Saturday 18 March 2017

பைத்தியக்கார ஏமாளி

ஒரு தேநீர் கடையில் நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவன் கூறினான். "நேற்று இரவு நான் தியானித்துக் கொண்டிருந்த போது ஒரு தேவதை என் முன் தோன்றியது.ஒரு புதிய தீர்க்கதரிசியாக கடவுளால் நீ தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாய்." என்று கூறியது.

அவர்களுள் ஒருவன் கூறினான். "உன்னையா? ஏன்? "

அந்த மனிதன் கூறினான். "இந்தக் கேள்வியை நானும் அந்தத் தேவதையிடம் கேட்டேன். என்னையா,ஏன்?" அந்த தேவதை பதிலளித்தது, "ஏனென்றால் உன்னைவிட ஒரு பைத்தியக்கார ஏமாளி வேறு யாரும் இல்லை."

எந்தக் குரலையும் நம்பாதீர்கள். யதார்த்தமாக தனித்திருங்கள். யதார்த்தமாகக் கவனியுங்கள். அப்போது அவை மறைந்து விடும்-ஏனென்றால் அவற்றிற்கு நீங்கள் செவிசாய்த்து நடந்து கொள்ளாவிட்டால் அவற்றின் உற்சாகம் போய்விடும்.

எல்லாவித குரல்களும் சென்றுவிடும் போது அங்கே ஓர் அலாதி மௌனம் தங்கி இருக்கும்.

அந்த மௌனம் தான் கடவுளின் குரல்.

நினைவில் கொள்ளுங்கள், மௌனத்தைத் தவிர வேறு எந்த விதமான குரலும் கடவுளிடம் இல்லை.

அவர் எதுவும் சொல்வதில்லை. சொல்வதற்கு அங்கு எதுவும் இல்லை;வார்த்தை ரீதியான தொடர்பு அங்கு இல்லை.

ஆனால் அந்த மௌனம், ஆழ்ந்த மௌனம் உங்களுக்குத் தெளிவைத் தருகிறது, உங்களுக்கு ஒளியைத் தருகிறது,சரியான பாதையை உங்களுக்கு வழிகாட்டுகிறது.

அதாவது, இந்த திசையில் செல் என்று அது சுட்டிக் காட்டுவதில்லை. எல்லாவிதமான வரைபடத்தையும் அது தருவதில்லை. எந்த வழிகாட்டியையும் அது அளிப்பதில்லை, அது போன்ற விஷயங்கள் எதையுமே செய்வதில்லை;

அது வெறுமனே உங்கள் பாதையைப் பார்ப்பதற்கான கண்களைத் தருகிறது அவ்வளவுதான். அதன் பிறகு கண்களுடன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் நடக்கத் தொடங்குகிறீர்கள்.

வழக்கமாக நீங்கள் ஒரு குருடனாகத்தான் நடக்கிறீர்கள். ஒரு குருடனுக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள், ஒரு குருடனுக்கு குரல்கள் தேவைப்படுகின்றன.ஒரு குருடனுக்கு வரைபடங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் கண்கள் கொண்டுள்ள மனிதனுக்கு எவையும் தேவையில்லை.

--ஓஷோ--