Tuesday, 19 July 2016

தருணங்கள்

இறைவனை இறை அறியும் தாகத்தோடு இந்த பிரபஞ்சம் முழுதும் தன் அகத்துணரும் நுண் அறிவால் அகன்ற அறிவால் இகமும் புறமும் இந்த பிரபஞ்சத்தையும், துலாவி கொண்டிருக்கிற உயிர் உணர்வாளர்களே......

இறைத் தாகம் கொண்ட நெஞ்சங்களே அகத்திலும், புறத்திலும் பூரண நிறைவைத் தர வாழ்த்துக்கள் கூறி வணங்குகிறேன்.

வெறும் இறை அறிவை பெறுவதற்காக மட்டும் நாம் பிறவி எடுத்து வர வில்லை.

தேவைகளைப் பொருத்து அகத்திலும், புறத்திலும் போராட்டமான இந்த வாழ்வின் சுழலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மனிதன் தன அளவை தாண்டி போராடிக் கொண்டிருக்கிறான்.

அதனால் இந்த வாழ்க்கை வெறும் ஆன்மீகம் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியாது.

இறைவன் எங்கோ ஒரு பூசைக் குரிய பொருளாக இல்லை.

அவன் நம் ஒவ்வொரு உருவத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறான்.

நாம் தொடர்பு கொண்டு தான் இருக்கிறோம்.

நம்முடைய விரிந்த அறிவு மெல்ல மெல்ல இந்த பேரறிவோடு கலக்கும்போது நம்மை சூழ்ந்துள்ள காற்று, மரம், செடி, கொடி, பல்லுயிர்கள் மற்றும் கல், மண், என்ற பஞ்ச பூதங்களும் சரி, அனைத்துமே அன்போடு நம்மை பார்ப்பதை உணர முடியும்.

காற்று காதோடு குறுகுறுப்பதை உணர முடியும்.

மண் கூட நம்மை அன்போடு நோக்கிவதை உணர முடியும்.

இது பைத்தியகாரத்தனம் இல்லை.

இந்த விரிந்த அறிவின் நிகழ்வில் நாம் நிற்கும்போது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியும் தன்னுடைய அன்பை நமக்கு செலுத்திக்கொண்டு இருக்கும் நிலை இது.

அப்போது அதை உணர்வுப்பூர்வமாக உணரும்போது கண்ணீர் மட்டுமே ததும்பும்.

அந்தக் கண்ணீர்....... “ஹே இறைவா என்மேல் இவ்வளவு அன்பு கொள்ளும் அளவிற்கு நான் இன்னும் உன்னை முழுமையை உணரவில்லையே, சராசரி பிண்ட சரீரத்தின் ஊடே சராசரி குறுகிய அன்பை எதிர்பார்த்த எனக்கு இப்படிப் போன்ற ஒரு விரிவான அன்பை தருகிறாயே இறைவா....!!!

நான் எதைக்கொண்டு இதை ஈடு செய்யவது.....???

இதில் என்னுடையது என்று எது இருக்கிறது.....???

இந்த உடலும், பொருளும் அனைத்தும் உன்னுடையதை தவிர என்னுடையது என்று என்ன இருக்கிறது......??? என்று கதை சொல்லும்.

அந்த அன்பில் வாழும்போது, நனையும்போது, அதில் கரைந்திடும்போது காதலின் ரசவாதத்தில் இணைந்து இருக்கின்ற தருணங்கள், இறை இகழ்வில் தன்னை இழந்துவிட்ட தருணங்கள் இந்த தருணங்கள் ஒவ்வொரு மனிதனும் சந்திக்க வேண்டிய தருணங்கள்........!!!