Sunday, 13 May 2018

வாழ்த்து

வாழ்க்கை மலர்கள்: மே 12

இறையோடு இணைந்த செயல்

நாம் வாழ்த்தும் போது முதலாவது நமது மனம் இறை உணர்வோடு அதாவது அறிவின் இயக்கத்தில் நுண்ணிய பகுதியை அடைகிறது. “வாழ்க” என்று சொல்லும்போதே, குளிர்ச்சியாக நல்ல எண்ணத்தோடு சொல்லும் போது, நாமே முதலில் நம்மை வாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த அலை எழும் போதும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இப்படி வாழ்த்தி வாழ்த்திச் சிறிது காலத்தில் நீங்கள் தானாகவே இறை உணர்வில் கலந்திருக்கும் நிலை உருவாகும். இவ்வாறு வாழ்த்திப் பழகிக் கொண்டவர்களுக்கு எல்லாச் செயலும் அந்த இறையோடு இணைந்த செயலாக, நற்செயலாக இருக்க முடியும். அதே போல நீங்கள் ஒரு வாழ்த்துச் சொல்கிறீர்கள், பல தடவை சொல்கிறீர்கள். ஆயிரம் தடவை சொல்லும்போது ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு நினைவுக்கும் அந்த வாழ்த்துக்கும், ஆயிரம் தடவை வாழ்த்திவிட்ட பிறகு ஆயிரத்தோராவது தடவை வாழ்த்தினால் என்ன பலன் என்றால், ஆயிரத்தோரு தடவை வாழ்த்தினால் என்ன பலனோ அந்த அளவுக்கு அழுத்தம், பயன்பெறும். ஆகவே ஓய்வு இருக்கும் நேரத்தில் எல்லாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தவம் செய்த பிறகு இருக்கும் நேரத்தில் என்ன செய்வது, அதற்கு ஏதாவது மந்திரங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அதற்குத் தேவையே இல்லை, வாழ்த்து என்கிற மந்திரம் எப்பொழுதும் இருக்கிறது. உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? ஐம்பது பேர், நூறு பேர் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதிலே ஒருவரை எடுத்துக் கொண்டு நூறு தடவை வாழ்த்துங்கள், பிறகு இன்னொருவரை நூறு தடவை வாழ்த்துங்கள். தீமை செய்தவரை முதலில் வாழ்த்துங்கள். நன்மை செய்தவரைப் பின்னால் வாழ்த்துங்கள். அதன் பிறகு நேரம் இருக்கிறதா என்று பார்த்தால் நேரமே இருக்காது. நீங்கள் வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க, உயிர் கலப்பு வர வர தீமை செய்யக் கூடியவர்கள், தீமையான எண்ணம் உடையவர்கள் எல்லாம் நாம் நினைக்கும்போது அவர்களுக்கும் ஒரு திருப்பம் வந்து விடும். இவரோடு போராட்டம் செய்தேனே, இவருக்குப் போய் தீமை செய்தோமே, தவறாக நினைத்தோமே என்ற எண்ணம் வரும். இந்த உயிரோட்டம் (Interaction) அவர்கள் உள்ளத்திலே தானாகவே அவர்களுடைய நிலைமையை மாற்றி, குணத்தை மாற்றி நன்மையே செய்வதற்குப் பலன் கொடுக்கும். ஆகவே நல்லவர்களை வாழ்த்துவதனால் நன்றி தெரிவித்துக் கொள்கின்றீர்கள். பொல்லாதவர்களை வாழ்த்துவதனால் இரண்டு பலன் கிடைக்கிறது; தீமையை முதலில் விலக்கிக் கொள்கிறோம், அது மாத்திரம் இல்லை; அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க அந்தத் தீமை செய்தது போக நன்மை செய்கிறான்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி