Tuesday 30 August 2016

கஜூராஹோ மற்றும் கோனார்க

கஜூராஹோ மற்றும் கோனார்க் பற்றி ஓஷோ;

இந்த உலகத்தில் இருக்கும் கோயில்களிலேயே, மிகவும் புனிதம் நிறைந்த கோயில்கள் : கஜூராஹோ மற்றும் கோனார்க் ஆகிய கோயில்கள்தான். மற்ற கோயில்கள் அனைத்தும் மிகச் சாதாரணமானது, பொய்யானது. மேற்சொல்லிய இரண்டு இடங்களில் உள்ள கோயில்கள்தான், உங்களுக்கு வேறுவிதமான செய்திகளை அறிவிக்கின்றன. அது சாதரணமானது அல்ல. மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஏனென்றால், அவை உண்மை. அவற்றுடைய செய்திகள் என்ன?

நீங்கள் அந்தக் கோயிலில் இருந்தால், அந்தக் கோயிலின் வெளிச்சுற்றில் எல்லாவிதமான உடலுறவு நிலைகளைக் காணலாம். அதாவது ஆண்களும், பெண்களும் பலவித நிலைகளில் உடலுறவில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அந்த நிலைகள் நடக்கக் கூடியதாகவும் இருக்கலாம் அல்லது நடக்க முடியாமலும் இருக்கலாம். அதை உங்களால் ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இருக்கலாம். ஏற்க முடியாமலும் இருக்கலாம். அந்தச் சுவற்றின் எல்லா இடங்களிலும், உடலுறவு சிலைகள்தான்! முதலில் அவற்றைப் பார்க்கும்பொழுது, ஒருவனுக்கு அதிர்ச்சி ஏற்படுவது சகஜம். என்ன அசிங்கம் என்று அவன் முகம் சுளிக்கக்கூடும்! அதிலிருந்து ஒருவன் வெளியேறவே நினைப்பான். அவைகளை நிந்தனை செய்வான். ஒருவன் தன் கண்களை கீழே தாழ்த்தக்கூடும். ஆனால், அந்த செய்கையிளெல்லாம் அந்தக் கோயிலால் நேர்ந்தது அல்ல. அவை அனைத்தும் உங்கள் உள்ளே உள்ள பாதிரியார்களாலும் மற்றும் அவர்களால் ஏற்படுத்திய சிறையினாலும்தான்.

அதன் உள்ளே செல்லுங்கள். நீங்கள் அந்தக் கோயிலின் உள்ளே செல்லும்பொழுதே, அந்தச் சிலைகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். அந்த அன்புநிலை மாறுவதைக் காணக்கூடும். அந்தக் கோயிலின் வெளிச்சுவர் முழுவதும் உடலுறவு சிலைகள்தான். ஆனால், உள்ளே நுழையும்பொழுது, காம இச்சை மறைந்து, வெறும் அன்பு மட்டும் இயங்குவதைப் பார்க்கலாம். ஆண்-பெண் இருவரும் மிகுந்த ஆழமான காதலில் இருப்பதைக் காணலாம். அவர்கள் இருவரும் ஒருவர் கண்களை, மற்றவர் ஆழமாகப் பார்த்துக்கொண்டும், கைகளை அன்புடன் கோத்துக்கொண்டும், மற்றபடி வேறுவிதங்களில் தொடாமலும் இருப்பதைக் காணலாம். அந்தக் கோயிலின் உள்ளே இன்னும் மேலே செல்லுங்கள்--அந்த ஜோடிகள் மறைந்தேவிட்டிருப்பார்கள். இன்னும் உள்ளே செல்லுங்கள். ....வெறும் சூன்யம்தான்.

அந்தக் கோயிலின் உள்மையத்தில்--கீழை நாட்டில் அழைக்கப்படும் GHARBA (கர்ப்பா) அதாவது கர்ப்பப்பை (WOMB) இருப்பதாக அர்த்தம். அங்கே எந்த ஒரு சிறு உருவமும் கிடையாது. அந்த வெளிச்சுற்றில் உள்ள கூட்டங்கள் மறைந்துவிட்டன. அதன் உள் மையத்தில், ஒரு ஜன்னல் கூட கிடையாது! வெளியிலிருந்து எந்த வெளிச்சமும் உள்ளே வராது. அங்கே ஒரே இருட்டாகத்தான் இருக்கும். அங்கே அமைதியும், நிசப்தமும் நிலவும். அங்கே எந்தக் கடவுள் சிலையும் இருக்காது. அது வெற்றிடம்தான். அது ஒன்றும் அற்றநிலைதான்!

உள்ளே உள்ள மையம் ஒன்றும் அற்ற நிலைதான்; வெளிச்சுற்றின் வெளிப்பாடு கொண்டாட்டம்தான். உள்ளே உள்ளநிலை தியானம், மற்றும் சமாதி நிலை; வெளிச்சுற்றின் வெளிப்பாடு காம உணர்வு. மனிதனிடம் அமைந்த முழு வாழ்க்கையின் தன்மையே இவைகள்தான்.
ஆனால் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளிச்சுற்றை அழித்தால், நீங்கள் உள்மையத்தையும் அழித்தவராவீர்கள். ஏனென்றால், அந்த ஆழமான, நிசப்தமான உள்மையநிலை, வெளிச்சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்க முடியாது. ஒரு புயலின் மையம், புயல் இல்லாமல் இருக்க முடியாது. பொதுவாக, வெளிச்சுற்று இல்லாமல், உள்மையம் இருக்க முடியாது. அவைகள் இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும். ஓஷோ