Friday 27 July 2018

நல்ல எண்ணங்களை ஏற்படுத்த

உங்களது எதிர்மறை எண்ணங்களை போக்கி உங்களை சுற்றி எப்போதும் நல்ல உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும் ஏற்படுத்த எளிய முறைகள்....
.
1. உங்களுக்கு என்ன வேண்டுமோ , அதில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்..
.
2. உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மட்டும் செய்யுங்கள்
.
3. உங்களை சுற்றி இருக்கும் நல்ல அடிப்படை வசதிகள் ( மின்சாரம், காற்று , தண்ணீர், இருக்குமிடம், சுவாசிக்கும் காற்று, முதலிய) எல்லாவற்றையும் மனதார பாராட்டுங்கள், நன்றி கூறுங்கள்...
.
4. நியூஸ்பேப்பரில் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....நியூஸ் பேப்பரில் , நகை, வீட்டு உபயோக பொருட்கள், கார் , ஸ்கூட்டி, பைக் , வீடு போன்ற பெரிய விளம்பரங்களை மட்டும் பாருங்கள்..
.
5. டிவியில் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும் செய்திகளையும், அழுகை சீரியல்களையும் பார்க்காதீர்கள்.
.
மற்றவர்களை குறைசொல்லி கொண்டிருக்கும் செய்திகளால் , தவறுகளை பெரிதுபடுத்திகொண்டே இருக்கும் செய்திகளால் , விபத்து செய்திகளால் மனதிற்குள் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும்
.
6. அறிவு பொக்கிஷங்களையும், நல்ல பாடல்களையும் மட்டுமே கேளுங்கள், பாருங்கள்...
.
7. நீங்கள் எதற்கெல்லாம் நன்றி உடையவர்களாக இருக்கிறேர்களோ அவற்றையெல்லாம் மனகண்ணில் காட்சியாக உணர்ந்து
அதற்கு மனதார அடிக்கடி நன்றி கூறுங்கள்..
.
உங்களிடம் நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க உங்களிடம் நல்ல உணர்வுகள் அதிகரிக்கும்.
.
8. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.....அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்..
.
9. தினமும் கொஞ்ச நேரமாவது முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து தன்னம்பிக்கையாக பேசுங்கள்...உலகத்தில் சிறந்த நபரிடம் பேசுவதாக உணருங்கள்
.
10. உங்கள் தன்னம்பிக்கையும், திறமைகளையும் மனதார நம்புங்கள்

Sunday 22 July 2018

உயரம்

**எண்ணங்களை பொறுத்தே உயரங்கள் அமைகின்றன**

வண்ணமயமான பலூன்களை விற்றுப்பிழைக்கும் ஒருவன் புதியதாக வேறு ஒரு ஊருக்கு வந்தான்.

பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் பலூன்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது.

அவன் புதியதாக
ஒரு விளம்பரம் செய்ய விரும்பினான். அதன்படி வண்ண வண்ண பலூன்களை ஈலியம் வாயுவால் நிரப்பி
மக்கள் கூட்டமாக இருக்கக்கூடிய இடங்களில் பறக்கவிடுவான்.

வானில் பறக்கின்ற விந்தையான
பலூன்களை 'எனக்கு வேண்டும் ..உனக்கு வேண்டும்' என சிறார்களும் - ஏன் வயதானவர்களும்கூட
வாங்கி வாங்கி மகிழ்ந்தனர்.

எப்போதெல்லாம் வியாபாரம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் 'பறக்கும் பலூன்கள்' மூலம் புதிய
உற்சாகமான விளம்பரத்தைக்கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டி வந்தான். அவன் தனது வியாபாரத்தைச்
செவ்வனே செய்துவந்தான்.

சில நாட்களுக்குப்பிறகு ஒரு கருப்பினச்சிறுமி, அவனிடம் கேட்டாள். "அண்ணே. அண்ணே..எல்லா
வண்ணங்களிலும் பலூன்களைப் பறக்கவிடுரீங்க..

ஆனால் கருப்புக்கலர் பலூன் பறந்து நான் பார்க்கவே
இல்லை.  கருப்புவண்ணப் பலூன் பறக்குமா? பறக்காதா? என் சந்தேகத்துக்கு விடையளியுங்கள்" என்றாள்.

"அன்புக்குழந்தையே!.. கருப்பு நிறப்பலூன் என்றாலும் - அதனுள்ளே - ஈலியம் வாயுவை
அடைத்துப் பறக்கவிட்டால் பறந்தே தீரும். பலூன் வானில் பறக்க்க்காரணம் அதன் வண்ணமன்று..

