Sunday 13 April 2014

ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள்

ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி “இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் “இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்” என்று கட்டளையிட்டான்.
அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் “எனக்கு ஆமை வாசனை தெரிகிறது….நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்” என்று கூறினாராம்.
அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.
நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.
அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.
அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.
அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.
உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.
ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.
இந்த கி.மு, கி.பி நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை” என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.
ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. “தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்” என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.
இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.
1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற ‘கிரிஸ்டல் பந்து ஞானி’ அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த “வெள்ளிப்பாலம்” இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.
1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.
1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். “இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்.”
இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.
1969, மே 21ல் டிலூயிஸ் “இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்” என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.
1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் “கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்” என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு. உதாரணத்திற்கு “அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்” என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.
இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.
ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
“என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்” என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.
அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.
எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.
கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.
அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் “அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி” என்று சொன்னார்.
அவர் சொன்னது சரியாயிருந்ததால் “என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?” என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.
கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். “கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை.”
ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். “அந்த மனிதர் இறந்து விட்டார்”. உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.
பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். ‘மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?’
இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.
எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. “சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது”. அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.
1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். “மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்” என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.
எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?
மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது…..
அனுபவம் மிக்க மருத்துவரே தடுமாறும் சில மருத்துவப் புதிர்களில் அனாயாசமாக எப்படி எட்கார் கேஸால் பதில் கண்டு பிடிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு எட்கார் கேஸ் எளிமையாகப் பதில் சொன்னார்.
“ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்.”
எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாக எட்கார் கேஸ் சொன்னார். அவற்றை அவர் Akashic Records (ஆகாய ஆவணங்கள்) என்றழைத்தார். அதைப் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அறிவையும், தகவலையும் சுலபமாகப் பெற முடியும் என்றார். எட்கார் கேஸ் உபயோகித்த அந்த ஆகாசம் என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். அவர் சொன்ன கருத்தும் நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, ‘ஒரு யோகியின் சுயசரிதை’யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.
கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி·பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். “நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?”
யோகானந்தர் யோசித்து விட்டு “பூட்டியதாகத் தான் நினைவு” என்றார்.
யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் “நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி·ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்”. பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் “இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார்” என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.
யுக்தேஸ்வர் சொன்னார். “இப்போது அவன் திரும்புவான் பார்”.
அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி·ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.
யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். “அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி·ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி·ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்…..”
யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி·ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.
யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது “விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும்” என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.
சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.
இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.
“நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்”
அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார். அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.
எட்கார் கேஸ் சொல்வதையும் யோகானந்தர் சொல்வதையும் பார்த்தால் தொலைக் காட்சியில் விருப்பப்பட்ட சேனல் பார்க்க முடிவதும் வானொலியில் விருப்பப்பட்ட ஸ்டேஷன்களைக் கேட்க முடிவதும் எவ்வளவு இயல்போ இதுவும் அவ்வளவு இயல்பே. நம் மனதை ஒரு ஏண்டனாவாக அமைத்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில் அலைகளாக இருக்கின்ற, நமக்குத் தேவைப்படுகின்ற தகவல்களை ஈர்த்துப் படிக்கும் வித்தையையும் கற்றுக் கொள்ள முடியும் என்கிறது பலரது அனுபவங்கள்
இது பெரிய அற்புதமாகத் தோன்றினாலும் அதீத சக்தி படைத்த அனைவருமே இதை ஆழமாக நம்பியதாகவும், இதை உபயோகித்து இருப்பதாகவும் தெரிகிறது. இன்று ரேடியோவும் தொலைக்காட்சியும் நம்மை எப்படி அதிசயிக்கச் செய்வதில்லையோ அது போல் இதுவும் ஆழ்மனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதில்லைஎட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை ‘பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)’ என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி ‘முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்’ (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.
“ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்… மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்…”
பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு ‘மஹாத்மா’க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.
விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.
அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் “ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை” என்றார்.
உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். ‘இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது’ என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.
நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் ‘நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்’ என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.
இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?
பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் “யோக சூத்திரங்களி”ல் எழுதியிருக்கிறார்.
இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ? விவேகானந்தா சந்தித்த சாது அவருடைய எண்ணத்திலும், அவருடைய நண்பர்கள் எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியது போல் ரஷியாவில் ஒருவர் சர்வாதிகாரி ஸ்டாலினையே ஆச்சரியப்படுத்தினார். ரஷிய மருத்துவரும் ஆழ்மன ஆரார்ய்ச்சியாளருமான லியோனிட் லியோனிடோவிச் வாசிலிவ் (1891-1966) என்பவர் சர்வாதிகாரி ஸ்டாலினை ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி கேட்டு அணுகினார். கம்யூனிஸ்டான ஸ்டாலினிற்கு இந்த ஆழ்மன சக்திகளில் சுத்தமாக நம்பிக்கை இருக்கவில்லை.
தன்னிடம் உள்ள சக்தியை நிரூபிக்க ஸ்டாலினை அவருடைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவருடைய தனியறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பதாக வாசிலிவ் சொன்ன போது ஸ்டாலினுக்கு சிரிப்பு தான் வந்தது. அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் விருப்பப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார். உடனடியாக தன் பாதுகாவலர்களை அழைத்து வாசிலிவ் பற்றிச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அவரை தன்னை வந்து சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிய ஸ்டாலின் பின் அந்த விஷயத்தையே மறந்தார்.
வாசிலிவ் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இரவு நேரத்தில் அவரது தனியறையில் வந்து நின்ற போது ஸ்டாலினிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. உடனடியாக வெளியே நின்றிருந்த தன் பாதுகாவலர்களை அழைத்த ஸ்டாலின் வாசிலிவைக் காட்டி தன் கட்டளையை மீறி அவரை உள்ளே விட்டது ஏன் என்று கேட்டார். மிரண்டு போன பாதுகாவலர்கள் அவரைத் தாங்கள் பார்க்கவேயில்லை என்று சாதித்தனர். கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின் அவர்களுக்கு அந்த இடத்திலேயே மரண தண்டனை விதித்து ஆணையிட வாசிலிவ் இடைமறித்து தவறு அவர்களிடத்தில் இல்லையென்று சொன்னார். ஸ்டாலினிற்கு மிக நெருக்கமான ஆலோசகர் ஒருவருடைய உருவத்தை பாதுகாவலர்கள் மனதில் ஏற்படுத்தி தான் அவர்களைக் கடந்து வந்ததாக வாசிலிவ் சொன்னார். விசாரித்த போது பாதுகாவலர்கள் அனைவரும் அந்த ஆலோசகரைப் பார்த்ததாக ஒருமித்து சொன்னார்கள். வியப்புற்ற ஸ்டாலின் மரணதண்டனையை விலக்கிக் கொண்டார்.
ஆனாலும் இந்த மனோசக்தி ஸ்டாலினைக் குழம்ப வைத்தது. ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தந்த ஸ்டாலின் வாசிலிவை இன்னொரு அதிசயத்தைச் செய்து காட்டச் சொன்னார். ஒத்துக் கொண்ட வாசிலிவ் ஸ்டாலினுக்கு நம்பகமான இருவரைத் தன்னுடன் ஒரு வங்கிக்கு அனுப்பச் சொன்னார். உடனடியாகத் தன் ஒற்றர் படையில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அவருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.
வங்கிக்குச் சென்ற வாசிலிவ் ஒரு வெள்ளைக் காகிதத்தை வங்கி கேஷியரிடம் தந்து அதற்கு ஆயிரம் ரூபிள்கள் தரச் சொன்னார். அதை வாங்கிய கேஷியர் மனதில் வாசிலிவ் அது ஆயிரம் ரூபிளுக்கான வங்கிக் காசோலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர். அந்தக் கேஷியர் அதை வாங்கிப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஆயிரம் ரூபிள்களை எண்ணி அவரிடம் தந்ததை ஸ்டாலினின் ஒற்றர்கள் விழிகள் பிதுங்கப் பார்த்தனர். பின் அந்தக் கேஷியரிடம் மீண்டும் அந்தப் பணத்தைத் தந்த வாசிலிவ் அந்தக் காகிதத்தை இன்னொரு முறை பார்க்கச் சொல்ல, வெள்ளைக் காகிதத்தைப் பார்த்த வங்கி கேஷியர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபிள்கள் என்பது மிகப் பெரிய தொகை.
