Sunday 28 May 2017

நிம்மதி

❤பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான்.
தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த தேநீர் சட்டியில் இருந்து குளிர்ச்சியான நீரைக் குடித்து கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவான். அவன் மிக அமைதியாக உணரும் தருணங்கள் அவை.
அவன் தொடர்ந்து வேலை செய்யத் தேவையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தருணங்கள் அவை.
அவன் வாழ்க்கை இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் அவன் அப்படி அந்த தேனீர் சட்டியில் இருந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கையில் ஒரு வழிப்போக்கன் அவனையே உற்றுப் பார்த்தான். கொல்லன் அவனிடம் கேட்டான். “ஐயா என்ன பார்க்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?”
”உங்களின் தேனீர் சட்டியைப் பார்த்தேன். மிக வித்தியாசமாக இருக்கிறது”
கொல்லன் சொன்னான். “இந்த தேனீர் சட்டி மிகப் பழையது. என் தந்தை இருக்கும் வரை இதில் தான் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து குடிப்பார். அவருக்குப் பின் நான் இதை உபயோகித்து வருகிறேன். களைப்பும் தாகமும் ஏற்பட்டால் நான் இதிலிருக்கும் தண்ணீரைக் குடித்து சற்று இளைப்பாறுவேன்”
“அதை நான் சற்று ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டான் அந்த வழிப்போக்கன்.
இந்த பழைய சட்டியை ஆராய என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக கொல்லன் அந்த தேனீர் சட்டியை அந்த வழிப்போக்கனிடம் தந்தான். வழிப்போக்கன் அந்த தேனீர் சட்டியைக் கையில் பிடித்து அதனை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தான். பின் சொன்னான். “ஐயா, இந்த தேனீர் சட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு புராதனப் பொருள்”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் அங்கு கூடி விட்டார்கள். அவர்களில் ஒருவன் ஏளனமாகச் சொன்னான். “இந்தப் பழைய சட்டியைப் போய் இப்படிச் சொல்கிறீர்களே. பார்த்தால் சாதாரணமானதாகத் தானே இருக்கிறது”
வழிப்போக்கன் சொன்னான். “இதற்கு முந்தைய மன்னர் பரம்பரையினர் காலத்தில் இது போன்ற ஒரே மாதிரியான மூன்று தேனீர் சட்டிகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டன. இரண்டு தேனீர் சட்டிகள் இன்றும் நம் அரசவையில் இருக்கிறது.
மூன்றாவது தொலைந்து போய் விட்டதாகக் கருதப்பட்டு வந்தது. இதைப் பார்த்த பின்பு தான் இது இன்னமும் இருப்பது புரிந்தது. இந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பார்த்தால் இதன் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.”
இதைக் கேட்ட அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். உடனடியாக கொல்லன் அந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தான். பின் பார்த்த போது வழிப்போக்கன் சொன்னது போல அந்த சட்டியின் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருந்தது. இது வரை யாரும் அப்படிப் பட்ட முத்திரை உள்ள பாண்டங்களைப் பார்த்ததில்லை.
வழிப்போக்கன் கேட்டான். “ஐயா இந்த அபூர்வ சட்டியை நீங்கள் விற்க விரும்பினால் நானே வாங்கிக் கொள்கிறேன். நூறு பொற்காசுகள் வரை தர நான் தயாராக இருக்கிறேன்”
கொல்லனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அக்காலத்தில் நூறு பொற்காசுகள் என்பது மிகப் பெரிய செல்வம். கொல்லன் தன் வாழ்நால் எல்லாம் கடுமையாக உழைத்தாலும் அந்த அளவு செல்வத்தை சம்பாதிக்க முடியாது. கொல்லன் சம்மதித்தான்.
வழிப்போக்கன் இன்னும் சில நாட்களில் பொற்காசுகளுடன் வந்து அந்த தேனீர் சட்டியை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு சென்றான்.
கூடியிருந்தவர்களுக்கும் நடந்ததெல்லாம் மிக ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரும் அந்த தேனீர் சட்டியைக் கையில் எடுத்துப் பார்க்க விரும்பினார்கள். அந்த அரச முத்திரையைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அந்த சட்டியின் மதிப்பை இப்போது உணர்ந்திருந்த கொல்லன் எல்லோரையும் எட்ட நின்றே பார்க்கச் சொன்னான்.
அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே மாறி விட்டது. அந்த தேனீர் சட்டியை முன்பு போல வெளியே வைக்க முடியவில்லை. மேசை, நாற்காலி, தேனீர் சட்டி மூன்றையும் வீட்டுக்குள்ளே வைத்தான். வேலை முடிந்த பின் முன்பு போல நிம்மதியாக வெளியில் காற்றாட அமர்ந்து குளிர்ந்த நீரை அந்த சட்டியில் குடிக்க முடியவில்லை. உள்ளே அமர்ந்து குடித்தால் புழுக்கமாக இருந்தது. அந்த சட்டியைத் தூக்கி அப்படியே அதிலிருந்து தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. சட்டியை உயரத் தூக்கும் போது கை தவறி விழுந்து உடைந்து விடுமோ என்ற பயம் வந்தது.
