Wednesday 15 March 2017

எதிர்பார்ப்பு

ஒரு அடியாரின் உணர்வு பகிர்வு..,

*எதிர்பார்ப்பு*

ஏதாவது ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அதற்கான விளைவு நமது மனம் விரும்பிய வாறு, இப்படித் தான் வர வேண்டும் என எண்ணிக் கொண்டு, மனதில் ஒரு பற்றுடன், அந்த செயலை செய்வது தான் எதிர்பார்ப்பு.

அவ்வாறு எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்து, விளைவு நம் மனம் விரும்பியவாறு வரவில்லை என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

இத்தகைய ஏமாற்றமே நம் மனதில் கோபம், வஞ்சம், கவலை போன்ற மிகப் பெரிய தாக்கங்கள் ஏற்படக் காரணமாகிறது. இதனால் மனதிலும் உடலிலும் ஆரோக்கிய குறைபாடு தான் உருவாகும்.

எதிர்பார்ப்பினால் நமக்கு நன்மை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால் எதிலும் பற்று கொண்டு செயலாற்றி, எதிர்பார்ப்பினை வைக்காமல், அதற்கு பதிலாக எதிர்காலத்திற்கான குறிக்கோள் மற்றும் திட்டங்களை மட்டும் வகுத்து வைத்து விட்டு, பிறகு செயலில் ஈடுபடும் போது தன்னம்பிக்கையுடனும் முழு ஈடுபாட்டுடனும் நமது கடமைகளை கவனமுடன் செய்து வருவதே மிகவும் சிறந்தது.

*கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே* என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜூனருக்கு எடுத்துரைப்பதைப் போல, செய்யும் செயலில் பற்று வைக்காமல் வாழ்வோமானால் வாழ்வில் எப்போதும் இன்பம் மட்டுமே இருக்கும்.

*ஏற்புத் திறன்* (Acceptance)

ஒரு செயல் நல்ல படியாக நடக்க வேண்டும் என சங்கல்பம் செய்வது சரி தான். ஆனால் விளைவு வரும் போது அது எத்தகையதாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

இயற்கையின் செயல்விளைவுத் தத்துவத்தைப் புரிந்து கொண்டால் இது மிகவும் எளிது. அதாவது நாம் செய்யும் *செயலில் மட்டுமே நமக்கு உரிமை உள்ளது, விளைவில் இல்லை*.
அது நம் தகுதிக்கும் செயலுக்கும் ஏற்ப காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயமாக ஒரு விளைவு உண்டு.

*உதாரணம்*

ஒருவர் காய்கறிக்கடை வைக்கிறார் என்றால், தொழில் நல்லபடியாக நடந்து எல்லாமே விற்றுவிட வேண்டும் என்று தான் அவரது எண்ணம் இருக்க வேண்டும். ஆனால் என்றாவது ஒரு நாள் சரியாக விற்க வில்லை என்றால் அதனையும் அவர் ஏற்றுக் கொள்வது தான் அவருக்கு நல்லது.

இங்கு ஏற்றுக் கொள்வது என்றால், எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது என்று பொருளாகாது.

நடந்து முடிந்த விளைவை ஒப்புக் கொண்டு, *இதிலிருந்து நமக்கு என்ன தெளிவு ஏற்பட்டது*....
இனி வியாபாரம் சிறப்பாக நடைபெற நாம் *நமது செயலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என சிந்தித்து உணர்வதே ஒருவருக்கு வாழ்வில் வளர்ச்சியைக் கொடுக்கும்*

வாய்ப்பிற்கு நன்றி
வாழ்க அன்புடன்!