Wednesday, 12 February 2020

தியானம்

முயற்சியற்ற தியானம்

ஜென் – மரபில், முயற்சியற்றதன்மை மிகவும் வலியுறுத்தப்படும் அதில்,

குரு சீடனிடம் கூறுவார் – வெறுமனே அமரு. எதுவும் செய்யாதே. – அந்த சீடன்முயற்சிப்பான். முயற்சிப்பதைத் தவிர நீ வேறு என்ன செய்ய முடியும். அந்த சீடன்
வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் எதுவும் செய்யாமலிருக்க முயற்சிக்கிறான். அப்போது குரு தனது கைத்தடியால் அவனது தலையில் அடித்துவிட்டுக் கூறுகிறார் – இதை செய்யாதே. 

நான் உன்னை வெறுமனே அமர முயற்சிசெய்யச் சொல்லவில்லை, அப்போது அது செய்வதாகி விடுகிறது. எதுவும் செய்யாமலிருக்க முயற்சி செய்யாதே, அப்போது அதுவும் ஒரு செயல்பாடாகி விடுகிறது. வெறுமனே உட்கார்.

நான் உன்னிடம் வெறுமனே உட்கார், என்று கூறினால், நீ என்ன செய்வாய். நீ ஏதாவது செய்வாய், அது அதை வெறுமனே உட்காருவதாக இல்லாமல் செய்துவிடும். ஒரு செயல்பாடு நுழைந்துவிடும். நீ முயற்சிசெய்து உட்கார்ந்து கொண்டிருப்பாய், ஒரு இறுக்கம் அங்கிருக்கும். உன்னால் வெறுமனே உட்கார முடியாது. இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் நீ வெறுமனே உட்கார முயற்சிக்கும் கணத்திலேயே, அது சிக்கலாகி விடுகிறது. வெறுமனே உட்கார முயற்சிப்பதே அதை சிக்கலாக்கி விடுகிறது. ஆகவே என்ன செய்வது.

வருடங்கள் கழிகின்றன, சீடன் அமர்ந்துகொண்டே இருக்கிறான், தவறுசெய்வதாக குருவால் தண்டிக்கப்பட்டும், குறைகூறப்பட்டும் வருகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கொண்டே போகிறான், தினமும் அவனுக்கு தோல்விதான், ஏனெனில் முயற்சி அங்கிருக்கிறது. மேலும் நீ குருவை ஏமாற்ற முடியாது. ஆனால் ஒருநாள், பொறுமையோடு உட்கார்ந்திருக்கையில், இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட மறைந்துவிட்டது, ஒருநாள் திடீரென அவன் உட்கார்ந்திருக்கிறான் – ஒரு மரம் போல, ஒரு பாறை போல – எதுவும் செய்யாமல். அப்போது குரு கூறுகிறார் – இதுதான் சரியான முறை. இப்போது நீ அதை அடைந்துவிட்டாய். 

இதை நினைவில் வைத்துக்கொள். இதுதான் உட்காரும் முறை.- ஆனால் இந்த முயற்சியற்ற நிலையை அடைய நிறைய பொறுமையும், நீண்ட முயற்சியும்
தேவை. ஆரம்பத்தில் முயற்சி தேவை, செயல்பாடு தேவை, ஆனால்      ஒரு தேவைப்படும் தீமையாக ஆரம்பத்தில் மட்டும் இது தேவை. மேலும் நீ
இதை தாண்டி செல்ல வேண்டும் என்பதை நீ தொடர்ந்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். 

நீ தியானத்திற்காக எதுவுமே செய்யாத ஒரு கணம் கண்டிப்பாக வரும் – வெறும் இருப்பாக அங்கு இருப்பாய், அது நிகழும், வெறுமனே நிற்கையில் அல்லது அமர்ந்திருக்கையில் அது நிகழும். எதையும் செய்யாதிருக்கையில், வெறுமனே விழிப்புணர்வோடிருக்கையில், அது நிகழும்.

இந்த எல்லா யுக்திகளுமே உன்னை ஒரு முயற்சியற்ற கணத்திற்கு கொண்டுவர உதவி செய்பவைகளே. உள் நிலைமாற்றம், உள் நிலையுணர்வு, முயற்சியினால் நிகழாது, ஏனெனில் முயற்சி ஒருவகை இறுக்கம். முயற்சியில் நீ முழுவதுமாக தளர்வடைவது சாத்தியமல்ல, முயற்சியே தடையாக மாறிவிடும். இந்த பின்புலத்தை மனதில் வைத்துக்கொண்டு நீ முயற்சித்தால், மெது மெதுவாக அதையும் விடக்கூடிய திறனை நீ பெறுவாய்.

ஓஷோ----