகவும் மேலோட்டமாகவும் சொல்லிக்கொள்ளலாம்

ஸென் பற்றி அறியும் முன் 

ஸென் என்பதன் சொல்லுக்கான பத விளக்கம் பெறுவது அவசியமானது

அந்தவகையில் 'ஸென்' என்னும் சொற்பதம் "தியானம்" என்னும் சமஸ்கிருத மொழியின் திரிபாகக் கருதப்படுகிறது 

சமஸ்கிருதத்தில் உள்ள ஒரு சொல் தியானா என்பதாகும்

இச்சொல் பாளியில் ஸானா என வழங்கப்படுகிறது

'ஸானா' என்னும் இச்சொல் சீனாவில் ஸான் என்றும், ஜான்-னா என்றும் மருவி 

பின் ஜப்பானுக்குள் நுழையும் போது 

இச்சொல் ஸென்னோ எனவும் திரிவுற்று 

இறுதியில் ஸென் என வழங்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது

தியானத்தின் கருத்தையே மேற் குறிப்பிட்ட சொற்கள் யாவும் உணர்த்துகின்றன

தற்காலத்தில் தமிழில் ஸென் என்னும் சொற் பதத்தை ஜென், சென், யென் என்றெல்லாம் எழுதும் உச்சரிக்குக்கும் போக்கு உள்ளது 

ஜென்னின் தோற்றம்

ஜென் என்பது தனியாக கிளர்த்தெழுந்த ஒரு மதமோ தத்துவமோ கிடையாது

உண்மையில் இது இந்தியாவில் தோன்றிய பௌத்த மதத்தின் ஆணி வேரே

கி.மு 6ம் நூற்றாண்டில் தோன்றிய மதமாக கருதப்படும்  பௌத்தம் 

அதற்கு முன்பு கூறப்பட்டு வந்த மதங்களின் போலித்தன்மைகளை நிராகரிப்புச் செய்யும் மதமாக தோன்றி 

அவற்றின் கட்டுக்களில் இருந்து மக்களை விடுவிக்க முற்பட்ட மதமாக பௌத்தம் கருதப்படுகிறது

இம்மதம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பிரயாணம் செய்தது

சீனாவில் உள்ள சவோலியன் கோயிலில் சொற்களில் ஏந்திய மதநூல்களின் போசகத்தன்னைக்கு புறம்பான அறிவினை கற்பிப்பதற்காக 

புத்தமதத் துறவியாக மாறிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இளவரசனான போதிதர்மனால் கி.பி 516 ல்  தொடங்கப்பட்டு 

அவரது துறவியான 'சட்டோரி' என்பவரால் 

ஜென் (தியான மார்க்கம்) சீனாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது 

ஜென் பௌத்தத்தின் இரு பிரிவில் ஒரு பிரிவான மகாயானத்தின் பிரிவாக இருந்து பின் தனியான பௌத்த மத பிரிவாக மாறியதாக 

கி.பி 7ம் நூற்றாண்டின் பதிவுகளில் காணப்படுகின்றன

மகாயானத்திலிருந்த பல்வேறு சிந்தனை போக்குளின் கலவையாக ஜென் பௌத்த மதம் உருவானதாக சொல்லப்படுகிறது

ஜென் சீனாவிலிருந்து வியட்நாமிற்கும், கிழக்கு கொரியாவுக்கும், ஜப்பானிற்கும் பரவியது

ஜப்பானிற்கு இய்சாய் (1141-1215), டோகன் (1200-1253) போன்றோரின் முயற்சியால் ஜென் புத்த மதமாக கொண்டு வரப்பட்டது

இங்கு ஜென்னின் விளக்கத்தை அறியும் முன் பௌத்தின் மைய உண்மையை அறிவது தேவைப்பாடானது

பௌத்தம் என்பது ஒரு மனிதன் சக மனிதர்களோடு சேர்ந்து வாழ்வதற்காக வகுப்பட்ட நன்னெறியே பௌத்தமாகும்