இறுதியில் ஸ்டாலின் உறுதியளித்தபடி ஆழ்மன ஆராய்ச்சிக்கூடத்தை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் நிறுவ அனுமதியளித்தார். நாட்டு விஷயங்களிலும், தனிப்பட்ட அரசியல் விஷயங்களிலும் கூட ஸ்டாலின் வாசிலிவின் சக்தியினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எல்லா சர்வாதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய சந்தேகமும், பயமும் ஸ்டாலினிற்கும் இருந்ததால் அவர் அவ்வபோது அந்த ஆராய்ச்சிகளுக்குக் காட்டிய உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டார். அரசியல் கலக்காத மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகள் பற்றிய விவரம் கூட வெளிவருவதை ஏனோ அவர் விரும்பவில்லை. அதனால் 1920, 1930களில் வாசிலிவ் மனோசக்தி குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து வெற்றி கண்ட விவரங்கள் 1960 கழிந்து ஸ்டாலின் மறைவிற்குப் பின் தான் வெளி வந்தன.
ஆரம்பத்தில் ஆழ்ந்த ஹிப்னாடிச மயக்கத்தில் சோதனையாளர்களை ஆழ்த்தி தான் சொன்னபடி அவர்களை செயல்படுத்த வைத்த வாசிலிவ் பின் வாய் விட்டு சொல்லாமலேயே நினைத்தவுடன் அது போல் நடந்து கொள்ள வைப்பதில் வெற்றி கண்டார். “வலது கையை அசை. இடது காலைத் தூக்கு. இப்போதே உறங்க ஆரம்பி. விழித்துக் கொள்” என்பது போன்ற கட்டளைகள் அவர் மனதில் எழுந்தவுடன் ஹிப்னாடிச நிலையில் இருந்த சோதனையாளர்கள் தங்களை அறியாமல் அதை செய்தார்கள். அந்த ஹிப்னாடிச உறக்கத்தில் பல நோயாளிகளை அவர் குணப்படுத்தியும் காட்டினார்.
அடுத்த கட்டமாக சோதனையாளர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் மிகச் சுலபமாக இதை நடத்திக் காட்ட முடியும் என்று நம்பிய வாசிலிவ் அதை நிரூபித்தும் காட்டினார். செவஸ்டோபோல் என்ற நகரம் லெனின்கிராடிலிருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்தது. அங்குள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளரான டொமாஷெவ்ஸ்கீ என்பவரை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தினை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நேரத்தில் இந்த மனோசக்தி பரிசோதனைகளை நடத்தி எண்ணங்களின் சக்தியை அனுப்பவோ, பெறவோ, தூரம் ஒரு தடை அல்ல என்று கண்டுபிடித்தார். ஒரு நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த ஒரு பதிவும் பதியாததைப் பார்த்த வாசிலிவ் பிறகு செவஸ்டோபோல் ஆராய்ச்சிக் கூடத்தை தொடர்பு கொண்ட போது டொமாஷெவ்ஸ்கீயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் எந்த சோதனையும் அன்று செய்யவில்லை என்பது தெரிந்தது.
