Sunday 28 October 2018

வெற்றி

*வெற்றி என்பது என்ன*?

தெரு ஒரத்தில் குச்சிநட்டு ஆடினான் அந்தச் சிறுவன். அதன் பின் டெண்டுல்கராக மாறினான். சன்னலே இல்லாத ஒரு குடிசை. அதில் வசித்தான் அந்த எழைச் சிறுவன். ஆரம்பத்தில் வெறும் 30 டாலர் சம்பளம். நாளடைவில் 300 கோடிக்கும் அதிகமான சம்பாத்தியம். இவர்தான் உலக கால்பந்தாட்ட ‘நம்பர் ஒன் ரொனால்டோ’. பசி பட்டினியோடு வாழ்ந்தான் அந்த இளைஞன். மின்விளக்கு வசதி இல்லை. மண்ணெண்ணெய் விளக்கேற்றிக் கூட படிக்க முடியாத வறுமை. தெருவிளக்கில் படித்தான். வழக்குரைஞராக, நீதிபதியாக வாழ்வில் உயர்ந்தான். தனது உயர்வுக்கு அடையாளமாக இன்றளவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை உருவில் நிற்பவர் முத்துசாமி.

இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அவற்றை அடைய முயல்வதே வெற்றி.

100 விழுக்காடு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு 150 விழுக்காடு முயற்சியை மேற்கொள்வது.

உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை,பேராற்றலைத் தட்டி எழுப்புவது.

சந்தர்ப்பங்களுக்காக காத்திராமல் மாவீரன் நெப்போலியன் போல சந்தர்ப்பங்களைத் தாமாகவே உருவாக்கிக் கொள்வது.

*உண்மையில், வெற்றி என்பது ஒரு இடைவிடாத ‘இயக்கம் Process' விதைகளை விதைக்கும் செயல். விதையிலிருந்து மரம். மரத்திலிருந்து மீண்டும் விதை என்று தொடரான இயக்கம்*.

நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும் தனது அறிவை வளர்த்துக் கொள்வதும் மாணவனின் வெற்றி. நோயாளிகளின் உயிரைக் காத்து ‘ராசிக்காரர்’ என்று பெயரெடுப்பது மருத்துவரின் வெற்றி. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது வழக்குரைஞரின் வெற்றி. அதே போல, தன் உற்பத்திப் பொருளைச் சந்தையில் தரத்துடன் நிலை நிறுத்துவதும், தனது நிறுவனத்தை உலகச் சந்தையில் முன்னணியில் நிறுத்துவதும் ஊழியர்களின் வெற்றி.

“ எனக்கு அதிகமாகத் தேவைப்படுபவர் யார் என்றால்... என்னால் இயன்றதைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்ஸன்.

நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்! சிறுவர்கள், இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் என்று எத்தனை மனிதர்கள்! இவர்களுக்கு தங்கள் லட்சியம் எது என்று தெரியவில்லை அதற்கான விழிப்புணர்வும் இல்லை. அதனால் தான், அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன.

நடுவயதைக் கடந்த எத்தனையோ பேர் அதன் பிறகு பேரறிஞர்களாக... தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன. அதற்கு உந்துகோலாக இருந்தது எது? அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்.

50.000 குழந்தைகளை 30 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு - “ *பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் சக்திமிக்கவை; குழந்தைகளை அதிகமாக பாதிப்பவை*.”

ரஸ்கினுடைய நூலைப் படித்ததும் பீச்சர் ஒரு மனிதாரய் ஆனார். தோல்வி அடைந்தவர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும். அதனால்,

*உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள்*.

உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும் நீங்கள் முழு மனிதர்களாக மாற உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

உண்மையில், *ஆர்வமானது தொற்று நோயைப் போன்றது. நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்*.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகல் இதுதான் : ‘ *ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்*!’

வேண்டா வெறுப்பாக... முக்கி முனகிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரியும் ஒருவர் இறைவன் அவனுக்களித்த வாய்ப்பை நிராகரிக்கிறார் என்றுதான் பொருள்

யாரொருவர் தனது வேலையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பேணுதலுடன், ஆர்வத்துடன் மதித்து செய்கிறாரோ அவர் வாழ்வில் முன்னேறத் தொடங்கி விட்டார் என்றே பொருள்.

நம்முடைய துறைசார்ந்த அல்லது தொழில் எதுவானலும் அதில் நமக்கு போட்டியாளர்கள் இருப்பது மிகவும் நல்லது அப்படி இல்லையென்றால் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இறுதியாக

*உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும் கால்கள் வலிக்கும் களைப்பாகும் இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்தி பார்க்கும் ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும் தளராதீர்கள் செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்*.

என்றென்றும் மிகுந்த மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனனும் உங்கள் நண்பன் ..

வேகம் விவேகம்

விவேகம்

முனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள்
தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது தமது
காதில் ஓணான் புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார். மறுநாள்
அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவ்வாறே சொன்னார்.

முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்!"
என்று வருத்ததோடு கூறிவிட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

இரண்டாமவன், "முனிவரின் முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்திருக்கலாம்!"
என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.

மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர்
ஆணித்தரமாக. "முனிவர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான். அதுவரை
வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளிப்பட்டார்.

"எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.

"அய்யா, உங்களின் மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின்
முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது
என்பது நடக்காத காரியம். எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.
விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்
முனிவர்.

எனவே  வேகம் மட்டுமே முக்கியமில்லை. விவேகமும் கட்டாயம் வேண்டும்.

Sunday 7 October 2018

காரணம்

படிக்க வேண்டிய ஒரு குட்டிக்கதை.

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ,j கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.

அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

அரண்மனைகளில்
கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.

வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.