அதனுள்ளே அடைத்து வைக்கப்படும் வாயுவால்தான் அது பறக்கிறது.

கருப்பாக இருந்தாலும்
சிவப்பாக இருந்தாலும், என்ன வண்ணமாக இருந்தாலும் அது பறந்தே தீரும். இது சத்தியம்"என்றான்

நம் வாழ்க்கையில் நிதர்சனமும் இதுவே.
நம் எண்ணங்களை பொறுத்தே உயரங்கள் அமைகின்றன

5

.............................................

'' ஐந்து வில்லன்கள்''..
.......................................

நாம் முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள்

யார் ஐந்து வில்லன்கள்..?

அந்த 5 வில்லன்கள்:

ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி..

இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம்,

அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

*.ஊக்கமின்மை:
................................

*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள்.ஆழ்ந்து யோசித்து அதன் உண்மை யான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள்.எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்..,

*மாற்றம்:
....................

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்து கொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வையுங்கள்.

*பிரச்னைகள்:
............................

*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்,

ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள்.அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கும், தேடிப் பிடித்து பயன் படுத்துங்கள்.

* பயம்:
................

பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறவன் கோழை அல்ல.. பயத்தை ஏற்றுக் கொள்கிறவனால்தான் அந்தப் பயத்தை வெல்ல முடியும்..உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.

* தோல்வி:
......................

சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.

சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும், மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை மட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

ஆம்.,நண்பர்களே.,

மேலேகண்ட 5 வில்லன்களான,ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி..
இவற்றை சாதுரியமாக கையாண்டால் வாழ்க்கை பயணம் இனிதே நடைபெறும்.வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.🌸🙏🏻💐

Tuesday 17 July 2018

ஈகோ

🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

*"Ego Killing - ஈகோ கில்லிங் - அகம்பாவ அழிப்பு முயற்சி "*

என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா..? . அதென்ன சார்.. ஈகோ கில்லிங்.. என்கிறீர்களா..?

ஒரு பெரிய்ய ஸ்டேடஸ் , அது பணத்தினாலோ, பதவியினாலோ,  புகழினாலோ  எப்படியோ நமக்கு வந்துவிட்டது ... என்ன ஆகும்..? தலைக்கனம் பிடிக்க ஆரம்பிக்கும்... பார்க்கும் பார்வையில் , பேசும் பேச்சில் எதிராளியை லேசாக மட்டம் தட்டுவது மாதிரியாக ஒரு போதை , மனதை ஆட்டும் போதை வந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பிக்கும்.... ஜம்பமாக.

இதை சரியான நேரத்தில் , கணத்தில் கண்டுபிடித்து ஒரு தட்டு தட்டாமல் விட்டால் என்ன ஆகும் தெரியுமா..? கிடு, கிடுவென்று அசுர வேகத்தில் வளர்ந்து அகில உலகத்தையே ஆட்டிப் படைக்கும் அந்த ரட்சகனாக கூட நம்மை நினைத்துக் கொள்ள வைக்கும் பிசாசாகவே மாறிவிடும்...

இராமகிருஷ்ண பரமஹம்சர் எல்லாவற்றையும்  தவிர்த்து மனதை வென்ற ஒரு மகானுபாவர்.. மஹான்... எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த இந்த மாமனிதரே ஒரு செயலைச் செய்வாராம்... சமயங்களில் தனது கழிவறையை தாமே சுத்தம் செய்வது மட்டுமின்றி தலைமயிராலே கூட சுத்தம் செய்வாராம்... படிப்பதற்கே எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது... அல்லவா..? ஆனால் நிஜம் அது..

சரி , எதற்காக இப்படிச் செய்கிறார் ...? என்று பார்த்தால் காரணம் வேறொன்றுமில்லை ... இந்த ஈகோ கில்லிங் தான்... எந்த நிலையிலும் நீ சாமான்யனே, சாதாரண மனிதனே, அண்ட சராசரங்களை படைத்து , இத்தனை ஆண்டு காலம் இயக்கிக்கொண்டிருக்கும் அந்த இயற்கை பேராற்றலோடு உன்னை ஒப்புமைப்படுத்துகையில் நீ ஒன்றுமில்லாதவன் ... ஏன் ஆடுகிறாய் மனிதா...? அடங்கு ... என்று நமது தலையில் அடித்து ஞாபகமூட்டும் அற்புத சித்து தான் இந்த ஈகோ கில்லிங் செயல்பாடு..