எண்ண அலைகளின் சக்தி எப்படியெல்லாம் வெற்றி பெறுகிறது என்பதைக் கண்ட வாசிலிவ் அந்த எண்ண அலைகளில் காந்தத் தன்மை இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு இரும்புச் சுவர்கள் கொண்ட அறையில் சோதனையாளர்களை அமர வைத்து பரிசோதனைகள் செய்து பார்த்தார். அந்த ஆராய்ச்சிக் கூட பரிசோதனைக் கருவிகள் எந்தக் காந்த சக்தியும் அந்த இரும்புச் சுவரை ஊடுருவுவதையும் கண்டுபிடிக்கவில்லை. எந்த பரிசோதனைக் கருவியிலும் பரிசோதிக்க முடியாத, ஆனால் எல்லையில்லாத சக்திகள் கொண்ட ஆழ்மன எண்ணங்கள் செய்ய முடிகின்ற அற்புதங்கள் தான் எத்தனை என்று தோன்றுகிறதல்லவா?எண்ணங்களின் சக்தியை ரஷியாவில் வாசிலிவ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த காலத்திற்கும் சற்று முன்பே, 1910ஆம் ஆண்டு, ஜப்பானில் டாக்டர் டொமொகிச்சி ·புகுரை என்ற டோக்கியோவின் இம்பீரியல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எண்ணங்களையும் புகைப்படம் எடுக்க முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் மையக் கருத்தாக இருந்தது. தன் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்ட போது ஜப்பானிய அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக எதிர்க்க அவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஆனால் தன் கருத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட ·புகுரை கோயா சிகரத்தில் உள்ள ஒரு புத்தமத ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதை 1931ல் Spirit and Mysterious World என்ற புத்தகத்தில் விவரமாக வெளியிட்டார் என்றாலும் அபோதும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதை அங்கீகரிக்கவில்லை.
அவருடைய ஆராய்ச்சிக் கருத்துகள் வலிமை பெற ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டிற்குப் பின் தான். அதுவும் அறிவியலுக்கு சம்பந்தமே இல்லாத டெட் சிரியோஸ் (1918-2006) என்ற சிகாகோவில் வசித்து வந்த ஒரு குடிகார நபர் மூலம் தற்செயலாக வெளிப்பட்டது. தான் போதையில் இருக்கும் போது தனக்கு வித்தியாசமான காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் கடலிலும் மண்ணிலும் புதைந்து கிடக்கும் புதையல்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் தெரிவித்தார். அவரது நண்பர் விளையாட்டாக “உனக்குத் தெளிவாக மனதில் தெரியும் காட்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது நீ வெற்று சுவரைப் பார்த்தபடி காமிராவை வைத்துப் படம் பிடித்தால் வந்தாலும் வரலாம்” என்று சொல்ல அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அப்படியே சிரியோஸ் செய்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அதில் புதையுண்ட புதையல்கள் படம் வரவில்லை. அதற்குப் பதிலாக வேறெதோ படங்கள் வந்தன. அந்தப் புகைப்படங்கள் அந்த அறையில் இருந்த பொருள்களின் படங்களாகவும் அவை இருக்கவில்லை. அப்படியானால் வெள்ளைச் சுவரை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வந்த பிம்பங்கள் அவருடைய மனதில் இருந்த புதையலைப் பற்றிய எண்ணங்களில் இருந்து வந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆச்சரியப்பட்ட சிரியோஸ் மீண்டும் மீண்டும் அது போல் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் காட்ட ஆரம்பித்தார்.
இந்தச் செய்தி இல்லினாய்ஸ் நகரின் ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கூடத்தை எட்டவே அவர்கள் டென்வர் நகரைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜூல் இய்சன்பட் (1908-1999) என்பவரை செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இய்சன்பட்டிற்கு டெட் சிரியோஸை வைத்து நடத்திய ஆய்வுகள் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. குடிகார டெட் சிரியோஸ் தனக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியாத போது போதையில் கத்துவது, உளறுவது, தலையை சுவரிலோ, தரையிலோ இடித்துக் கொள்வது போன்ற செய்கைகளில் ஈடுபட்டது இய்சன்பட்டிற்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒருசில நேரங்களில் கிடைத்த புகைப்படங்களின் தத்ரூபம் டெட் சிரியோஸை ஒரேயடியாக ஒதுக்கவும் விடவில்லை. இய்சன்பட் டென்வரில் உள்ள தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு டெட் சிரியோஸை வரவழைத்து இரண்டாண்டு காலம் ஆராய்ச்சி செய்தார்.