இந்நெறி ஐந்து வகை ஒழுக்கத்தையும்

எட்டு வழி மார்க்கத்தையும்

நான்கு உண்மைகளையும் 

பத்து நெறிகளையும் அடிப்படையாகக் கொண்டது

ஐந்து வகை ஒழுக்கம்

1. பொய் சொல்லாமை
2. திருடாமை
3. வீண் கொல்லாமை
4. கள்ளுண்ணாமை
5. கூடா ஒழுக்கம் மேற்கொள்ளுாமை

எட்டு வழி மார்க்கம்

1. நன் நோக்கு       -     (சரியாகப் புரிந்து கொள்ளுதல் )

2. நற் கருத்து       -     (சரியான சிந்தனை)

3. நல் வாய்மை     -     (சரியான பேச்சு)

4. நற் செயல்        -     (சரியான செயல்)

5. நல் வாழ்க்கை    -     (சரியான வாழ்க்கை)

6. நன் முயற்சி      -     (சரியான முயற்சி)

7. நற் கடைபிடி     -     (சரியான மனது)

8. நல் அமைதி     -     (சரியான கவனம்)

நான்கு உண்மைகள்

1. வாழ்க்கை துக்கமானது
2. துக்கத்திற்கான காரணமிருக்கிறது
3. துக்கத்திற்கான நிவாரணம் இருக்கிறது.
4. துக்கம் நீக்கம் பெறுகிறது.

பத்து நெறிகள்

1.  ஒழுக்கம்
2.  பிறர்  தேவைக்கான தானம்
3.  விருப்பு வெறுப்பற்ற தன்மை
4.  துன்பத்திலும் இன்பத்திலும் சுயக்கட்டுப்பாடு
5.  விடா முயற்சி
6.  சகிப்புத் தன்மை
7.  வாய்மை
8.  உள்ள உறுதி
9.  அன்பு
10. மைத்திரி ( உயிர் வாழ்வன அனைத்தின் மீதும் அன்பு கொள்ளல்)

மேற் சொன்ன பௌத்தத்தின் சாரங்களுக்கும் ஜென்னுக்கும் நெருக்காமான தொடர்பு உண்டு

இன்னும் சொல்லப் போனால் இவை நகமும் சதையும் போல்  பிணைக்கப்பட்டவை

இதனை இந்து தத்துவ மரபில் ஒப்பீடு செய்து பார்க்கையில் 

இந்து தத்துவ மரபின் கர்மயோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்றில் 

நாம் ஜென்னை ஞான யோகத்தில் அடையாளப்படுத்தி பார்க்கலாம்

ஆன்மீகம் என்பது ஒரு தனிமனிதன் தன்னை அண்ட வெளியுடன் (பிரபஞ்சத்துடன்) இணைக்கும் புள்ளியை உணர முற்படும் முடிவில்லா தேடலாகும்

இத் தேடல் பொறிமுறையை ஜென் எத்துணை வரம்புமின்றி அடையவே முற்படுகிறது

இந்த இடத்தில் ஜப்பானிய சிந்தனையாளர் சுயிகியின் ஜென் தொடர்பான கருத்துக்கள் முக்கியமானவை

ஜென் எல்லா சடங்குகள், சொர்க்கம், நரகம் என்னும் உருவாக்கங்கள் எல்லாவற்றையும்  நிராகரிப்பதாக தன் கருத்தை முன் வைக்கிறார்

ஜென்னில் வழிபாட்டிங்களில் உள்ள கடவுள்களின் சிலைகள் வெறும் காட்சிப் பொருள்களே 

மதங்கள் உருவாக்கிய எந்த கோட்பாட்டிற்கும் சம்பிரதாயங்களுக்கும், அவை சார்ந்த பிரயோகங்களுக்கும் ஜென்னில் இடமில்லை

கடவுளை நோக்கி நீ செல்ல வேண்டுமென்றால் 

உன்னையே நீ ஆழ்ந்து அகழ்ந்து உன்னையே நோக்கி நகர்ந்து கொண்டிரு என்று ஜென் சொல்கிறது

இதை சுயம் தேடும் பார்வைக் கோணத்தில் பார்த்தால் அது தவறான பார்வையே

ஓஷோவின் கூற்றுப்பிரகாரம்
காணமல் போன மூக்குக்கண்ணாடி தன் மூக்கின் மேல் இருந்து அதை கண்டுகொள்வது போன்ற உணர்வே ஜென் என்கிறார் 

