Sunday 6 April 2014

நம் மனதில் ஏற்கனவே programme load செய்தாகிவிட்டது

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்"
"தலையே போனாலும் சரி இதை நான் செயாம விட மாட்டேன்.."
"என்ன் செய்துடுவான்..தலையே எடுத்துடுவானோ..?"
"தலைய வச்சாவது சொன்ன நேரத்துல நான் என் கடனை அடைச்சுடுவேன்.."
"தலைக்கு வந்தது தலைப்பாகையோட் போச்சு.."
இப்படி..இப்படி மனிதர்களிடம் தலைப்படும் பாடு சொல்லிமாளாது.தலைக்கு ஏன் இந்த முக்க்யியத்துவம்..?அப்படி இந்த தலையில் என்னதான் இருக்கிறது..?

கவிழ்த்துவைத்த மண்சட்டியைபோல் கபாலம். அதில் வலது இடதாய் 700 கிராமுக்கு ஒன்னரைகிலோ மூளை. பிமண்டியயில் முகுளம்.சோள்க்கொல்லை பொம்மையில் குத்தி வைத்ததுபோல் முகுளத்தை இணைக்கும் தண்டுவட் முனை. அச்சில்வார்த்த கேள்விக்குறிகளாய் ரெண்டு செவிகள்.மு மண்டைக்கு நேராக நூறடி ரோடு மாதிரி பெரு நெற்றி.அதன் கீழாக இரு துளைகளில் கோழிமுட்டையை துருத்தி வைத்த மாதிரி இரு கண்கள்.கண்களின் நடுநாயகமாய் சார்த்திவைத்த ஏணி மாதிரி ஒரு மூக்கு.நாசிகோயிலுக்கு பீடம் வைத்த மாதிரி வாய் அதிலொரு நாக்கு.சொல்லிகொண்டே போனால் தலையில் வேறென்ன இருக்கிறது..?
"எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்"என்பது லேசான வார்த்தைகள் அல்ல.

உயிர் நடத்தும் ஜனநாயக ஆட்சிக்கு தலைமைச் செயலகம் தலையே.புலன்கள் என்னும் அமைச்சர்களஅமர்ந்திருக்கும் சட்டமன்றம்தான் நம் தலை. சிரசில் உட்கார்ந்துகொண்டு அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்..?உடல்முழுதும் இருக்கும் எண்ணற்ற தொகுதிகளுக்கன நிர்வாக கட்டளையை மூளையிடமிரும்து நரம்புகள் வழியாய் எடுத்துப்போகிறார்கள். உயிரின் நிதியகமான குருதி கிடங்கு இதயத்திலிருந்து நிதியை நாலங்கள் வழியாக நுரைக்க நுரைக்க உடலின் உள்லாட்சி அமைப்புக்கும் இன்னும் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துப்போகிறார்கள்.குடிமக்களான ஒவ்வொரு செல்லும் சுகமாய் வாழ, வயிறான் தானியக் கிடங்கில் சேமிப்பை கண்காணிக்கிறார்கள். 

இப்படி உடல் முழுதிற்கும் தேவையான சட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாக்கப்படும் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைதான் நம் தலை.உயிராற்றல் எனப்படும் மின்சார உதவியோடு இயங்கும் அனைத்து புலன்களின் மின் இணைப்புகளின் மெயின் போர்ட் மாட்டப்பட்டிருக்கும் இடமே தலை.கணினி மொழியில் சொல்வதானால் கணினியின் செயல் வேகத்தை தீர்மானிக்கும் மதர் போர்ட் அடங்கிய CPU தான் நம் தலை.இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு முதல்வராய் இருந்து ஆட்சி செய்பவர்தான் திருவாளர் மனம்.

இவர் இயற்றும் சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மன்றத்தில் சின்னதாய் சிக்கலும் உண்டு.அரசியல் கட்சிகள் போலவே right left ஆக அமர்ந்திருக்கும் வலது மூளை ஆளுங்கட்சி என்றால் இடது மூளை எதிர்கட்சி.
வலது - நெருப்பு என்று சொன்னால் போதும் 
இடது - அது சுடுமே என்பார்..
வலது -பர்னால் தடவிக்கொள்ளலாம் என்றால் 
இடது - அது வீண் செலவு என்பார்.