பலர் முன்னிலையில் டெட் சிரியோஸ் செய்து காட்டிய விந்தைகள் சில அற்புதமானவை. ஒரு முறை பார்வையாளர்கள் அவரை பழங்கால ரோதன்பர்க் என்ற நகரப் படத்தை மனதில் எண்ணிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஓரளவு சரியாகவே செய்து காட்டினார் சிரியோஸ். பின் கொலராடோவில் மத்திய நகரத்தில் உள்ள பழைய ஆப்ரா ஹவுஸ் என்ற இடத்தின் படத்தை புகைப்படமாக்கச் சொன்னார்கள். அதையும் செய்து காட்டிய சிரியோஸ் “இந்த இரண்டு புகைப்படங்களையும் கலக்கி ஒரு புகைப்படம் உருவாக்கட்டுமா?” என்று சொல்ல பார்வையாளர்கள் உற்சாகமாக செய்து காட்டச் சொன்னார்கள். டெட் சிரியோஸ் உருவாக்கிக் காட்டிய புகைப்படம் அவர் சொன்னது போலவே பழைய ஆப்ரா ஹவுஸில் குறுக்கே உள்ள குதிரை லாயத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் செங்கல் கட்டிடத்திற்குப் பதிலாக ரோதன்பர்க் நகரப் படத்தில் உள்ளது போல கல்லால் ஆன கட்டிடத் தோற்றம் இருந்தது. ஆப்ரா ஹவுஸ் குதிரைலாயப் புகைப்படத்தையும், இரு காலக்கட்டத்தை இணைத்து அவர் எடுத்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.
1967ல் இய்சன்பட் “டெட் சிரியோஸின் உலகம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் தன் ஆராய்ச்சிகளை விரிவாக ஆதார புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார்.           ஒருசில இடங்களை சிரியோஸ் எண்ணப் புகைப்படங்களாக எடுத்து தந்தது மேலிருந்தும், மரக் கிளைகளின் நடுவிலிருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இய்சன்பட் வியப்புடன் கூறியிருக்கிறார். அது போன்ற கோணங்களில் இருந்து எடுப்பது போல் புகைப்படம் எடுக்க முடிவது எப்படி என்பது கேள்விக்குறியாக இருந்தது. பலரும் டெட் சிரியோஸின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே செய்தார்கள் என்றாலும் இது போன்ற ஆற்றல் வெளிப்படுத்துவதில் பல ஏமாற்று வேலைகள், தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்பதால் மிகக் கவனமாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்ததாக இய்சன்பட் கூறினார்.
பிற்காலத்தில் இது போன்ற ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடக்கத் துவங்கின. ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் டெட் சிரியோஸை ஆராய்ச்சிக்காக அணுகிய போது அவருடைய அபூர்வ சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் உதவ முடியவில்லை. ஆனாலும் எண்ணப் புகைப்படங்கள் என்றாலே மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு டெட் சிரியோஸின் நினைவு தான் முதலில் வரும் நிலை இன்றும் இருந்து வருகிறது.நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்குப் பல அற்புத சக்திகள் இருந்த போதிலும் அவற்றை அவர் அடையாளம் கண்டு கொள்ள சாதகமான சூழ்நிலைகள் அவருடைய இளமையில் ரஷியாவில் இருக்கவில்லை. நாசிகள் லெனின்கிராடு நகரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆக்கிரமிக்க முற்பட்ட போது லெனின்கிராடு நகரவாசியான நினா குலாகினா தன் பதினான்காம் வயதிலேயே இராணுவத்தில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் போரில் வீரசாகசம் புரிந்து, காயமடைந்து, பின் குணமாகி, திருமணமாகி இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு தான் தன்னிடமிருந்த சக்திகளை அவரால் அடையாளம் காண முடிந்தது.
ஒரு நாள் ஏதோ கோபத்துடன் அவர் வீட்டினுள் நுழைந்த போது அலமாரியில் வைத்திருந்த ஒரு ஜக் தானாக நகர்ந்து விளிம்புக்கு வந்து கீழே விழுந்து நொறுங்கியது. அவரால் அப்போது உடனடியாக அதற்குக் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்த நாட்களில் விளக்குகள் அணைவது, பொருள்கள் அவர் இருப்பால் அசைதல் போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. பின்னர் தன்னிடம் ஏதோ சக்தி உள்ளது என்று தோன்ற ஆரம்பித்தது. அவராகவே சில முயற்சிகள் எடுத்துப் பார்த்த போது தன்னால் பொருள்களைத் தொடாமலேயே அசைத்து, கட்டுப்படுத்த முடிகிறது என்பது அவருக்கு விளங்க ஆரம்பித்தது.
