புகழ்பெற்ற தத்துவவாதியாக விளங்கிய தனது நண்பரின் வீட்டிற்குச் சென்ற அந்த மனிதர், சுவரில் ஒரு அழகான படச்சட்டம் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
ஆனால் அதனுள் படம் இல்லை.வெறும் சட்டம் தான் இருந்தது.தனது தத்துவவாதி நண்பரிடம்,
"படம் இல்லாமல் வெறும் ஓவியச் சீலையை மாட்டி வைத்திருப்பதின் அர்த்தம் என்ன?" என்று கேட்டார்.
அதற்குத் தத்துவவாதி, "எகிப்தியர்கள் இஸ்ரேலியர்களை செங்கடலுக்கு அப்பால் விரட்டியது குறித்த அழகான காட்சி அது" என்று கூறினார்.
கேள்வி கேட்டவர் தலையைச் சொறிந்தார். "எனக்கு ஒன்றும் புரியவில்லையே! படத்தில் எங்கே செங்கடல் தென்படுகிறது?"
"இஸ்ரேலியர்கள் கடந்து செல்வதற்காக கடல் வழி விட்டு விலகிச் சென்றுவிட்டது" என்றார் நண்பர்.
"அப்படியா? ஆமாம். அந்த இஸ்ரேலியர்கள் எங்கே?"
"அவர்கள் கடற்கரையின் மறுபக்கம் சென்று விட்டார்கள்."
"எனக்குப் புரிந்துவிட்டது. இஸ்ரேலியர்களை விரட்டிச் சென்ற எகிப்தியர்கள் எங்கே?"
"அவர்கள் இன்னும் இங்கு வந்து சேரவில்லை." என்று நண்பர் சிரித்தார்.
தத்துவம் என்பது வெற்று ஓவியச்சீலை போன்றது. அது குறித்து ஆயிரத்தொரு விதமான கற்பனைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
ஆனால் உண்மையில் அதில் எதுவும் இல்லை.
நீங்கள் கற்பனையாக கடவுளையும்,சொர்க்கத்தையும்,
நரகத்தையும் காண்கிறீர்கள்.
ஆயிரத்தொரு விஷயங்களை நீங்கள் கற்பித்துக் கொள்ள முடியும். அவை எல்லாம் கற்பனைதான். அவை பகல் கனவுகள்.
--ஓஷோ--