Friday 13 March 2015

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள்.

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள்.
ஓஷோ பதில்கள்……………….
விழிப்புணர்வும் மையமும் ............ தொடர்ச்சி……………
எனவே நிறைமனதுடன் செயலாற்றுங்கள். இது ஒரு நீண்ட கடினமான பயணம். மேலும், ஒரு சிறு நொடிப் பொழுதுகூட விழிப்புணர்வுடன் இருப்பது கடினம். இந்த மனம் இடைவிடாது கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று அல்ல. இது கடினமானது, இது சிரமமானது. ஆனால் இது சாத்தியமில்லாதது அல்ல. இது சாத்தியமானது. நம் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியப்படும். முயற்சி மட்டுமே தேவை; உள்ளம் நிறைந்த முயற்சி மட்டுமே தேவை. எதையும் விட்டு வைக்கக் கூடாது; உங்களுக்குள் எதுவும் தொடப்படாமல் விட்டு வைக்கப்படக் கூடாது. விழிப்புணர்வுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். அதன்பிறகு மட்டுமே, அந்த உள் ஒளிச் சுடர் கண்டுபிடிக்கப் படும். அது அங்கேதான் உள்ளது.
இப்போது இருக்கின்ற மதங்களிலோ அல்லது இனிமேல் இருக்கப் போகின்ற மதங்களிலோ உள்ள முக்கியமான ஒற்றுமையை ஒருவன் தேடிச் சென்றால், அங்கே இந்த விழிப்புணர்வு என்கிற ஒரு சிறு வார்த்தைதான் கண்டு கொள்ளப் படும்.
இயேசு ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரிய வீட்டின் எஜமான் வெளியில் சென்றார். அப்போது அவர் தனது வேலைக்காரர்களிடம், தான் எந்த நேரத்திலும் திரும்பி வந்துவிடுவதாகவும், அவர்கள் இடைவிடாது எப்போதும் உஷாராக விழித்திருக்கும்படியும் கூறி விட்டுச் சென்றார். ஆகவே, ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதாயிற்று. எஜமான் எந்த வேளையிலும் வரலாம்! ஒரு குறிப்பிட்ட நேரமோ, குறிப்பிட்ட தேதியோ, குறிப்பிட்ட வேளையோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட தேதி இருந்தால் அப்போது நீங்கள் அதுவரை தூங்கலாம். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் செய்துவிட்டு, எஜமான் வருகின்ற அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் உஷாராக இருந்தால் போதும். ஆனால் எஜமானனோ, “நான் எந்த நேரத்திலும் வருவேன். இரவும் பகலும் என்னை வரவேற்பதற்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்”. என்று கூறிவிட்டு போய் விட்டார்.
வாழ்க்கையின் கதையும் இதுதான். நீங்கள் எதையும் ஒத்திப் போட முடியாது, எந்த நேரத்திலும் எஜமான் வரலாம். ஒருவர், இடைவிடாது விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த குறிப்பிட்ட தேதியும் இல்லை. அந்த திடீர் நிகழ்வு எப்போது நடக்கும் என்றும் ஒன்றுமே தெரியாது. எனவே, ஒருவர் ஒரே ஒரு காரியம் மட்டுமே செய்ய முடியும். அதுதான் விழித்துக் கொண்டு காத்திருப்பது.
 

இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வு முழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்..
நீங்கள் வட்டத்துக்குள் வெளிப்பரப்பிற்கு நகர்ந்து செல்லலாம். – அதன்பிறகு, நீங்கள் தன்னுணர்வற்ற நிலைக்கு நகர்ந்து செல்வதாகிவிடும். உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், எங்கோ உட்கார்ந்துகொண்டு இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்களை மறந்து போக முடியும், – அப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள். அதே போன்று, பகவத்கீதையை படிக்கும்போதும் அல்லது பைபிள் அல்லது குரானை படிக்கும்போதும் நீங்கள் உங்களை மறந்து போக முடியும் – இப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள்.
நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமெனில், அதன்பிறகு நீங்கள் மையத்தை நெருங்கி வருவீர்கள். அதன்பின்னர், ஒருநாள் திடீரென்று நீங்கள் அந்த மையத்தில் இருப்பீர்கள். அதன்பிறகு உங்களுக்கு சக்தி வந்துவிடும். அந்த சக்திதான் நெருப்பு. இந்த பிரபஞ்சம் முழுவதும், இந்த உயிர்கள் அனைத்தும் அந்த சக்தியுடன்தான், அந்த நெருப்புடன்தான் உள்ளது. நெருப்பு என்பது பழைய பெயர். இப்போது அவர்கள் அதை மின்சாரம் என்று அழைக்கின்றனர். மனிதன் அதை அநேக அநேக பெயர்களால் அடையாளமிட்டு வந்திருக்கிறான். ஆனால் நெருப்பு என்பது சிறந்தது. மின்சாரம் என்றால் கொஞ்சம் உயிரற்றது போலத் தெரிகிறது. ஆனால் நெருப்பு என்னும்போது, அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தெரிகிறது.