இதன் மெய்யான பொருள் நீ உன்னை தியானத்தின் வாயிலாக தேடி அடை என்பதுதான்

தன்னிலிருந்து புறவயமான அனைத்தினையும் ஜென் ஆன்மீகத்துக்கு அன்னியமானதாக பார்க்கிறது 

'மனதைக் கொன்றொழி' என்னும் ஜென்னின் மேலோட்டமான கருத்தினை துருவிப் பார்க்கையில் 

ஜென் தொடர்பான புரிதல் சிக்கல்களின் இருன்மைத் தன்மை துலங்கும்

இந்த உலகின் அலங்கார ஆசைகளுக்களுக்கும், 

அவை ஏற்படுத்தும் மாய நிகழ்வுகளுக்கும் எம் மனம் அலைக்கழிக்கும் போது 

நம்முள் பொதிந்துள்ள மெய்யான உருவில்லா அகப்பொருளை உணராமலே தொலைத்து விடுகிறோம் 

ஜென் புறவயத்தின் திழைப்பால் தொலைத்த உண்மையான உன்னை தேடிக்கொடுக்கிறது 

அனைத்தும் அறிந்த நிரம்பல் நிலையை உடையவரையே நாம் சிறப்புடையவர் என்கிறோம் 

ஆனால் இதற்கு ஜென்னோ அடிதலை மாற்றிச் சொல்கிறது

காலியான பாத்திரத்தில் தான் எதையாவது ஊற்றவியலும் 

அதுபோலத்தான் வெறுமையான இடைவெளிகளால் நிரம்பிய மனதினை உடையவரிடமே உண்மையை உணர்த்தவும் அதனை உள் தரிப்பு செய்யவும் இயலுமென்கிறது ஜென்

வெறுமை என்பது இங்கு முற்றிலும் வெறுமை என்ற பொருளில் கையாளப்படவில்லை

நம்மைச் சுற்றி அகவுலகு, புறவுலகு என்னும் இருவிதமான தன்மைகள் உள்ளன

புற உலகம் என்பது போலித்தன்மைகளை உடைய நாம் அறிந்தே உலகை குறிக்கிறது 

அக உலகம் என்பது அனுபவம் 

இந்த அனுபவத்தளத்தை ஜென் என்னும் ஆழ் தியானத்தின் மூலம் தொடுகை செய்யலாம்

ஜென் கூறும் தியானம் 

ஜென் சொல்லும் தியானம் என்பது கால்களை மடக்கி இருத்தி மனத்தை ஒரு நிலைப்படுத்தி இருப்பதல்ல

மாறாக 

அது ஜென் வாழும் போது   அனுபவிக்கும் செயல் முறையின் உள்ளார்ந்த ஈடுபாட்டையே அது தியானம் எனச் சொல்கிறது

இன்னும் சொல்லப் போனால்  

நம் செயல் வடிவிலான அனுபவத்தளத்தினூடாக 

நம்மை நமக்கும் உலகிற்கும் அறிமுகம் செய்து வைக்கிறது

ஜென்னை பொறுத்தவரை தியானம் என்ற ஒன்று பிரத்தியேகமா இல்லை 

ஏனெனில் ஜென்னே தியானமாகும்

நாளும் நாம் ஆற்றும் கருமங்களின் வாயிலாக தியானம் மேற்கொண்டு ஜென்னினை அனுபவவிக்கலாம் 

நடப்பது, பேசுவது, கேட்பது, உண்பது, உறங்குவது, புன்னகைப்பது, நீராடுவது, தொழிலாற்றுவது, பூஞ்செடியை கத்தரிப்பது, பராமரிப்பது, பிரயாணம் செல்வது 

என நிகழும் நமது அனைத்து செயல்களையும் விருப்போடும் நிதானமானதாகவும் பக்குவமாகவும் அர்ப்பணிப்போடும் அதை ரசித்து ஆன்ம திருப்தியோடும், கண்ணியத்தோடும் 

நீ நீயாக இருந்து அந்த கனப்பொழுதை ரசித்து சுவைத்து வாழும் நிலையே ஜென் தியானம் ஆகும்

இந்த தியான நிலையில் எது எப்படி கிடைக்கிறதோ அதை விருப்போடு ஏற்று உன்னுள் உள்வாங்கு. 

