சுமைகளை_சுமக்காதீர்
வாழ்கையின் அடித்தளத்தை உறுதியாக போடுவதற்கான வழிமுறைகள் என்ன? எந்த அர்த்தமும் இல்லாமல் வாழ்க்கை அடித்து செல்லும் வழியில் செல்லாமல் எதிர்நீச்சலடித்து வெற்றி பெறுவது எப்படி?
எந்த விடயமும் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக உங்கள் கடந்த காலத்தில் வலிகளை தாங்கி செல்வீர்களானால் உங்கள் எதிர்காலமும் அதே அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். இருள் படிந்த கடந்த காலம் வெளிச்சமான எதிர்காலத்திற்கு எதிரானதாகும்.
கடந்தகாலத்தில் அவமானப்-படுத்தப்பட்டிருக்கலாம். நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், தோல்வி எதுவாக இருந்தாலும் முடிந்தது, முடிந்தது என எதிர்காலத்தை குறித்தான எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு யாராவது செய்த துரோகத்தை மனதில் வைத்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை பின்னுக்கு தள்ளும். கசப்பான கடந்தகால சுவடுகளை மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.
உங்களை யாராவது ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அது உங்கள் தவறல்ல. ஆனால் அதிலிருந்து வெளியேறாமல் கடந்த காலத்தை நினைத்து வெம்பி கொண்டிருப்பது நீங்கள் செய்யும் தவறு தான்.
எடுக்கும் முடிவுகள் உங்களுக்கானதாக இருக்கிறதா இல்லை வேறு யாரையாவது திருப்திப்படுத்தவோ அல்லது சூழ்நிலைக்கு அடிபணிந்து முடிவெடுக்கிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையின் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு வாழ வேண்டும். பிறரின் வாழ்க்கைக்குள் நீங்கள் சோளக்காட்டு பொம்மை போல் கோமாளி ஆகிவிடாதீர்கள். சூழ்நிலை உங்களை பின்னுக்கு இழுத்தால் நீங்களும் அதற்கு கட்டுப்பட்டு அடித்துச் செல்லப்படாதீர்கள்.
உங்கள் எல்லை இதுதான் என வரையறுத்துக் கொள்ளாதீர்கள். இயலாதது என்று எதுவுமே இல்லை. சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை. உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை தான் முக்கியமானது.
உங்களை உங்கள் மனதும், கடந்தகால கசப்பான அனுபவங்களும் வேட்டையாடாமல் இருந்தால், பிறரால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க இயலாது.
வாழ்க்கையின் உறுதியான அடித்தளத்திற்கு அதிகமான பணம் தேவை என பலரும் நினைக்கிறார்கள். பணத்தை மட்டும் கணக்கிட்டு எடுக்கும் முடிவுகள் மடமையானதாகவே முடியும். அது தவறான பழக்கங்களையும் பிரச்சனையிலும் கொண்டு சேர்க்கும்.
முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பிடித்த வேலையை செய்யும்போது பணமும் பொருளும் தானாக வந்து சேரும். பணத்தை மட்டும் கணக்கிட்டு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தால் தோல்வியே மிஞ்சும்.