1964ல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணமடைய ஆரம்பித்த போது அந்த மருத்துவமனையில் பொழுது போக்கிற்காக நிறைய தைக்க ஆரம்பித்தார். டாக்டர்கள் அவர் பையில் பல நூல்கண்டுகள் இருக்கும் பையிலிருந்து பார்க்காமல் வேண்டிய நிற நூல்கண்டை எடுக்கும் விதத்தைப் பார்த்து அசந்து போனார்கள். இந்த விஷயம் உள்ளூரில் வேகமாகப் பரவியது. உள்ளூர் அறிஞர்கள் மறு வருடம் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது நினா குலாகினா உடனே தயக்கமில்லாமல் ஒத்துக் கொண்டார். அப்போது செய்த ஆராய்ச்சிகளில் நினா குலாகினா தன் விரல் நுனியின் தொடு உணர்ச்சி மூலமாக நூல்கண்டின் நிறத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் என்பது நிரூபணமாகியது.
அதோடு அவருக்கு காயங்களைக் குணப்படுத்தும் அபார சக்தியும் இருந்தது. காயங்களுக்கு சற்று மேலே சிறிது நேரம் கையை வைத்திருந்தே குணப்படுத்திக் காட்டினார். அவர் ஒரு மேசையின் முன் அமர்ந்து மேசை மேல் இருக்கும் தீப்பெட்டி அல்லது தம்ளர், பேனா போன்ற பொருள்களை வெறித்துப் பார்த்தே, தொடாமலேயே நகர்த்திக் காட்டும் சக்தியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்தி எல்லா சமயங்களிலும் உடனடியாக அவருக்குக் கிடைப்பதில்லை. மனதில் மற்ற எண்ணங்களை விலக்கி, ஒருமுகப்படுத்திய பின்னரே அந்த சக்தி அவருக்கு சாத்தியமாயிற்று. அந்த சமயத்தில் தண்டுவடத்தில் அதிக வலியும் பார்வையில் மங்கலும் தனக்கு ஏற்படுவதாக அவர் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தார்.
அவரை ஆராய்வதில் முதலில் அதிக ஆர்வம் காட்டியவர் எட்வர்டு நவ்மோவ். அவர் செய்த ஆரம்ப பரிசோதனை ஒன்றில் ந்¢னா குலாகினாமேசை மேல் பரப்பி வைத்திருந்த தீப்பெட்டி குச்சிகளைத் தொடாமல் சற்று தூரத்தில் தன் கைகளை வைத்து அவற்றையெல்லாம் மேசை நுனிக்கு வரவைத்து ஒன்றன் பின் ஒன்றாக விழ வைத்துக் காட்டினார்.
ஸ்டாலினிடம் தன் சக்திகளை நிரூபித்து லெனின்கிராடில் ஆராய்ச்சிக்கூடம் ஏற்படுத்திய வாசிலிவும் நினா குலாகினாவை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். அறுபதிற்கும் மேல் பரிசோதனைகளை நிழற்படமாகவே எடுத்து வைத்திருந்தார் வாசிலிவ். ஆனால் ஸ்டாலினின் ரகசியக் கட்டுப்பாடு காரணமாக வெளிவராமல் இருந்த அந்த படங்களைப் பின்னர் திரையிட்டுப் பார்த்த போது பல திரைப்படங்களில் தரம் தெளிவாக இருக்கவில்லை.
நினா குலாகினாவின் அபூர்வ சக்திகள் பற்றிய செய்திகளும், படங்களும் மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்தது. 1968ல் ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் முதல் மாஸ்கோ கருத்தரங்கில் நினா குலாகினாவின் பரிசோதனை பற்றிய தெளிவான சில நிழற்படங்கள் காட்டப்பட்டதை மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகளும் கண்டார்கள்.