அது எந்த நிலையாயினும் அதனை ரசிக்கத் தவறாதே என ஜென் உணர்த்துகிறது. 

இதனை ஒஷோ பின்வருமாறு சொல்கிறார்.

       *"தத்துவம் என்பது பார்ப்பது,
       ஜென் என்பது பங்கு கொள்வது"*

ஜென் நம்முள் உறங்கு நிலையில் உள்ள ஞானத்தை உசுப்பி எழுப்புகிறதே தவிர 

மாறாக அது யாரையும் ஞானியாக மாற்றுவது இல்லை

ஜென்னை பொறுத்தமட்டில் இவ்வுலகில் எவரும் புத்தனாக வேண்டுமென்றில்லை. 

ஏனென்றால் 

புத்தன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சொல்கிறது ஜென் 

எப்படியென்றால் நாமே ஒரு புத்தர் தான். 

நமக்குள் புத்தன் இருக்கிறான் அதை நாம் வெளிப்படுத்துவதில்லை 

ஜென் அதை வெளிப்படுத்த முனைகிறது. 

      ''விலகியிரு 
       உலகம் உன்னுடையதே
       ஊனுக்குள் ஒரு புத்தன்''
                (புனான்-ஜென் ஹைக்கூ)

மேலே குறிப்பிட்ட ஜென் ஹைக்கூ செல்வது என்னவென்றால்  

முதலில் உன் உடலுக்குள் இருக்கும் புத்தனை கண்டுபிடி 

அப்படி நீ கண்டுபிடித்தால் இந்த உலகம் உனதானதே. 

கண்டு பிடிக்க போலியும், பொய்மையும், பொறாமையும் சூழ்ந்த இந்த புறவுலகை விலக்கும்படியாக மேற்குறிப்பிட்ட ஹைக்கூ வலியுறுத்துகிறது.

ஜென்னின் உன்னதமான பண்புகள்

பக்குவப்பட்ட மனத்தின் அனுபவத்திரளால் எழும் உணர்வின் படிநிலை ஜென் ஆகிறது. 

ஜென் மனிதனது ஆன்ம உணர்வாகும் (Zen is the spirit of a man) 

ஜென் உட் தூய்மையையும் நற் தன்மையையும் நம்புகிறது

ஜென் தன்னை எவரிடமும் எந்த எழுத்துரு கொள்கையோ, அல்லது வாய்வழிக் கொள்கையோ மனிதனிடத்து திணிப்பதில்லை

தவிர இதை செய், அதை செய் அப்படி நட, இப்படி நட, குறித்த ஒன்றையே பின்பற்று என்றெல்லாம் ஜென் எப்போதும் திணிப்பதில்லை 

'நீ நீயாக இரு' இதைத் தவிர வேற எந்த போசகமும் ஜென்னிடம் இல்லை

ஜென் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட உன்னதமான உணர்வு

மத நோய் பிடித்தவர்கள் ஜென்னினை உணர்ந்தால் அது அவர்களுக்கு நல் மருந்தாகும்

ஜென் தன்னை பௌத்தத்தின் உயிராக இருப்பினும் 

அது அனைத்து மத, தத்துவங்களின் ஆன்ம வடிவாகும்

ஜென் அழகியல், ஆனந்தத்துடான ஒரு அற்புதமான உணர்வு நிலை

இந்த உணர்வில் எந்த சுமையுமில்லை 

இன்னும் சொல்லப்போனால் இது சுமைகளை இறக்கும் அனுபவ தியானமாகும்

ஜென் பட்டாம்பூச்சிக்கு ஒப்பானது அதற்கு பறப்பது மாத்திரமே நோக்கல்ல

இயற்கையின் நிரல்படுத்தலில் உள்ள சீரான அனுபவிப்பை ஏற்க, பிரயோகிக்க ஜென் நமக்கு கற்றுத்தருகிறது

ஜென் மனிதனது ஜனனத்தையும் மரணத்தையும் நிகராக காண்கிறது

இரண்டுமே அழகானவை

இந்த முழு அண்டமே அழகானது 

அதில் நாம் ஜனிப்பதும் அழகு 

அதுபோல் மரணிப்பதும் அழகு 

உயிரின் தற்காலியத் தன்மை காலியாகும் முன் 

அழகை ரசித்துவிடு என்கிறது ஜென்.

