Saturday, 30 July 2016

எண்ணெய்க்குடம்

#  எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்து விட்டேன்.

ஒரு முறை எண்ணெய் வியாபாரி ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் பரமஹம்சரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். பரமஹம்சரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது. “குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும் பொருள் சேர்ந்தது. வயது அதிகமானதால் தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வந்துவிட்டது. என் சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு, வியாபாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்ட பிறகும் எனக்கு தெய்வ தரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?'' என்று ஏக்கத்துடன் கேட்டார். ராமகிருஷ்ணர் அந்த வியாபாரியைப் பார்த்து, "வியாபாரியான நீ நேற்று வரை வியாபாரத்தில் அக்கறை காட்டினாய். உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய்க் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெய்யை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள். அதில் இருந்த எண்ணெய்தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?'' என்று கேட்டார். வியாபாரி, "குருவே! என்னை மன்னித்து விடுங்கள். நான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்து விட்டேன். சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம். ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்,'' என்று சொல்லியபடி பரமஹம்சரை வணங்கினார்.