Sunday, 2 February 2020

அவசரம்





இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.. எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகி விட்டதை தினம் தினம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

அர்ஜன்ட்( Urgent) என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் 

பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவது இல்லை.

 மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டி உள்ளது. அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும்,

அதிகபட்சமாக அவசியம் இல்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை.

அதிகமாக அவசரப்படுவதால் சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலக, செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப்போய் விடுகிறது. 

ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது.

இன்னும் சொல்லப் போனால் பின் விளைவுகளை யோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது. 

அப்படியானால் எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.

ஆம், நண்பர்களே.,

நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். 

அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்ப்படுவதை தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து நிம்மதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.

Thursday, 30 January 2020

ரசிப்பு

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்!!*

விரித்த படுக்கை விரிப்பில் 
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்*!!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு 
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன்*!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!*

*கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது*

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ? 

மழலை மொழியில் 
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில் 
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு 
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!*

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை      அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி 
அலைபேசியில் விசாரிப்பு.

*நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.*

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

*நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!*

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

*யாரோ  ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.*

*வாழ்க்கையை ரசித்து அனுப வியுங்கள்*.

Saturday, 4 January 2020

அடிமை

*ஓஷோவின் ஞானக் கதைகள் :*
   
 . ஒரு  நாள்  இரவு  ஒரு  சந்நியாசி  அரண்மனைக்கு  வந்தார்.  அரசனின்  அவையிலிருந்து  அறிவைப் பெறுவதற்காக  அவருடைய குரு அவரை அனுப்பியிருந்தார்.  
        அரசவைக்குப் புறப்படுவதற்கு முன் சந்நியாசி  குருவிடம்  கேட்டார்:
         "தவ உலகமாகிய இந்த  ஆசிரமத்தில்  கற்றுக்  கொள்ள முடியாததை எப்படி  ஒரு  அரசனின்  அரண்மனையில் கற்றுக்  கொள்ள முடியும்?"
        குரு  சொன்னார் :
         "பேசாமல்  நான்  சொல்வதைக் கேள். அங்கு  போய் அரசனைக் கேட்டுக் கொள்!"
     சந்நியாசி  அரண்மனையை அடைந்த போது அரசவையில் உள்ளவர்கள்  மது அருந்திக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருந்தார்கள். 
         இவற்றைக் கண்டதும்  சந்நியாசி  துணுக்குற்றார்.
         'நாம் ஏன்  இந்த  சங்கடத்தில்  மாட்டிக் கொண்டோம்? நம்மை முட்டாளாக்கி  விட்டார்கள்.  குரு  என்னை ஏளனத்துக்குள்ளாகும்படி செய்து  விட்டார்.  ஒருவேளை  நான்  இல்லாமல் இருப்பது  அவருக்கு  விடுதலையாய் இருக்கிறது  போலும். ஆனால்  இப்போது  திரும்பிச் செல்வது முறையற்றது' என்று  தனக்குள்ளேயே  சொல்லிக் கொண்டார். 