இரண்டு பக்க மூளைக்கும் ஊடாடித்தான் நம் மெய் தேசத்தின் நிரந்தர முதல்வராகிய மனம் ஆட்சி செய்தாக வேண்டும்.
சரி...
முதல்வரின் இருக்கை எங்கே இருக்கிறது.....?
ஏற்கனவே பார்த்தோம் புலான, உடல் உறுப்பாக இல்லாத மனதுக்கு உடலுக்குள் இடம் இல்லை என்று. மன முதல்வர் ஆற்றல் அலையாக இருப்பதால் வெளியேதான் உட்கார வைத்தாகவேண்டும்.உள்ளுறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட பணிகளை திரும்ப திரும்ப செய்பவை. மனம் அப்படியல்ல. அது அந்த உள்ளுறுப்புகளையே மூளை வழியாக இயக்கும் ரிமோட்சென்ஸ் மாதிரி.அந்த ரிமோட் வசதியாக உட்கார்ந்து தன் பணியை செய்ய இய்றகை தேர்ந்தெடுத்த இட்மதான் உச்சந்தலை.ஆண்டெனா மாதிரி கொத்து முடிகள் தூக்கிகொண்டிருக்குமே அந்த தலை உச்சியில்தான் சுருள்வில் இருக்கையிலே கண்ணுக்கு தெரியாத அலை ஆற்றலாக நம் மனம் உட்கார்ந்திருக்கிறது.

கருவறையில் சிசு குடியிருக்கும் முந்நூறு நாட்களில் உயிராற்றல் தொப்புள் கொடி வழியே தாயிடமிருந்து அனுப்பப்படுகிறது. தொப்புள் கொடி அறுபட்டதும் அதன் அழியே முதல் காற்று உடலுள் ஜீவனை இழுத்துப்போய் நெற்றியில் வாய்ப்பதாக ஞானியர் கூறுவார்கள்.அந்த ஜீவஜோதியின் பிரகாசம் அணையும் வரை உச்சந்தலை மனம் அதன் ஒளியை உடலுக்கு உள்ளும் வெளியும் எண்ணமாக செயலாக பரவச்செய்கிறது. முழு உடலும் கருவுக்குள் வளர்ந்தாலும் குழந்தைக்கு தேவையான மனதை பிரசவம் நிகழந்த பிறகே இய்ற்கைமுழுதாக வடிவமைக்கிறது.

வரைபடத் தாளில் இரண்டு அச்சுகள் வெட்டிக்கொண்டால் நான்கு கால் பகுதிகள் உருவாகும் அல்லவா..?அதை போல கபால எலும்புகள் இணையும் ஓர் ஆதிப்புள்ளியில் தோல்மட்டும் மூடிய நிலையில் உச்சிக்குழி என ஒன்று துடிக்கும். அந்த உச்சிகுழி வழியேதான் வாழ்கையை எதிர்கொள்ளத் தேவையான் இயங்குப் பதிவுகளை இயற்கை இறக்கி வைக்கிறது."குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு குடுக்கும்" என்ற சொலவடையில் வரும் கூரை நம் தலைதான், தெய்வம் பிய்க்கும் இடமே உச்சிக்குழி.உடனே உங்கள் தலையில் அப்படியொரு குழியை நீங்கள் தேடுவது தெரிகிறது. முழு மனமும் உருவான சில மாதங்களிலேயே இயற்கை அதை சீல் செய்து அடைத்துவிடும். 

நம் மனதில் ஏற்கனவே programme  load செய்தாகிவிட்டது. அதுவும் மிக நன்றாகவே. கணீனியில் தொடர் பணி நிமித்தம் cpu சூடாகிவிடுவதுபோல் நம் தலையும் சூடாகி செயல்பாட்டில் பங்கம் வராதிருக்கவே நம் பாட்டிகள் உச்சந்தலையில் சூடு பறக்க எண்ணெய் தேய்க்கிறார்கள். எண்ணெய் முழுக்குப்போன்ற அனைத்துமே அனலடிக்கிற மனதுக்கு ஐஸ் வைக்கிற முயற்சியே.

தலை உச்சியில் தலைவனாக உட்கார்ந்திருகும் ஆறாவது அறிவின் அதிபதியான மனதின் அலைநீளத்தை பொறுத்தே நாம் பில்கேட்ஸ் ஆவதும் பிச்சைக்காரர்கள் ஆவதும்.நாளும் பொழுதும் ஒவ்வொரு நொடியும் தலைமேல் அலையாக இருக்கும் மனதைநாம் உணர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்பதில் நம் முன்னோர்கள் அதிக கவனம் காட்டியிருப்பதற்கான அடையாளங்கள் நிறைய. அதிலொன்றுதான் கரகாட்டம். தலையில் ஏற்றிய கரகத்தை வைக்கப்பட்ட உச்சியிலிருந்து கீழே விழுந்துவிடாமல் உடலின் ஒவொரு ஊசி முனையிலும் கரகத்தின் நர்த்தனம்.மனதின் அதியற்புதத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் தமிழின் தன்னிகரில்லா தமிழ்கலை. நம் கலாச்சாரத்தின் ஒவொரு கலையையும் இதே ரீதியில் ஆய்வுகுட்படுத்த வேண்டும்.

