Wednesday, 19 April 2017

ஆசை

பாகனின் பேராசை!!!
50 யானைக்கு சொந்தக்காரனாக வேண்டும் என்றும்,
100 ஏக்கர் நிலம் வாங்க வேண்டும் என்றும்,
சுற்று வட்டாரத்திலேயே இல்லாத அளவுக்கு பெரிய வீடு கட்டவேண்டும் என்றும் நூறு வருடங்களுக்கு முன் ஒரு யானைப் பாகன் ஆசைப் பட்டார்!
அவரால் செய்ய முடியாமல் போகவே அவருடைய ஆசையை மகன் நிறைவேற்றுவதாக சபதம் ஏற்றுக் கொண்டான்!
மகனாலும் நிறைவேற்ற முடியாமல் போகவே பேரன் எப்படியாவது அந்த ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று ஆசைப்பட்டான்!
பேரனாலும் முடியாமல் போகவே
விரக்தி அடைந்து, செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று, கடவுளை வேண்ட ஆரம்பித்தான்!
பல நாட்களாக ஒற்றைக்காலில் நின்றிருந்ததால், கடவுள் கொஞ்சம் இரங்கி வந்தார்!
"என்ன உன் பிரச்சனை?" என்றார்!
தாத்தா கனவு, அப்பா கனவு, தன்னுடைய கனவு என்று எல்லாவற்றையும் சொல்லி
50 யானைகள், 100 ஏக்கர் நிலம், பெரிய வீடு என்று எல்லாவற்றையும் சொன்னான்!
நீண்ட கால ஆசையாக இருந்ததால் கடவுள் கொஞ்சம் கன்சிடர் பண்ண முடிவு செய்தார்!
செல்போன் கோபுரத்தில் இருந்து தெரியும்படி, 50 யானைகளை காட்டி, "இந்த யானைகள் ஓகேவா?" என்றார்!
"ஓகே! ஓகே!" என்று சந்தோஷமாக அவன் சொன்னான்!
100 ஏக்கர் பசுமையான நிலத்தை காட்டி
"இந்த நிலம் ஓகே வா?" என்றார்!
"நூறு ஏக்கருக்கு கூடுதலாக இன்னும் நான்கு கிணறுகள் இருந்தால் சௌகரியமாக இருக்கும், பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன். ஓகே! ஓகே!" என்றான்!
தூரத்தில் ஒரு பெரிய மாளிகையை காட்டி "இந்த மாளிகை ஓகே வா?"என்றார்,
"வாசல் தான் மேற்கு பக்கமாக போய்விட்டது, கிழக்கில் இருந்திருந்தால் நிறைய செல்வம் சேர்ந்திருக்கும், ஆனாலும் ஓகே தான்" என்றான்!
"வேறு எதாவது வேண்டுமா? கேள்!" என்றார்,
"இல்லை கடவுளே! நான் அவ்வளவு பேராசைக்காரன் இல்லை. இதுவே போதும்" என்றான்!
"நல்லது.. பத்திரமாக கீழே இறங்கு. இன்னொரு முறை இப்படி செய்யாதே. உயிருக்கே ஆபத்தாக போய்விடும்" என்றார்!
"மிக்க நன்றி கடவுளே! உங்களைப்போய் பலர் இல்லையென்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் முட்டாள்தனமாக..
நீங்கள் இவ்வளவு நல்லவராக இருக்கிறீர்கள்" என்றதும்,
"மிக்க நன்றிப்பா! எனக்கு ஒரு சிறு உதவி மட்டும் செய்யமுடியுமா?" என்று கேட்டார்!
"என்ன உதவி வேண்டும்? கேளுங்கள், இளநீர் எதாவது வெட்டித்தர வேண்டுமா? வெயிலுக்கு குளுமையாக இருக்கும்" என்று சொன்னான்!
"இல்லப்பா! இளநீர் எல்லாம் வேண்டாம்! வேறொரு உதவி வேண்டும்" என்றார்!
"எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். இந்த ஊரிலேயே நம்ம தான் பெரிய ஆள்!" என்றான்!
"வேறு ஒன்றும் இல்லையப்பா.. இந்த அத்தனை சொத்துக்களையும் சந்தோஷமாக ஆண்டு அனுபவித்து விட்டு, வயதான பின்பு இறந்து போவாயல்லவா!
அப்படி இறந்து போய் மேலே வரும் போது, ஒரே ஒரு யானை முடியை மட்டும் கொண்டு வா.
என் மனைவி 'விண்மீன்களை கோர்க்க வேண்டும்' என்று ஆசையாக கேட்டாள்.." என்று சொன்னார்!
"இவ்வளவுதானா? இதற்கா இவ்வளவு தயங்கினீர்கள்?
ஐந்தே நிமிடங்கள் பொறுத்திருங்கள்.. இப்போதே கொண்டு வருகிறேன். இதற்காக ஏன் நான் சாகும்வரை காத்திருக்க வேண்டும்?" என்றான்!
"இல்லை இல்லை.. இப்போது எனக்கு தேவையில்லை,
நீ இறந்து போய், மேலே வரும்போது கொண்டு வந்தால் போதுமானது!" என்றார் கடவுள்!
"இல்லை கடவுளே! இறந்தபின்பு என்னால் கொண்டு வர முடியாது!" என்றான்!
"என்னப்பா நீ, நான் மேலிருந்து இங்கு வந்து உனக்காக இவ்வளவு சொத்துக்களை கொடுத்தேன், நீ எனக்காக ஒரு யானை முடியை கொண்டுவந்து தரமுடியாதா?" என்றார் கடவுள்!
"உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.. இறந்த பின் எதையுமே கொண்டு போக முடியாதல்லவா?" என்றான்!
"இறந்தபின் ஒரு யானை முடியை கூட கொண்டு போக முடியாது" என்று தெரிந்தும் பிறகு உனக்கு ஏன் இவ்வளவு பேராசை வந்தது? என்றார் கடவுள்!
அவனிடம் பதிலில்லை..!
கடவுள் தந்த அத்தனை சொத்துக்களையும் கடவுளிடமே திருப்பி கொடுத்துவிட்டு, அவன் ஒவ்வொரு படியாக கீழே இறங்கிக் கொண்டு இருந்தான்!
இறங்கிய போது கால் தடுமாறி நூறு அடி உயரத்தில் இருந்து அவன் தவறி விழுந்தான்!
அவனுடைய உடல் தரையை தொடும்போது, அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரி குடை சாய்ந்து, கீழே கொட்டிய வைக்கோல் மீது அவன் விழ, எந்த காயமும் இல்லாமல் வெளியே வந்து நிற்க, செல்போன் டவரின் உச்சியில் கடவுளின் முகம் கரைந்து காணாமல் போனது..!