அவனிடம் அந்த அபூர்வ சட்டி இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள்.அவனிடம் அந்த அபூர்வ சட்டி இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள். அதற்கு அந்த வழிப்போக்கன் என்ன விலை கேட்டான் என்பதை கொல்லன் வாய் வழியாகவே அறிந்து கொள்ள பலரும் ஆசைப்பட்டார்கள். ‘இந்தக் கொல்லன் எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன்’ என்று அவர்கள் அவன் முன்னாலேயே வியந்தார்கள்.
இப்படி அவனுடைய தேனீர்சட்டி பிரபலமடைந்த பின் இன்னொரு பயமும் கொல்லனை ஆட்கொண்டது. யாராவது இதைத் திருடிக் கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் எப்போதும் அதன் மேல் ஒரு கண் வைத்திருந்தான். அவனுடைய வழக்கமான வேலைகள் எதுவும் சரியாக நடக்கவில்லை. இரவும் திருட்டு பயம் காரணமாக அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
இப்படியே நாட்கள் சென்றன. சில நாட்களில் வருவதாகச் சொன்ன வழிப்போக்கன் மூன்று மாத காலமாகியும் வரவில்லை
. ஆனால் ஆட்களோ அந்த தேனீர் சட்டியைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள். அவனிடம் அது பற்றி கேட்ட வண்ணம் இருந்தார்கள். ஒரு நாள் வெளியூர்களில் இருந்தும் ஆட்கள் அதனைப் பார்க்க வந்து விட்டார்கள். அவனிடம் “நீ உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி தான்” என்றார்கள்.
அவனோ பொறுக்க முடியாமல் சொன்னான். “உண்மையில் நான் துரதிர்ஷ்டசாலி தான். ஒரு காலத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தபடி நிம்மதியாக நான் இருந்தேன். இந்த மூன்று மாதங்களாக இந்த தேனீர் சட்டி என் நிம்மதியைக் குலைத்து விட்டது.
பகலில் நிம்மதியாக வெளியே உட்கார்ந்து இதில் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஒரு கணம் கூட என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. இதை யாராவது திருடிச் சென்று விடுவார்களா என்ற பயத்தில் இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை.”
அவர்கள் சொன்னார்கள். “அப்படிச் சொல்ல வேண்டாம். அந்த வழிப்போக்கன் கண்டிப்பாக வருவான். அதை விற்று நூறு பொற்காசுகளோடு நீ நிம்மதியாக இருக்கலாம்”
அவன் சொன்னான். “இத்தனை நாட்கள் வராதவன் இனி வருவானா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது நூறு பொற்காசுகள் தேவையில்லை. என் பழைய நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைத்தால் போதும். அதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்”
மற்றவர்கள் அவனைத் தடுப்பதற்குள் அந்த சட்டியை சுத்தியலால் ஒரே போடாகக் கொல்லன் போட்டுடைத்தான். அந்த தேனீர் சட்டி பல துண்டுகளாக சிதறியது. மற்றவர்கள் திகைத்துப் போய் நிற்க கொல்லனோ மாபெரும் நிம்மதியை உணர்ந்தான்.
இந்தக் கதையில் கொல்லன் முன்பு வாழ்ந்த வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. அவனுக்குக் கிடைத்த வருமானம் அவன் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருந்தது.
அவனுக்குப் பெரிய கவலைகளோ, பயமோ இருக்கவில்லை. ஆனால் அந்த தேனீர் சட்டி மிக அதிக விலை மதிப்புடையது என்று ஊரார் அறிந்தவுடன் எல்லாமே அவனுக்கு தலைகீழாக மாறிவிட்டது. அவன் அது திருட்டுப் போய் விடுமோ என்ற பயத்தை உணர்ந்தான். பழைய வாழ்க்கையின் கவலையற்ற தன்மையை இழந்தான்.
அவனுக்காக அவனை மதிப்பது போய் அந்த தேனீர்சட்டிக்காக அவனை மனிதர்கள் மதித்தார்கள். மற்றவர்களுக்கு அவனை விட தேனீர் சட்டி மிகவும் மதிக்கத் தக்க விஷயமாக மாறி விட்டது. எல்லோரும் அவனை அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் மட்டுமே உள்ளுக்குள்ளே ஒரு துரதிர்ஷ்டசாலியாக இருந்தான்.
இந்த தாவோ கதை செல்வமும், புகழும் அதிகரிக்கும் போது அதனுடன் கூடவே வரும் பிரச்னைகளைச் சொல்கிறது. அவனுடைய கடைசி முடிவு மிகப் பெரிய முட்டாள்தனமாகப் பலருக்கும் தோன்றலாம்.
இக்கதை செல்வம், புகழ் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது ஆழமாகத் தெரிவிக்கும் செய்தி வேறு.
என்றுமே மனிதனை விட அதிகமாக அவனுடைய செல்வமும், புகழும் முக்கியத்துவம் பெற்று விடுமானால் அவனால் உண்மையான நிம்மதியைக் காண முடியாது.
பிரச்னை செல்வத்திலும், புகழிலும் இல்லை. உண்மையான பிரச்னை அவனால் அவற்றை விட்டு இருக்க முடியாத அடிமைத்தனத்தில் தான் இருக்கிறது. இந்த அடிமைத்தனம் அவனை சின்ன சின்ன எளிமையான சந்தோஷங்களை அனுபவிக்க அனுமதிக்காது.
அடுத்தவர்களை எல்லாம் சந்தேகக் கண்ணோடே பார்க்க வைக்கும். அவற்றை இழந்து விடுவோமோ, மற்றவர்கள் அபகரித்து விடுவார்களோ என்கிற பயம் சதா உடன் இருக்க ஆரம்பித்து விடும்.
எப்படிப் பாதுகாப்பது என்ற கவலையும் சேர்ந்தே இருக்கும். அவை அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடும்.
அவன் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றையும் தீர்மானிக்க ஆரம்பித்து விடும். இந்த அடிமைத்தனத்தை உடைத்து எறிந்தால் ஒழிய ஒருவன் நிம்மதியடைய முடியாது என்பதைத் தான் கொல்லன் தேனீர் சட்டியை உடைத்த பின் பெற்ற நிம்மதி மூலமாக இந்தக் கதை சொல்கிறது.

