🍃எண்ணங்களோடு பந்தப்படாதே!🍃
எண்ணங்களுடன் பந்தப்பட்டுப் போகாதீர்கள். நீங்கள் அவற்றிலிருந்து விலகி நிற்கும்போது அவை உயிரற்று பலமிழந்து போய்விடுகின்றன. அவற்றுக்குச் சக்தி கிடைப்பதில்லை.
விளக்கின் சுடரை அனைத்துவிட ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அதற்குப் பதில் விளக்குக்கு மேலும் எண்ணெய் வார்க்கிறீர்கள்.
அதுதான் பிரச்சனை.
ஒரு கையால் விளக்கின் சுடரை அணைக்க முயன்று கொண்டே மறுகையால் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றவும் செய்கிறீர்கள்.
முதலில்
எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள்.
விளக்கில் மீதமிருக்கும் எண்ணெய் விரைவில் தீர்ந்துவிடும். பிறகு விளக்கு தானே அணைந்து போய்விடும்.
விளக்கிற்கு எது எண்ணெயாக இருக்கிறது? ஏதாவது ஒரு எண்ணம் உங்களை ஆக்கிரமிக்கும் போது நீங்கள்
அதனுடன் கலந்து விடுகிறீர்கள்.
❤கோபம் வந்தால் நீங்கள் அதுவாகவே மாறிவிடுகிறீர்கள். அப்போது உங்கள் சக்தி அதனிடம் சென்று சேர்ந்துவிடுகிறது. கோபம் உங்கள் எஜமானனாக மாறிவிடுகிறது. நீங்கள் அதன் நிழல் பிம்பமாகிவிடுகிறீர்கள்.
கோபம் வரும்போது விலகி நின்று கவனித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் இப்படிச் செய்வது கடினமான காரியமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியிருக்கும். படிப்படியாக நாளடைவில் அது பழக்கத்திற்கு வந்துவிடும்.
உங்கள் எண்ணங்களுக்கும் உங்களுக்கும் சற்று இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எவ்வளவு அதிகமான தூரத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் எஜமானத்துவம் ஸ்தாபிதப்படத் தொடங்கும்.
பசியாக இருக்கும்போது "எனக்குப் பசிக்கிறது" என்று சொல்லாதீர்கள்.
"உடம்பு பசியுடன் இருப்பதைக் காண்கிறேன்" என்று சொல்லுங்கள்.
உண்மையில் அதுதான் நிஜம்.
உடலுக்குப் பசியெடுக்கிறது.
நீங்கள் அதை பார்க்கும் பார்வையாளராக இருக்கிறீர்கள்.
உயிருக்குப் பசி இருக்காது.
சாப்பிடும் உணவு உடலையே சென்று சேர்கிறது. தசையும், ரத்தமும் வேண்டும் என்று உடல்தான் விரும்புகிறது.
உடல்தான் சோர்வடைகிறது. உயிர் தளர்ந்து போவதில்லை. உயிர் எண்ணெய் இல்லாது எரியும் விளக்கு போன்றது. உணவோ எண்ணெயோ அதற்குத் தேவையில்லை. உடலுக்கு உணவும், நீரும் தேவைப்படுகிறது. அதுவே அதன் எரிபொருளாகும்.
உடல் இயந்திர இயக்கம் போன்று செயல்படுகிறது. உயிருக்கு அந்த இயக்கம் கிடையாது. பசியோடு இருக்கும்போது உடலுக்கு உணவளியுங்கள். உடல் பசியுடன் இருக்கிறது.
அதை நீங்கள் தள்ளி நின்று பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவில் வையுங்கள். அதன் தாகத்துக்குத் தண்ணீர் கொடுங்கள்.
அப்படித் தருவது அவசியமாகும்.
இயந்திரத்திற்கும் அதை நீங்கள் கொடுக்கிறீர்கள்.
உடல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். உடல் இயந்திர இயக்கம் போன்றது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பயன் அளவற்றது.
உடல் ஏணிபோன்றது.
அது உங்களைத் துயரம் நோக்கி அழைத்துச் செல்கிறது. அதுவே பேரின்ப நிலை நோக்கியும் கூட்டிச் செல்கிறது.
அதன் ஒரு முனை தரையையும் மறுமுனை வானத்தையும் தொட்டுக் கொண்டிருப்பது அதன் ஸ்பெஷாலிடி!
அந்த ஏணியைப் பயன்படுத்தி நீங்கள் கீழேயும் வரலாம், மேலேயும் உயரலாம். உடல் என்ற ஊடகத்தின் துணையுடன் நீங்கள் நரகத்தில் விழலாம், சொர்க்கத்துக்கும் போகலாம்.
உடலின் உதவி பெற்று நீங்கள் நித்திய விடுதலை பெறவும் முடியும்.
🍃ஓஷோ🍃