விளையாட்டக மட்டுமன்றி புராணப்படைப்புகளில் அடையாங்களாக மனம்,உடல், மற்றும் உயிர் பற்றிய நுட்பங்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன என கருத இடம் உள்ளது.வலது மற்றும் இடது மூளையோடு இணைந்து மனதின் ஆற்றல் முதுகு தண்டுவடம் வழியாக மனிதனுக்குள் இறங்கும் அற்புதமான வடிவம்..சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலம். மனம்  இருபக்கத்துக்கும் ஊடாடி சப்திக்கும் செயலை சித்தரிக்கும் உடுக்கை. ஒவ்வொரு மனிதனுன் முக்கண்கொண்ட சிவனே.இயேசுபெருமான் மரித்த சிலுவையைக்கூட இதே பார்வையில் பார்க்க பொருத்தமாகத்தான் இருக்கிறது. திரிசூல வளைவுகளை மடக்கி வைத்தால் சிலுவை. சிலுவையின் பக்கங்களை வளைத்தால் திரிசூலம். இஸ்லாமியமார்க்கத்தின் அடையாளமான பிறையின் இரு கூர்முனைகளும் மையத்து நட்சத்திரமும் இதே ரகசியத்தைதான் பறைசாற்றுகிறது.

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"
 
"மனமே முருகனின் மயில் வாகனம்" மோட்டார் சுந்தரம்பிள்ளைத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது.
முருகன், குமரன்,ஆறுமுகன் என்றெல்லாம் அழக்கப்பெறும் ஆறாவது சமயத்துக்குரிய வழிபடுக் கடவுள். அறிவுக் கடவுள். முருகனின் வாகனம் மயில். அதாவது அறிவின் வாகனம் மனம்.
"ஏறு மயில் ஏறி வினை தீர்க்கும் முகம் ஒன்று" எனப் பாடினார் அருணகிரி நாதர். வினை தீர்க்க மயிலேறி முருகனா வருவான்..? அறிவானது மனதில் ஏறி வினை தீர்க்க வேண்டும் என்பதே மறைபொருள்.

மயில் ஒரு அசாதாரணப் பறவை.பஞ்சபூதங்களின் உள்ளுணர்வை தெள்ளென உணரக்கூடியது.ஆலாலகண்டனும் ஆடலுக்கு தகப்பனுமான நடராஜனின் பொன்னம்பலத்தை தன் தோகையில் காட்டி நிற்பது.மனமும் அப்படித்தான். போற்றும் விதத்தில் போற்றினால் நம் மனமும் பொன்னம்பலத்தைக் காட்டும். பஞ்சபூதங்களின் மேல் ஏறி நிற்கும். தோகை விரித்தாடும்.பல அதிசயங்களை நிகழ்த்தும்.மனம் பற்றிய அறிவு இல்லா நிலை மனமில்லா விலங்கு நிலைக்கு ஒப்பானது.

மனம் என்பது என்ன..?
மனம் ஒரு பொருளா..? பொருள் எனில் சடநிலையில் அதை உருவாக்கவும், வடிவம தரவும், தோற்றப்பொலிவை மேம்படுத்தவும் மனிதனால் இயலக்கூடும். கடைகளில்கூட ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய மனதை ஒரு அரை கிலோ கட்டி தர சொல்லி வாங்கிவிடலாம்.சந்தைக் கடையில் வாங்கும் பொருளல்ல மனம்.

அப்படியெனில் மனம் ஒரு புலனா..?
மனிதனுக்கு உடலும், உடல் சார்ந்த இயக்கத்திற்கு கட்டுப்படும் ஐம்புலன்கள் உண்டு. மெய்,வாய்,கண்,காது,மூக்கு,என்பவையே அவைகள். பஞ்சபூதங்களின் வார்ப்பாக மனிதன் ஐந்து புலன்களை மட்டுமே பெற்றிருக்கிறான்.அவ்விந்தையும் எழுச்சியோடு அழுத்தி எழுந்ததே மனமாகும்.தொண்டர்களை தண்டரை வைத்தே வழி நடத்துவதில் ஞாயம் இல்லை என்பதால் இயற்கை மனதை புலனாகவும் படைக்கவில்லை.

