🤲🏽 *பிரார்த்தனைகள் நிறைவை தருமா...?* 🤲🏽
இதை யார் நம்புகிறார்களோ இல்லையோ என்பதை பற்றிய கவலையோ, தேவையோ இறைவனுக்கு ஒரு போதும் கிடையாது. அவனின் கட்டளைகள் படி இங்கே எல்லாமுமே நடந்து அடித்துக் கடந்து,
போய்க் கொண்டே தான் இருக்கும்.
இவ்வாழ்வும் எம்மை அதன் போக்கில் தான், இல்லை அதன் போக்கில் மட்டும் தான் இழுத்துக் கொண்டு போகும். நாமும் முட்டி மோதி நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். நான் இதன் பின்னால் வர மாட்டேன் இத்தோடு நின்று கொள்கிறேன், என்னால் இனி எந்த சங்கடத்தையும் வாழ்வில் ஏற்க வலிமை கிடையாது, போதும் வாழ்ந்தது, என்றெல்லாம் சொல்லி விட்டு ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டாலும்,
சூரியன் உதிக்கும், இரவும் பகலும் மாறுகின்ற சுழற்சி நடக்கும், கடல் இயங்கும், வானம் மழையை பொழியும், பூமியில் தாவரங்கள் வளரும், சந்திரன், நட்சத்திரம் என இப்பிரபஞ்சத்தின் எதுவும் நமக்காக காத்திருக்கப் போவதில்லை.
இப்படி மரணத்தின் பிடிக்குள் சிக்கும் வரை இவ்வாழ்வின் இன்ப துன்பங்களை எல்லாம் மாறி மாறி கடந்தே தீர வேண்டும் என்பதே அழுத்தமான நியதி.
அப்படி கடக்கையில் பிரச்சனைகள், சோகங்கள், கவலைகள், அரண்ட சூழ்நிலைகள், தாங்கிக் கொள்ள இயலாத ரணங்கள், வலியின் விளிம்புகளில் வாழ வேண்டிய கட்டாயங்கள் எல்லாம் மனிதனுக்கேற்ப மாறி மாறி இங்கே உண்டாகிக் கொண்டு தான் இருக்கும்.
அச்சூழலில் தான் பிரார்த்தனைக்கும் நமக்குமான தொடர்பாடலும், அதற்கான முக்கியத்துவமும் உள்ளத்தில் அதிகமாக உண்டாகும், ஏனெனில் மனிதனால் இயலாத எல்லாவற்றையும் இறைவனால் சாத்தியப்படுத்த இயலும் என்ற பூரண நம்பிக்கை தான் காரணம்.
அப்படியும் கூட பலர் சொல்வார்கள், என்ன பிரார்த்தித்து என்ன பயன்? நான் கேட்டவைகள் கிடைக்கவுமில்லை, எனது எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறவுமில்லை, எனது இத்துனை கால சோக வாழ்வு மாறவும் இல்லை, இப்படி பல காரணங்களை கூறி விரக்தியுற்று பேசுவதை காணலாம்.
சரி, அப்படியே பிரார்த்தனை செய்யாது இருந்திருந்தால் மட்டும் இந்நிகழ்வுகள் ஏதும் எம்மை விட்டு தூரமாக போயிருக்குமா? அல்லது அதை விட்டு நாம் தப்பியிருக்கலாம் என்ற உத்தரவாதம் ஏதும் நம் கையில் உண்டா? அரங்கேறுவதையும், நடந்தேற இருப்பதையும் ஒரு போதும் இயலாமை கொண்ட இந்த மனித இனத்தால் நிறுத்தி விட முடியாது. ஆதலால் நம் சிந்தனைகளுக்குள் எட்டாத அளவுக்கான ஒரு சக்தி கொண்ட, படைத்தவனிடம் தான் நாம் சரணடைய வேண்டும்.
அத்தகைய இறை சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை பற்றிய கவலை எல்லாம் இறைவனுக்கு கிடையாது, அவன் கர்மாக்களின் நிகழ்வுகளுக்கான தீர்வை அறிந்தவன், அதை நாம் முறையிட்டு அவனிடம் கேட்க வேண்டும் என்பதையும் விரும்புபவன்.
எனவே நம் முறைப்பாடுகளை அவன் முந்நிலையில் சமர்ப்பிப்பதே சாலச்சிறந்தது. அதில் மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டு. யாரிடமும் தலை குனிந்து நிற்க தேவையற்ற ஓர் மகிழ்ச்சி, உதவி பெற்றதற்காக யாருக்கும் நாசுக்காக நன்றி செலுத்த தேவையற்ற நிரப்பமான மகிழ்ச்சி. நேர்மறையான நம்பிக்கை சக்தி தரும் மகிழ்ச்சி...
இந்த நேர்மறையான சக்தியின் நம்பிக்கையே நமது துயரங்களை தாங்கும், தாண்டும் வலிமையை தரும் என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இறை சக்தியின் மேல் நம்பிக்கை மேற்கொள்ளும் பிரார்த்தனைகள் எப்போதும் நிறைவு தரும்.
நன்றி...
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨
🚩சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🚩