           ''விடை பெறும் இலை
           ரகசியம் சொல்லிச் சென்றது
           மரணத்துக்குரியதான''
                  (லிப்னானி-சுபிபோதகர்)

இந்த ஹைக்கூ ஒவ்வொரு மனிதனின் பிறப்பு நிச்சயமோ, இல்லையோ 

ஆனால் இறப்பு நிதர்சனமானது எனச் சொல்கிறது. 

மற்றும் ஜென் நிலை என்பது அளவிட முடியாத ஒன்று 

அது வற்றுவதுமில்லை நிரம்பி வழிவதுமில்லை 

ஜென் என்றும் ஒரே நிலையில் தான் இருக்கிறது

இதுதான் ஜென்னிற்கான திட்டவட்டமான  வரைபிலக்கணம் என யாராலும் கூறவியலாது

ஏனெனில் அது சட்டகத்துக்குள் உட்பாட வாழ்வின் அனுபவ தியானம். 

இங்கு ஒவ்வொருவரின் வாழ்வும் அனுபவமும் ஒரே மதிரியாக அமைவதில்லை. 

ஜென் ஒன்றின் இழப்பால் வரும் இடை வெளியை இன்னொர் தரிசனத்தின் வாயிலாய் நிரப்பும் தன்மையை உடையது

இதனை ஜப்பானிய கவிஞர் மோரிடாகேவின் பின்வரும் சென் ஹைக்கூ தெளிவு படுத்தும் 

       உதிர்ந்த பூ
       கிளைக்கு திரும்புகிறதோ?
       வண்ணத்துப்பூச்சி
                        (மோரிடாகே)

இங்கு உதிரும் பூவின் வெற்றிடத்தை மோரிடாகே வண்ணத்துப்பூச்சியினால் நிரப்பி 

அதன் பின்வரும் எதிர்கால வசந்த அழகையும் முன்னறிவிப்பு செய்துள்ளார். 

ஹைக்கூவுக்குள் ஜென்னின் பரவல்

ஜென் தத்துவம் விளக்க தனியான நூல்களோ , ஜென் குறித்த வியாக்கியானங்களோ எதுவுமில்லாதபோதும் 

இது எவ்வாறு மக்களிடத்து சென்றடைந்தது என்பது சிந்திக்க வேண்டிய விடயமே

ஜென் தத்துவத்தை உணர்ந்து அதனுள் உறைந்த தத்துவ ஞானிகளின் வாழ்க்கை அனுபவத்தில் இடம் பெற்ற சம்பாஷணைகளினதும், 

நிகழ்வுகளினதும் கதைகள் மூலமாகவும் 

அத் தத்துவ ஞானிகளின் ஜென் கவிதைப் படைப்புக்களாலும் 

ஜென் பழமொழிகளாலும் ஜென் தத்துவம் உலக மக்களிடத்து போதிக்கப்படுகிறது 

ஜென் கவிதைகள் என்னும் போது ஹைக்கூ கவிதைகளும் இதில் பெருமளவு பங்கினை செய்து வருகிறது 

ஜென் தத்துவம் என்பது வாழ்வின் குறிக்கோளற்ற தன்மையாகும் 

எதனையும் அப்படியே சொல்லிவிடு என்பதாக அமைகிறது

       காட்டுவாத்துக்குத் தன் நிழலை
       நீரில் பதுக்கும் நோக்கில்லை
       அதன் உருவத்தைப் பிரதிபலிக்கும் 
       எண்ணம் நீருக்கு இல்லை

இந்த ஜென் தத்துவத்தின் மூலத்திலிருந்தே ஹைக்கூவிற்கான அடிப்படை வியாக்கியானம் எழுகிறது

