Tuesday, 6 September 2016

துன்பம்

கேள்வி - கோவில்களுக்குப் போகிறேன் தியானம் செய்கிறேன் ஆனால் துன்பங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது. விடுபட வழியே இல்லையா ?

துன்பம் என்பது இயற்கை அல்ல. அது செயற்கை. நாம் வருவோம் என்று நமக்கு முன்பே வந்து துன்பங்கள் காத்திருப்பதில்லை. நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் துன்பம். துன்பங்கள் வலிய வந்து நம்மை பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கவில்லை. நாம்தான் விடாப்பிடியாக துனபங்களை தூக்கிக் கொண்டு அலைகிறோம். இன்பத்தின் மீது நாம் கொள்ளும் அளவு கடந்த நாட்டமும், நுகர்ச்சியும்தான் துன்பங்களாக வடிவெடுத்து நிற்கின்றது. முன்பு ஒரு காலத்தில் ப்ரம்மனின் பிள்ளைகளான தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் மூன்று பிரிவினரும் ப்ரம்ம தேவனிடம் வந்து, எங்களது துன்பங்களைப் போக்கியருள வேண்டும் என்று வணங்கி நின்றனர். அசுரர்களின் ஆசைக்கு எல்லையே இல்லாமல் இருந்தது. தேவர்களின் சம்பத்துகள் அனைத்தையும் வசப்படுத்த முனைந்தனர். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே தீராத பகை மூண்டு விட்டது. தேவர்களோ தங்களை இறைவனுக்கு சமமானவர்களாக எண்ணி மற்ற இரு பிரிவினரையும் அடக்கி ஆள ஆசைப்பட்டனர். மனிதர்களும் அசுரர்களுக்கு பயந்துதான் வாழ்ந்து வந்தனர் என்றாலும், சுயநலமும், உலோபமும் மிக்கவர்களாக இருந்தனர். எனவே மூன்று பிரிவினரும் துன்பங்களை அடைந்தனர்.

இதை உணர்ந்த ப்ரம்ம தேவன் உங்கள் மூவருக்கும் துன்பங்களைப் போக்கும் ப்ரும்ம வித்தையை உபதேசிக்கிறேன், அதற்கு முன்பாக குறிப்பிட்ட சில காலம் ப்ரம்மச்சரியம் அனுசரித்து விட்டு பிறகு என்னிடம் வாருங்கள் என்று சொல்லி அவர்கள் யாவரையும் அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட சில காலம் ஆன பிறகு முதலில் தேவர்கள் வந்து ப்ரம்மனை வணங்கி நின்றனர். அவரும் அவர்களுக்கு ''த'' என்று உபதேசம் செய்தார். உபதேசித்த கையோடு என்ன புரிகிறதா ? என்றும் கேட்டார். தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதுதான் அறிவிற்கு முதற் படி. ஆனால், யாருமே தங்களது அறியாமையை ஒத்துக் கொள்வதில்லை. தேவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ? எனவே அவர்கள் புரிந்தது என்று தலையாட்டி வைத்தனர். உடனே ப்ரம்ம தேவன் எங்கே நீங்கள் புரிந்து கொண்டதைச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார். நீங்காத அழகையும், இளமையையும், செல்வங்களையும் உடைய தேவர்கள் அவற்றைக் கொண்டு இன்பங்களையெல்லாம் அடைய வேண்டும் என்ற தீராத வேட்கை உடையவர்கள். எனவே ப்ரம்ம தேவன் தங்களை புலன்களை அடக்கி வாழ வேண்டும் என்று உபதேசிக்கிறார் என்று எண்ணி ''த'' என்றால் ''தமம்'' என்றனர்.

ப்ரம்மனும் சரிதான்.. அதையே கடைபிடியுங்கள் என்று தேவர்களை அனுப்பி வைத்தார். அடுத்தபடியாக மனிதர்கள் வந்து நின்றனர். அவர்களிடமும் ''த'' என்றுதான் உபதேசித்தார். அவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அவர்களும் நாம் உலோபியாகவும், சுயநலம் உடையவர்களாகவும் இருக்கிறோம். எனவே ப்ரம்ம தேவன் நம்மை தானம் செய் என்று சொல்கிறார் என்று எண்ணி ''த'' என்றால் தத்தம் என்று சொல்லி வைத்தனர். ப்ரம்மனும் நீங்கள் சொல்வது சரிதான் அதையே கடைபிடியுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். கடைசியாக அசுரர்கள் வந்து வணங்கி நின்றனர். அவர்களிடமும் ''த'' என்றாதான் உபதேசம் செய்தார். செய்து விட்டு புரிகிறதா என்று கேட்டவுடன், அவர்களும் நாம் பிறரை இம்சிக்கிறோம் எனவே பிறரை இம்சிக்காமல் வாழ வேண்டும் என்று ப்ரம்ம தேவன் சொல்கிறார் என்று எண்ணி ''த'' என்றால் தயை என்றனர். ப்ரம்ம தேவனும் அப்படியே வாழுங்கள் என்று சொல்லி அவர்களையும் அனுப்பி வைத்து விடுகிறார். இவ்வளவுதான் கதை.

கதை சொல்லும் நீதி என்னவென்றால் தமம், தானம், தயை மூன்றையும் கடைபிடித்து வாழ்வதே ப்ரம்ம வித்தை வேறொன்றுமில்லை என்பதேயாகும். மூன்று பிரிவினரும் தங்கள் குறைகளைத் தாங்கள் உணர்ந்துதான் இருந்தார்கள் என்றாலும், தீராத ஆசையும், புலனிச்சையும், இன்ப நாட்டமும் அவர்களது துன்பங்களுக்குக் காரணமாக அமைகின்றது என்பது தெளிவு. இந்த மூன்றையும் கடைபிடித்தால் மட்டுமே ஒருவன் துன்பமின்றி வாழ முடியும்.



இதுதான் உண்மை. மண்ணாண்டவர் கோடி, மலையாண்டவர் கோடி. யாரும் இங்கே நிலைத்த தில்லை. எதையும் கொண்டு வந்ததுமில்லை, கொண்டு போவதுமில்லை. பிறகு ஏன் இவ்வளவு ஆசை ? இவ்வளவு மோகம் ? இவ்வளவு இன்ப தாகம் ? நிலையாமையை உள்ளது உள்ளபடி உணர்ந்து நடப்பவனுக்கு ஒரு போதும் துன்பமில்லை என்பதே உண்மையாகும். இதையே எதிர்மறையாக சிந்தித்து, வாழ்வது சில காலம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விட வேண்டும் என்ற போக்கில் வாழும் பொழுது துன்பங்கள் தொடர்கதைதான். அதிகமாக ஒன்றுமில்லை, மூன்றே விஷயம்தான். புலன் நுகர்ச்சியில் விருப்பம், கஞ்சத்தனம், இம்சிக்கும் புத்தி இந்த மூன்றையும் ஒருவன் களைந்து விட்டாலே போதும் உலகம் முழுவதும் இன்பமாகத் தோன்றும். எனவே இந்த மூன்று தீய குணங்களை நீ இறைவனிடத்தில் தத்தம் செய்து விட்டால் உலக இன்பம் முழுவதிற்கும் நீதான் சொந்தக்காரன்.