Tuesday 23 May 2017

என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவைதான்.

என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவைதான்.

பார்க்கப்போனால் ஆபத்தில்லாத தியான முறைகளே இல்லை.

"ஆபத்தில்லை என்றால் அவை தியான முறைகளே அல்ல."

அவை வெறும் வித்தைகள்தான்.

ஆமாம் ஆபத்தானவைதான்.எனவே நுழையும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிடு.

"மாணவர்களாக என்னுடைய தியான முறைக்குள் நுழைந்து விடாதே.! ஆபத்தாகிப் போகும்."

"சீடனாக நுழைந்து பார்."

"தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வறட்டு ஆர்வத்தோடு நுழைந்து விடாதே.அந்த ஆர்வம் எப்போதும் உன்னை ஆபத்திற்குத்தான் இட்டுப் போகும்."

உண்மையாகவே நீ தயார் என்றால் பேதலிப்பை எதிர்கொள்ள தயார் என்றால் நீ வரலாம்.

இல்லையேல் அப்படியே இருந்துவிடு.!

ஆனால் நான் சொல்வதைச் சரியாகக் கவனிக்காவிட்டால்தான் தோற்றுப் போவாய்.என்னை கவனித்து கேட்டால் "தோற்றுப் போவது என்ற கேள்விக்கே இடமில்லை."

"நான் சொல்வது எதுவும் பேச்சளவிலானது அல்ல.நான் சொல்வதெல்லாம் நான் செய்து பார்த்து விட்டவை."

அவற்றைக் கடந்து வந்திருக்கிறேன்."எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்."

எது நடக்கும் எதில் தவறுகள் நடந்துபோய்விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

"இந்தப் பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலமும் எனக்குத் தெரிந்ததுதான்.எனவே ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் நீ சரியாகக் கவனிக்கவில்லை என்றுதான் பொருள்."

நான் சொல்வதைக் கவனித்தால்,என்னை நம்பினால் எதுவும் தவறாகிப் போகாது.அப்படித்தான் நம்பிக்கை,ஆழ்ந்த நம்பிக்கையும் சரணாகதியும் தேவை என்பது.

--ஓஷோ--

Saturday 13 May 2017

எது முக்கியம் எது தேவையற்றது

*அனைத்தையும் சுமக்காதே.*

ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால்  ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர்.

மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், "என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?"என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், "நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்" என்று கூறி வருந்தினாள்.

"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது.

''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?'' என்று கேட்க, அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி  என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உதவி செய்த துறவி, "தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம்.

எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால், வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.

Tuesday 9 May 2017

கனவு

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு  அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள்,
அழகான நதிகள்,
மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.  அது பறந்து போகும் போது  ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன்.  அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,

அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று  குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால்,
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே டியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும்  அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று  அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
"இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது".

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி ✍️

Friday 5 May 2017

நம் விதியும் மாறக்கூடியது.


வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட
வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்.!
கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்...! இப்படி நிறைய *‘வேண்டாம்’*கள் உண்டு.
நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்கிறோம்: *“எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது!”
வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்!
பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.
*நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி*.
நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.
அதனால் *கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம். நோய் வேண்டாம் என்று எண்ணுவதைவிட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம். சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்*.
“கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது?” என்று கேட்கலாம்.
“எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை
,எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது?” என்பதும் நியாயமான கேள்வி. “என்ன பேசினாலும் சண்டையில்தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும் !
*உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும். எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்*.
எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.
*விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத்தான்*.

அமைதி

*குட்டி கதை - அமைதி*

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. *இந்த ஓவியத்தை வரைந்தது யார்?*

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?. மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!

சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, *நிச்சயம் ஒரு நாள் விடியும்,* என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

*சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.*🙏🏻