அவர்களுடைய ஆவல் தூண்டப்படவே அவர்கள் குறுகிய காலத்திற்கு ரஷியா வந்து நினா குலாகினாவை பரிசோதனை செய்ய 1968 முதல் 1970 வரை அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களும் இந்த ஆராய்ச்சிகளில் காந்தம், கண்ணுக்குத் தெரியாத நூல் போன்றவற்றை நினா குலாகினா மறைத்து வைத்து உபயோகப்படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய பல ஆரம்ப முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தான் ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார்கள். வில்லியம் மெக்கேரி என்ற ஆராய்ச்சியாளர் முன் மேசை மேல் இருந்த பல சிறிய பொருள்களை இடம்பெயரச் செய்த அவர் ஒரு மோதிரத்தை அந்தரத்தில் சுழற்றிக் காட்டினார். இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெய்தர் ப்ராட் எடையிலும், அளவிலும், தன்மையிலும் வித்தியாசப்பட்ட பல விதமான பொருள்களை தன் விருப்பப்படி நினா குலாகினா அசைத்துக் காட்டியதைக் கண்டு வியந்தார். விஞ்ஞானம் அன்று வரை அறிந்த எந்த சக்தியாலும் அது நடக்கவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்தது.
செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டெனெக் ரெஜ்டாக் தன் சோதனைகளில் அடிக்கடி நினா குலாகினாவை இடம் மாறி உட்காரச் சொன்னார். இடம் மாறினாலும் அவர் செய்து காட்டிய அற்புதங்கள் குறையவில்லை. தன் சிகரெட் ஒன்றையும் மேசை மேல் வைக்க குலாகினா தன் பார்வையாலேயே உடனடியாக அதை நகர்த்திக் காட்டினார். அந்த ஆராய்ச்சி முடிந்த பிறகு சிகரெட்டை ஆராய்ந்த போது உள்ளே துகள்கள் எதுவும் இருக்கவில்லை என்றார் ரெஜ்டாக். ஆராய்ச்சிகளின் இடையே அவ்வப்போது மருத்துவர்களைக் கொண்டு நினா குலாகினாவின் உடலையும் ரெஜ்டாக் பரிசோதிக்கச் செய்தார்.
1970 மார்ச் 10 ஆம் தேதி லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு வித்தியாசமான இன்னொரு அற்புதத்தை நினா குலாகினா நிகழ்த்திக் காட்டினார். ஒரு தவளையின் இதயத்துடிப்பைத் தன் மனோசக்தியால் அதிகரித்துக் காட்டினார். பின் அதை குறைத்துக் காட்டினார். பின் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். பின் மறுபடி இயக்கிக் காட்டினார். இதைக் குறித்து வேறொரு சமயம் கிண்டல் செய்த ஒரு மனோதத்துவ நிபுணரின் இதயத்துடிப்பையும் அதிகரித்துக் காட்டி பயமுறுத்திய நினா குலாகினா அது போன்ற அபாயமான செயல்களை பின்னர் தொடரவில்லை.
நினா குலாகினா ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவரைப் பரிசோதித்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்துக் கூறுகிறார்கள். ஆராய்ச்சி செய்யும் இடங்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. சில ஆராய்ச்சிகள் திறந்த வெளிகளில் கூட நடந்தன. அவர் சக்திகளை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணோடு பார்த்த மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் எத்தனையோ சோதனைகளில் அவரை ஈடுபடுத்தினார்கள். சில ஆராய்ச்சிகளில் அவரைச் சுற்றி பல டெலிவிஷன்களை வைத்து வெளியில் வேறு பலராலும் கூட கண்காணிக்கப் பட்டார். பின்னரே அவருடைய சக்திகளை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
ஆனால் இது போன்ற சக்தி வெளிப்பாடுகளை நினா குலாகினா தொடர்ந்து செய்து காட்டியது அவர் உடல்நிலையைப் பெரிதாகப் பாதித்தது. தன் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு டாக்டர் ரெஜ்டாக் செய்த பரிசோதனையில் நினா குலாகினா நான்கு பவுண்டுகள் எடை குறைந்ததாகத் தெரிவித்தார். முகம் வெளுத்துப் போய் தன்னால் சிறிது கூட நடக்க முடியாத அளவு அவர் சக்தி இல்லாமல் போயிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளுக்குப் பின் கடும் உடல்வலியும், மயக்க நிலையும் கூட ஏற்படுவதாக நினா குலாகினா தெரிவித்தார். ஒரு கட்டத்தில் டாக்டர்கள் அவரை இந்த அற்புத சக்திகளை செய்து காட்டுவதை நிறுத்திக் கொள்ளும் படி எச்சரித்தார்கள். அது அவர் உயிருக்கே அபாயம் தரலாம் என்று தெரிவித்தார்கள். நினா குலாகினா நிறுத்திக் கொள்ளா விட்டாலும் மிகவும் குறைத்துக் கொண்டார். 1990ல் அவர் இறந்த போது ரஷியா அவரை லெனின்கிராடு வீராங்கனை என்று போர்கால வீரதீரச் செயல்களுக்காகப் பாராட்டியது.
எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட நினா குலாகினாவின் இந்த அபூர்வ சக்திகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்ல முடியவில்லை. பதில் ஆழ்மனதின் அற்புதத்தன்மையிலேயே இருக்கிறது என்பதற்கு வேறென்ன தெளிவு வேண்டும்?
னா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார்.
1973 நவம்பர் மாதத்தில் BBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர் தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார். யூரி கெல்லர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.
அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள், அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.
சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது. பரபரப்படைந்த ஜிம்மி “ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது…. என்னால் நம்ப முடியவில்லை” உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.
அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக போன்கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல போன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக அங்கு பணிபுரிபவர் சொன்னார். பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் போன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.
நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.
அதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.
யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான் ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள். எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜேக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).
ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிக்கை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது. யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.
பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் “ட்ராவல்ஸ்” என்ற நூலில் “ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி” ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார். “என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத் தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ·போர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்”.
“எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்”.
“இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்திற்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மன ஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்”.
“இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது”
எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. ஆனால் அவர் தான் மட்டுமல்லாமல் சிறுவர்களும் செய்ய முடிந்ததாகச் சொன்ன அந்த அற்புதச் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஸ்பூன், இரும்புக்கம்பி, சாவி போன்ற பொருள்களை சிலர் தங்கள் மனோசக்தியால் வளைத்துக் காண்பித்தார்கள் என்றால் ஸ்வாமி ராமா என்ற இந்திய யோகி தன் உடலிலேயே பல அற்புதங்களை செய்து காட்டக் கூடியவராக இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர் ·பௌண்டேஷன் 1969 இறுதியில் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரை டாக்டர் டேனியல் ·பெர்குசன், எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.
முதல் நாள் அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள். அவர்கள் சோதனைக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். ஸ்வாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.
ஸ்வாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன. பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார். ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது. அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார். இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது.
அடுத்ததாக ஸ்வாமி ராமா தன் இதயத்துடிப்பையும் ஏற்றி இறக்கிக் காட்டினார். இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை. ஆனால் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்ட போது ஸ்வாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து வியப்பூட்டினார்.
பின்னர் உணவருந்துகையில் பேசுகையில் இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் ஆனால் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஆயத்தமாக வேண்டும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். ஆனால் அவருடைய குருகா ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார். (அவருடைய குருவைப் பற்றிக் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்). உபவாசம் இருந்து செய்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பைத் தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் என்று சொன்னார்கள். மறுநாள் ஸ்வாமி ராமா 16.2 வினாடிகள் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானவுடன் ஸ்வாமி ராமா அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார். எனவே மீண்டும் 1970ஆம் ஆண்டு இறுதியில் உரையாற்றவும், பரிசோதனைகளுக்காகவும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். ஒரு பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறித்த ஒரு வட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி (அதுவும் இங்கு காட்டப்பட்டுள்ளது) அவருக்குத் தரப்பட்டு இருந்தது. அதை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா அசைத்துக் காட்டினார்.
சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள ‘சக்ரா’க்களைப் பற்றியும் அந்த சக்ராக்களுக்கு சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதைக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். “கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் பொலொராய்டு காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன். முடியுமா?”
அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.
இந்த ஆராய்ச்சிகளில் முதல் மூன்றும் பரிசோதனைக் கூடத்தில் பல பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டவை. கடைசி அற்புத நிகழ்ச்சி பொதுக் கூட்டம் ஒன்றில் எல்லோர் முன்னிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆழ் மனதின் சக்திகள் செய்து காட்ட முடிந்த அற்புதங்கள் தான் எத்தனை!