          அரசன், சந்நியாசியை வரவேற்று மிகவும்  உபசரித்தான். அவரை கண்டிப்பாக அன்று  இரவு அரண்மனையில் தங்கிச் செல்லுமாறு  வற்புறுத்தினான். 'அன்று இரவு அங்கு  தங்கிச் செல்வது அர்த்தமற்றது' என்று  சொன்னார்  சந்நியாசி. 
          "தாங்கள்  நாளை காலை குளித்து உணவருந்திவிட்டுச் செல்லலாம்" என்று  அரசன் கூறினான்.  
        சந்நியாசி  தங்கினார். 
        அன்று இரவு முழுவதும் அவருக்கு  நித்திரை இல்லை.  
        'இது பைத்தியக்காரத்தனம். மது தாராளமாக  உபயோகிக்கப்படுவதும், அழகிய மாதுகள் நடனம் ஆடுவதும், செல்வம் எங்கும் கொட்டிக் கிடப்பதும், ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்த அரண்மனையிலிருந்து எப்படி நான் ஞானத்தைப் பெற முடியும்?  நான்  மிகவுயர்ந்த ஞானத்தைத் தேடிச்  செல்பவன். இன்று இரவை நான் வீணாக்கி விட்டேன்! ' என்று  வருந்தினார்  சந்நியாசி. 
          காலையில்  அவர் எழுந்தவுடன்  அரசன் அவரை அரண்மனைக்குப் பின்னால்  உள்ள  நதியில் நீராட அழைத்தான். 
        அவர்கள் நீராடிக் கொண்டிருக்கும்  போது பயங்கரக் கூச்சலைக் கேட்டனர். 
         அரண்மனை நெருப்புப் பற்றி  எரிந்து கொண்டிருந்தது. தீயின் ஜூவாலைகள் வானளாவிச் சென்றன. 
           அரசன் சந்நியாசியைப் பார்த்து, "இதைப் பார்த்தீர்களா?" என்றான், நெருப்பைச் சுட்டிக் காட்டி. 
          சந்நியாசி  நதியை விட்டு வெளியேறி, "நீங்கள்  என்ன  சொல்கிறீர்கள்? அங்கு  பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?  என்னுடைய துணிகள் அரண்மனையில் இருக்கின்றன. அவையும் தீப்பற்றிவிடும். நான்  ஓடுகிறேன்" என்று  ஓடத் துவங்கினார். 
          அவர்  அரண்மனையை  நோக்கி  ஓடும் போது, 'அரசனது அரண்மனையே தீப்பற்றி எரிகிறது.  ஆனால்,  அவர் நதியில் நின்று  கொண்டிருக்கிறார். நானோ அங்கிருக்கும் கோவணத்துணியை எடுத்து  வர ஓடுகிறேனே' என்று  அவர் மனதில்  பட்டது. திரும்பி வந்தார். 
        தண்ணீரில்  நின்றபடி சிரித்துக் கொண்டிருக்கும்  அரசனது கால்களில் விழுந்தார். பிறகு,
       "உங்களுடைய அரண்மனையே தீப்பற்றி எரிந்து  கொண்டிருக்கிறது. நீங்கள்  இப்படி  நின்று  கொண்டிருக்கிறீர்களே? இதை என்னால் புரிந்து  கொள்ள  முடியவில்லை " என்றார்.  
         அரசன் சொன்னான் :
        " நான்  இந்த  அரண்மனையை என்னுடையதாகக் கருதி இருந்தால் நான்  இந்நேரம்  இங்கு  நின்று கொண்டிருக்க முடியாது. அரண்மனை  என்பது அரண்மனை. நான்  என்பது நான்.  எப்படி அரண்மனை என்னுடையதாக முடியும்? நான்  பிறப்பதற்கு முன்பே  அரண்மனை இருந்தது. நான்  இல்லாமற் போன பிறகும் கூட அரண்மனை இருக்கும். அது  எப்படி  என்னுடையதாக இருக்க முடியும்?  
           நீ அந்தக் கோவணத்துணியை  உன்னுடைய தாகவும்,  அரண்மனை என்னுடையதாகவும் எண்ணினாய். ஆகவே, அவற்றின் பின்னால் ஓடுகிறாய்!" 
           *ஓஷோ*  கூறுகிறார் :
          "மனிதன்  அவனுடைய  நோக்கத்தினாலேயே அடிமையாகிறான். அவன்  அதை மாற்றுவதினாலோ, அல்லது  தகர்ப்பதாலோ விடுதலை  பெற முடியும் .💦

குற்றவுணர்வு

குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.

உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன. 

ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.

அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம். 

மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். 

வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.

நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.

இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்.

தவறு செய்வது மனித இயல்பு.

அதே போல் மன்னிப்பதும் மனித இயல்பு தான்.

நீங்கள் உங்களையே முதலில் மன்னித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி உங்களையே உங்களுக்கு மன்னிக்கத் தெரியாவிட்டால்,பிறரை உங்களால் எப்படி மன்னிக்க முடியும்?

உமர்கயாம் என்ற சுபி புலவர்,தன்னுடைய 'ரூபையாத்'என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தில்,''நான் குடிக்க விரும்புகிறேன்,ஆட விரும்புகிறேன்,பாட விரும்புகிறேன்.நீங்கள் கருதும் சகல பாவங்களையும் செய்ய விரும்புகிறேன்.

