Sunday 26 February 2017

பிரச்சினையா?அசௌகரியமா? 

*வாழ்க்கை பாடம்:*

 பிரச்சினையா?அசௌகரியமா? 

*Life lessons *

-Problems? Inconveniences

அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், ’நான் கற்ற பாடம்’ என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.

 ‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில் 'பிரச்சினை’ என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:

‘நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே பிரச்சினை. இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.

மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள் (inconveniences). இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘ என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.

அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.

 கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது" என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்.

*நீங்களும் நிதானமாக யோசியுங்கள்*:

*உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா*, 

*இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!*

Friday 17 February 2017

துன்பம் நிரந்தரமாய் நீங்க...

துன்பம் நிரந்தரமாய் நீங்க...

துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.

அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.

ஓஷோ -----🌹🌹

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🕉🕉🕉பக்தி் 6🕉🕉🕉
எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.
வாழ்க வளமுடன்.
நன்றி.
🔯🕉பக்தி🕉🔯