ஜென் சீனாவிலிருந்து தோற்றம் பெற்றாலும் 

ஹைக்கூ ஜப்பானிலிருந்தே தோற்றும் பெற்றது

எடோ காலத்திலே பூரணமான ஹைக்கூ வடிவம் தோற்றம் பெற்றாலும் 

முரோ மொச்சி (1333-1603) காலத்திலும் ஹைக்கூ சாரங்களை காணலாம் 

எடுத்துக்காட்டாக 

       உலகம் நகரும்
       தூறலின் கூரையாக
       பார்த்துக்கொண்டிரு

கி.பி 1471ல் எழுதப்பட்ட இக் கவிதையில் ஹைக்கூ தன்மைகளை காணலாம்

இந்த கவிதை எதிலும் சாட்சியாய் இரு என்னும் ஜென் நிலையை சொல்வதாக உள்ளது

எடோ காலம் (கி.பி 1603-1863 வரை)

இக்காலத்தில் தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோன்றியது

மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது

எடோ காலமே உண்மையில் ஹைக்கூவுக்கு முதன்மை அளித்த காலமாகும்

இக்காலமே பெரும்பான்மையான ஹைக்கூ கவிஞர்களை அளித்த காலமும் ஆகும்

ஜென் தத்துவ ஞானிகளும் கவிஞர்களும் தங்களின் வாழ்க்கையோடு ஒன்றித்து தங்களின் கவிதைகளை படைத்தார்கள்

அவர்கள் இயற்கையின் ஆச்சரிய, சாதாரண தரிசனங்களோடு தம்மை கலந்தார்கள்

எல்லாம் அதனதன் இடத்தில் மிகச் சரியாகவே உள்ளது என்பதே ஜென்னின் தத்துவமான தரிசனமாகும்

ஆனால் அந்த இயற்கைக்குள் நுழையும் ஒரே வழி ஆழ்ந்த ரசிப்பு மாத்திரமே

ஜென் ஹைக்கூவில் பௌத்த மதத் துறவிகள் மனத்தின் மீதான அகவிசாரிப்புக்களையும், இயற்கை தரிசனங்களில் உறைந்துள்ள ஞானத்தின் துலங்கல்களை பதிவு செய்தார்கள்

மனிதனின் மனமும், மௌனமும் இடைவிடாது இந்த சமூகத்தோடு பேசும் இத்தகு சிந்தனையாக்கத்தின் மீதான ஜென் முகிழ்வே ஹைக்கூ.

ஜப்பானிய ஜென்னில் மூங்கிலைப் பற்றி அறிவதானால் மூங்கிலாக மாறு

தேவதாருவைப்பற்றி அறிவதானால் தேவதாருவாக மாறு என்னும் கருத்துள்ளது

ஜப்பானிய மொழியில் உள்ள ''நரநள'' என்னும் சொல்லுக்கு 

ஒன்றினுள்ளே நுழைந்து 

அதற்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து 

அதற்கு இலக்கிய வடிவம் கொடு என்னும் பொருளுண்டு 

அவ்வாறே ஜென் துறவிகள் தாங்கள் காணுற்ற இயற்கையின் தரிசனங்களை தமது ஹைக்கூ படைப்பின் வாயிலாக வெளிப்படுத்தினர்

அவர்கள் தத்தமது தரிசனப்பதிவுகளை ஹைக்கூவாக ஆக்குவதற்கு 

அவர்கள் பல காலங்கள் பல நெடுதூரபயணங்களை மேற்கொண்டார்கள்

அதன் மூலமாக தாம் ரசித்து அனுபவித்தவற்றை ஹைக்கூவாக படைத்தார்கள்
      
         அழகிய பொருட்கள், சம்பவங்கள் நிலையற்றவை
         கனத்தில் மின்னி மறையக்கூடியவை 
         ஆனால் அழகு என்னும் தத்துவம் நிரந்தரமானது
                                 (ஜென் தத்துவம்)

மேற்குறித்த தத்துவத்திற்கு இயைபாக அவர்கள் இயற்கையின் அழகில் இருண்மைப் பட்டிருக்கும் ஜென் ஞானத்தை  மறைமுகமாக இயற்கையின் படிம நிலையினூடாக வெளிப்படுத்தினர்

இவ்வாறு அவர்கள் தமது ஹைக்கூ பதிவுகளை மேற்கொள்ளும்போது வாசகர் பரப்பிலிருந்து வரும் எத்தகைய சிந்தனை எதிர்பார்ப்பையும் எதிர்பார்த்து அவர்கள் ஹைக்கூவை ஆக்குவதில்லை 