மனம் மனித் உடலின் உள்ளுறுப்பா..?
உடல் பெட்டிக்குள் பூட்டி வைத்த உள் உறுப்புகள் அமைய பெற்றவன் மனிதன். விலா எலும்பு சிறைக்குள்ளும், வயிற்று பானைக்குள்ளூம், இருதயம்,நுரையீரல்,மண்ணீரல்,கணையம், சிறுநீரகம், சிறுகுடல், பெருகுடல், உணவுப்பை என தானியங்கி சாதங்களாய் பல உறுப்புகளை கூட்டாக கட்டமைத்து உள்ளது.இது நாள்வரை எந்த மருத்துவரும் மனம் என்கிற உள்ளுறுப்பைக் கண்டதாய் சொன்னதில்லை.சொல்லவும் முடியாது.மனிதர்கள் பழக்கம் காரணமாக "என் மனசுக்குள் எதுவும் இல்லை"என்று நெஞ்சு பகுதியை காட்டி இதயம்தான் மனம் என்பார்கள்.

மனிதனை வடிவம் தந்து வார்க்கும் மனம் பொருளாக,புலனாக, உள் உறுப்பாக இல்லாத நிலையில் அதன் மூலம்தான் என்ன.?
ஒருவேளை மூளைதான் மனமோ..?வலது கைஅயி உயர்த்த வேண்டுமெனில் அதற்கான உத்தரவை இடது மூளையிடமிருந்து பெறப்படவேண்டும்.தராசு தட்டு போல் வலது இடதாய் பிரிந்து நிற்கும் மனித உடலை எதிரெதிராய் வலது மூளையும், இடது மூளையும் இயக்கிநிற்கிறது. உடல் இயங்க மூளை உத்தரவிட வேண்டும்.சரி. மூளைக்கு உத்தரவிடும் முதலாளி யார்..? பின் எதுதான் மனம்..?

ஒரு எளிமையான கதையை பார்ப்போம்..
காசு திருட ஒருவன் சிறிய உண்டியலில் கையை விட்டான். திரும்ப எடுக்க முடியவில்லை. மருத்துவர்கள் கையை வெட்டவேண்டியதுதான் என்றார்கள். திருடியவன் மிகவும் பயந்துபோனான். கையில் அந்த உண்டியல் செம்போடே போய் வரவேண்டியதாயிற்று. ஒரு நாள் அவனது மனைவி பக்கத்து கோவிலில் யாரோ ஒரு ஆன்ம ஞானி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரிடம் தன் கணவனை அழைத்துப்போனாள். ஞானி முழுக் கதையையும் கேட்டு பின்.."இதோ பாரப்பா கைக்கும், செம்பிற்கும் சேதாரமில்லாமல் காப்பாற்ற ஒரு வழி உள்ளது. அந்த உபாயத்தை என்னால் சொல்ல மட்டுமே முடியும்..செய்ய வேண்டியது நீதான்" என்றார். திருடன் சம்மதித்தான்.
"காசுக்கு ஆசைப்பட்டுதானே கையை உள்ளே விட்டாய்..இப்போது அந்த காசு வேண்டாம்..காசு வேண்டாம்..வேண்டவே வேண்டாம்..என நினைத்து கையை வேகமாக உதறு..உன் கை வெளியே வந்துவிடும்" என்றார். அவனும் உதறினான். கை விடுபட்டது. 

இந்த கதையிலிருந்து மனம் என்பது என்ன என்பதை பற்றிய ஓரளவு முடிவுக்கு நம்மால் வரமுடியும். கையை விடுவிக்க ஞானி எந்தப் பொருளையும் பயன்படுத்தவில்லை. வார்த்தைகளை ஒரு கருத்தில் அமைத்துப் பேசினார். பேச்சு என்பது மொழி. மொழி என்பது ஓசை. ஓசை என்பது அதிர்வு. அதிர்வு என்பது காந்தம். காந்தம் என்பது ஆற்றல். ஆம் க்ண்ணுக்கு புலனாகாத ஆற்றல்தான் மனம். mind is nothing but an enrgy.  மனம் என்கிற ஆற்றல் மனித மூளையை ஊடகமாகக்கொண்டு செயல்படும் வான்காந்த ஆற்றல். மனித மூளையிமன் மேலாளர் மனமே. ஒட்டுமொத்த மனித கூட்டத்தின் எசமானன் மனமே.

