Sunday 19 March 2017

தியானம்

தியானம் மிகவும் எளிமையானது.

படுக்கையில் உட்காருங்கள், உடலை தளர்த்திக் கொள்ளுங்கள், கண்களை மூடுங்கள். நீங்கள் ஒரு மலைப்பகுதியில் தொலைந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அது கருமையான நள்ளிரவு, வானத்தில் நிலவில்லை; மேகமூட்டத்துடனான வானம். ஒரு நட்சத்திரத்தைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லை. முழுஇருள். உங்கள் கைகளைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லை. நீங்கள் மலைப்பகுதியில் தொலைந்து விட்டீர்கள். வழி தெரியாமல் கஷ்டப்படுகிறீர்கள்.

அங்கே ஒரு ஆபத்திருக்கிறது, எந்த நிமிடமும் நீங்கள் ஏதோ ஒரு பள்ளத்தாக்கில் விழலாம். எங்கோ படுபாதாளத்தில் வீழ்ந்துவிடலாம். நீங்கள் காணாமலேயே போய்விடலாம். நீங்கள் எச்சரிக்கையாக அடியெடுத்து வைக்கிறீர்கள்.

பெரும் ஆபத்திருப்பதால் நீங்கள் மிகுந்த உஷாராக இருக்கிறீர்கள். ஆபத்து அதிகமாக இருக்கும்போது ஒருவர் எச்சரிக்கையாகதானே இருப்பார்.
மிகவும் இருளானஇரவு, மலைப்பகுதி என்று கற்பனை செய்து கொள்வது ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிக் கொள்ளத்தான்.  நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறீர்கள். ஒரு ஊசி கீழே விழுந்தால்கூட உங்களால் கேட்க முடியும். பிறகு திடீரென்று செங்குத்தான ஒரு பகுதிக்கு வருகிறீர்கள். அதற்குமேல் போகமுடியாது என்று தெரிகிறது மேலும் அந்த பள்ளத்தாக்கு எத்தனை ஆழமானது என்பதும் தெரியாது. அதனால் நீங்கள் ஒரு கல்லை எடுத்து அந்த பள்ளம் எத்தனை ஆழமானது என்பதை தெரிந்துகொள்ள எறிகிறீர்கள்.

இப்போது அந்த கல் எந்த கல்மீது மோதி சத்தம் ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள காத்திருங்கள். அந்தசத்தம் வருகிறதா என்று கவனியுங்கள், கவனியுங்கள் கவனித்துக் கொண்டேயிருங்கள். ஆனால் எந்த தகவலும் இல்லை, ஏதோ அந்தபள்ளத்தாக்கிற்கு கீழ்ப்பகுதியே இல்லாததைப்போல. நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்கையில் ஒரு பெரும்பீதி உங்களுக்குள் பரவுகிறது.

அந்தபீதி இப்போது உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைப்போல ஒரு விழிப்பை ஏற்படுத்துகிறது.
அது உண்மையில் உங்கள் கற்பனையாகவே இருக்கட்டும். நீங்கள் கல்லை எறிந்துவிட்டு காத்திருங்கள்.  நீங்கள் பொறுமையாக காத்திருந்து கவனியுங்கள். மார்பு துடிக்க நீங்கள் காத்திருங்கள், ஆனால் சத்தமில்லை. அங்கே ஒரு ஆழ்ந்தமெளனம்.

அந்த மௌனத்தில் நீங்கள் தூங்க ஆரம்பியுங்கள். அந்த சத்தமில்லாத மெளனத்தில் நீங்கள் ஆழ்ந்ததூக்கத்திற்கு போகிறீர்கள்.

-osho