ஏனெனில் கடவுள் கருணை உள்ளவர்.

அவர் என்னை நிச்சயம் மன்னிப்பார்.

என்னுடைய பாவச் செயல்களை அவருடைய கருணையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.''என்கிறார்.

உமர்கயாம் ஞானம் அடைந்தவர்.மிகவும் தெளிவான ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்.

அவர் சொன்னதில் உள்ள முக்கிய கருத்து,

''நீங்கள் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்''என்பதே.

**#ஓஷோ* 

Sunday, 22 December 2019

ஏன் நாளை

இரண்டு நன்பர்களில் ஒருவனுக்கு பணம் சேர்க்கும் வித்தை தெரிந்திருந்தது.வேறு ஒன்றுமில்லை.ஒவ்வொரு நாளும் சம்பாதித்த பணத்தை சேர்த்துவைத்து மொத்தமாக செலவழிப்பது.

இப்படி ஒவ்வொரு நாளும் எதையும் அனுபவிக்காமல் செல்வந்தன் ஆகிவிட்டான்.எவ்வளவு பணம் சேர்ந்ததோ அவ்வளவு துன்பத்தையும் சேர்த்துவைத்திருந்தான்.

பின்பும் ஒரு நாள் அவன் நன்பனை சந்தித்தான்.அவன் கேட்டான் அதுதான் பணக்காரன் ஆகிவிட்டாயே இப்பொழுதாவது வாழ்வை அனுபவிக்கலாமே என்று.

அதற்கு பணக்காரன் சொன்னான் முடியாது ஏனென்றால் அனுபவிக்கும் மனம் வந்துவிட்டால் மீண்டும் நான் ஏழையாகிவிடுவேன்.

இதனால்தான் ஏசு யூதர்களால் கொல்லப்பட்டார்.அவர்கள் என்றாவது ஒருநாள் கடவுளின் தூதர் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.ஏசு வந்துவிட்டார்.

அவர் உண்மையை சொன்னார்.அதை ஏற்றுக்கொண்டுவிட்டால் எப்படி வழக்கமான வாழ்வு வாழமுடியும்.எனவே அவரை கொன்றுவிட்டார்கள்.

ஒரு சர்சிலோ,கோவிலிலோ கடவுள் நிஜமாக வந்துவிட்டால் கொன்றுவிடுவார்கள்.பிறகு எப்படி வழக்கம்போல் ஆராதனைசெய்வது,பூஜை செய்வது.இதுதான் ஏசுவுக்கு நடந்தது. 

இப்படிதான் நாளை நிம்மதியாக இருக்க இன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.ஓர்நாள் நிம்மதி வந்தால் அதையும் கொன்றுவிடுவாரகள்.

உங்கள் தன்முனைப்பு என்றுமே நிம்மதியாக இருக்கவிடாது.

ஏன் நாளை? அது வராமல் போய்விட்டால்?ஏன் இன்றைய,இப்பொழுதைய சந்தோசத்தை இழக்கிறீர்கள்?தள்ளிபோடாதீர்கள் இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை.__ஓஷோ.

Tuesday, 3 December 2019

சந்தோஷம்

பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே 

வாழ பணம் தேவை தான் 

ஆனால் 

பணத்திற்காக உனது முழு வாழ்வையே அடமானம் வைப்பது

விலை உயர்ந்த ரத்தினக் கற்களை கொடுத்து விட்டு

தகரத்தை விலைக்கு வாங்குவது போல தான் 

பணம் வாழ்வின் 1 சதவீதம் தான் 

பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே 

ஏனெனில் 

சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம்

அது துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால்

பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் 

என்று மக்கள் நினைப்பதுதான் 

பணத்திற்கும், சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை 

உற்று நோக்குங்கள் 

மிகப் பெரிய பணக்காரர்கள் பலருக்கும்

உள்ள கவலைகளும் பயமுறுத்தல்களும்

உங்களைவிட அதிகம் 

 ஓஷோ 

காந்தம்



நீங்கள் ஒரு காந்தம்!

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-

மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. 

இரண்டாவது, 

ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். 

மூன்றாவது அதீத ஆர்வம்-

ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே.

அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

 தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

  ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம். 

 ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.
அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்.

நன்றி