மனம் என்கிற ஆற்றலுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு..?
ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் புலன்களின் உள்முக குவிப்பாக அதிர்வோடு இயங்குவதே மனம். மனதின் வெளிமுக தொகுப்பாக இயங்குவதே உடல்.மனமும்,உடலும் இயங்க பாலமாக, சாட்சியாக., சக்தியாக இருப்பதே உயிர். மனம் சொல்வதை உயிர் மொழிபெயர்க்கும், உடல் செயல்பெயர்க்கும்.

சில சமயங்களில் உடலும், புலனும் சொல்வதை மனம் உள்ளுணரும். உடல்,கண்,காது, மூக்கு,வாய் இவைகளில் மனம் இறங்கி வேலை செய்யும். சிவந்து கோபம் கொப்புளிக்கும் கண்களில் உண்மையில் நாம் பார்ப்பது அனல் வீசும் மனத்தையே.தூங்கும் குழந்தையை தட்டிகொடுத்து மென்மையாய் வருடிவிடுவது உண்மையில் கைகளல்ல..தாயின் மனமே. உணர்வோடு புலன் வழி இற்ங்குபோது, புலன்களும், உறுப்புகளும் மன் மயமாகவே மாறிவிடுகிறது. சில தாயரோ..பிள்ளையை "ச்சீ போ சனியனே 'என விரட்டுவர். விரட்டிய கைகளில் வேலை செய்ததும் மனமே.

தாய் தன் பிள்ளையை வருடிகொடுத்தாளா..? விரட்டி அடித்தாளா..?என்பது பற்றி உயிருக்கு கவலை இல்லை. அது வெறும் சாட்சி.மனம் அழுத்தும் சுவிட்சுக்கு மின்சாரத்தை பாய்ச்சுவது மட்டுமே அதன் வேலை.

இது புலன்களில் மனம் இயங்கும்விதம்.சமயங்களில் மனதுக்குள் புலன்கள் இயங்குவதுண்டு.வெளி உடலை நகல் எடுத்தாற்போல் மனதிற்ககும் ஒரு உடல் உண்டு.அவ்வுடலில் உணர்வும் உண்டு.முதுகுக்கு பின்னால் நம்மைப் பற்றி பேசும் சிலரை சட்டென்று திரும்பி பார்க்கிறோமே மனதின் உள்ளுணர்வு தூண்டலே அது.மனதிற்கும் கண்கள் உண்டு. வெளிக்கண் காணா நிலையிலும் அகக்கண் தெளிவுறக் காணும் சக்தி படைத்தது.விசுவரூபம் எனும் இறைப்பேராற்றலை ஞானிகள் இந்த அகக்கண்ணால்தான் காண்கிறார்கள்.முக்காலத்தையும் தரிசிக்கிறார்கள். நம் மனக்கண்களோ ஐஸ்வர்யாராயையும், அஸினையும் பார்ப்பதில்தான் ஆளாய் பறக்கிறது. இது மனதின் குற்றமல்ல. மனக்குதிரையை இயக்க தெரியாதவர்களின் குற்றம்.

மனதிற்கு செவியும் உண்டு. அது மனச்செவி. எங்கும் ஆனந்த பேரொளியாய் இசைக்கும் விசுவநாதத்தை இச்செவியால்மட்டுமே கேட்க முடியும். மனதிற்கு வாய் உண்டு. அது மன வாய்.யாருக்கும் கேட்காமல் பேசும்.
ஔவை அழகாக சொல்லுவாள்.
"கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம் 
உற்றுடம்பால் ஆய உணர்வு.."-ஔவை குறள் (உள்ளுடம்பின் நிலைமை-1)

மனம் எனும் மந்திர ஆற்றலை மத்தாகக்கொண்டு வாழ்வெனும் பாற்கடலை கடைந்து அமிர்தம் பருகுவதில் மனிதனுக்கு தடை என்ன..?

எல்லாம் சரி...மனதின் முகவரி எது..? அதன் விஸிட்டிங் கார்டு இருந்தால்தானே அதைக் கண்டுபிடித்து அழைத்து வேலை வாங்க முடியும்.

மனமெனும் ஆற்றலின் இருப்பிடம் எது..?அதன் ரிஷிமூல ஊற்று எங்கிருந்து..?தங்கப்புதயலைத் தேடி மனிதர்கள் பய்ணித்த கதை நமக்கு தெரியும்.

வாருங்கள் நாம் மனதின் இருப்பிடத்தைத் தேடி செல்வோம்.....