அவர்களின் நோக்கம் தம் அனுவப தரிசனத்தை மாத்திரம் வெளிப்படுத்துவதே 

அதற்கு பின் அதனுள் உறைந்திருக்கும் ஜென் மெய்நிலையை தேடும் பொறுப்பை வாசகரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்

ஹைக்கூ பற்றி பேச வந்த பாரதி

       ''கவிதை எழுதுபவன் கவியன்று
       கவிதையே, வாழ்க்கையாக உடையவன்
        வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி''

என்கிறார் 

இவரது கருத்தின்படி கவிஞனின் வாழ்வியலின் அனுபவ மனநிலைகளே கவிதையாகச் சொல்லப்படுகிறது

இதனையே ஜப்பானிய ஹைக்கூவாளர்கள் செய்தார்கள்

அவர்களின் சொந்த அனுபவ தளத்திலே ஹைக்கூ எழுந்தது

இதனை ஜட்டோ ஜின் சாய் (1627-1705) அவர்கள்

''ஜப்பானிய கவிதையானாலும் வேறு எம் மொழிக் கவிதையானாலும் 

கவிதையை புரிந்து கொள்ளல் என்பது கவிஞனை புரிந்துகொள்ளல் என்பதாகும்.''எனக் கூறியுள்ளார் 

ஆகவே ஜென் ஹைக்கூவை புரிய அதைப்படைத்தவனின் வாழ்க்கை பின்புலம் புரிவது அவசியமானது  

ஜென்னை அவன் வாழ்க்கையினூடாகவே உணர்த்துகிறான் 

அதற்கு ஹைக்கூ என்னும் உன்னதமான கவிதைக் கருவியை பயன்படுத்துகிறான்

ஆனால் ஜப்பானியர்கள் ஹைக்கூவை கவிதையாக கொள்ளாது

மாறாக அவற்றை ஜென் நிலைகுறிக்கும் கலைப் பொக்கிஷமாவே அவர்களால் உணரப்படுகிறது. 

       ஹைக்கூவில் பொருளை தேடாதீர்கள்.
       உங்களைத் தேடுங்கள் நிச்சயம் கிடைப்பீர்கள்
                          (தமிழன்பன்)

இங்கு தமிழன்பன் அவர்கள் ஹைக்கூ எழுதுவோனையும் வாசிப்போனையும் தன்னை தேடும் முறைமையாகவும் பொருளை புனைந்து ஹைக்கூ படைக்க வேண்டாமெனவும் சொல்லியுள்ளார் 

இவ்வாறான இந்த கருத்தாக்கம் ஜென்னின் மூல தத்துவமே.

அன்பு, காருண்ணியம், தான அளிக்கை, மனசுத்தி, இயற்கையை நேசித்தல் போன்றவற்றை 

உன்னுள் உள்வாங்கி வரவேற்கும் ஆழ்நிலை தியானம் ஹைக்கூவின் ஜென் நிலையாகும் 

ஹைக்கூ இயற்கையை பாடுவதுபோல் வெளித் தோற்றமளித்தாலும் 

அது மனிதனை பகுத்தறிவிலிருந்து அப்புறப்படுத்தி ஆறாம் அறிவையும் தாண்டி பிறிதொரு அறிவை மனிதனுக்கு வழங்கக்கூடிய மகத்துவமிக்க ஜென்னின் தொடர்ச்சியாகும்
                       -முற்றும்-

ஹைக்கூ தொடர்பான பிறிதெரு கட்டுரையோடு மீண்டும் வருவேன்.
பா.தா  (ராஜன்,மகிழூர்,மட்டக்களப்பு)

கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள் 
1. ஓஷோ தமிழ் ஹைக்கூவில் புரிதல்
2. தமிழ் ஹைக்கூவில் மொழி வீச்சு
3. ஜென் கதைகள்
4. புத்தரும் அவரது போதனைகளும்
5. ஹைக்கூ கவிதை வரலாறும் மித்திராவின் கவிதைகளும்
6. பௌத்த ஜாதகக் கதைகள்  🌸

💮 பகிர்வு 💮