இலட்சத்தில் ஒருவர் கூட இதை தொடர்ந்து செய்வதில்லை. ஒரு ஸ்டேடஸ் வந்த பிறகு எந்த வகையிலும் அதற்கு பங்கம் வந்து விடாமல் கவனமாக காபந்து பண்ணுவதிலேயே குறியாய் இருந்து விட , *ஈகோ கில்லிங் ...* எங்கே...?  *ஈகோ செல்லிங்*  தான் பரிபூர்ணமாக இங்கே..

ஆக , ஈகோவை கட்டுப்படுத்த இது போன்ற கீழ் நிலைச் செயல்பாடுகள் ( கீழ்த்தரமானது என்று அர்த்தமல்ல... அடித்தட்டு நிலைச் செயல்பாடு என்று அர்த்தப்படுத்தலாம் ..) பெரிதும் துணை செய்வதை அதிகாரப்பூர்வமாக சில பெரியவர்களிடம் பார்த்தாயிற்று; அனுபவ பூர்வமாக பல முறை நாமே செய்து உணர்ந்துமாயிற்று...

ஒரு சம்பவம்...எப்போதும் மொட, மொட கதர்ச்சட்டையில் மெர்சிடிஸ் பென்ஸில் பயணிக்கும் தெரிந்தவர் அவர். பெரும் முதலாளி. ஆனால்  சமயங்களில்  அவரது தோட்டத்தில் மண்குழி எடுத்து , நாற்று நட்டு , சாணியை அள்ளி  ஒதுக்கி , பலமுறை அருகிலுள்ள கோவிலில் கிழிந்த ஒரு பனியனோ , சட்டையோ அணிந்து கொண்டு புழுதி கண்களிலும் கைகளிலும் அப்ப உழவாரப்பணி உட்பட சுத்தம் செய்து, தருணங்களில்  பொதுமக்களோடு சகஜமாய் தரையில் அமர்ந்து பழைய சோறோ, கஞ்சியோ உண்பதையும் கண்டு வியந்திருக்கிறேன்... பெருமைக்கு இல்லாமல் இயல்பாய் , யார் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் அப்படி இயங்குவதையும் உறுதி செய்திருக்கிறேன்...

*நான்...* என்கிற நண்டை , மண்டைக்குள் புகவிட்டு விட்டால் அது என்ன பாடு படுத்தும் என்பதை திடீர் பணக்காரர்களிடம் சாதாரணமாய் பார்க்கலாம்... வாங்கிய வைர அட்டிகையை வார்த்தையாலயே விளக்கி பள, பளப்பாக்கிவிடும் பலே சாமர்த்தியசாலிகள்..

ஆக, ஆடும் மனதை ஆடாமல், அடங்கிக் கிடக்க,  நிலைத்திருக்கச் செய்ய பெரிதும் உதவி செய்யும் "ஈகோ கில்லிங் " ஐ "ஆயில் புல்லிங் " போல அவ்வப்பொழுது செய்து வருவது கூட கலியுகத்தில் ஆயுள் வளர்த்தும் ஒரு ஷேம கைங்கர்யம் தான்..

நான் இதுபோல அவ்வப்பொழுது செய்து கொள்வேன்.. குடியிருப்பு பகுதியில் உள்ள கோவிலில் எறிந்து கிடக்கும் எச்சில் தட்டுக்களை பொறுக்கி ஓரமாய் குவிப்பது, பிளாஸ்டிக் கவர்களை , டம்ளர்களை ஒன்று விடாமல் சேகரிப்பது,  அரதப்பழைய செருப்பைக் போட்டுக்கொண்டு நடப்பது .. இப்படிச் சில.

விஷயம் சிம்பிள்... எதாவது ஒரு வழியில், எதையாவது செய்து  *நானை* அடக்குவது...

*நானின்றி  வெல்வது ஞானிகளின் வேலை.. நானாக இருப்பதே நான் செய்யும் வேலை..*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*படித்தேன்.... பகிர்ந்தேன்*
📣📣📣📣📣📣📣📣📣📣📣

சந்தோஷம்

மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.

பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.

"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.  அவர் சந்தோஷமாகவே இருந்தார். 

ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.  கணவர் அதிர்ந்தார்.  ஆனால், மனைவி தொடர்ந்தார். 

"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.  என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை.  ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.  என்னையே சார்ந்தது.  நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்." 

"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.  அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்." 

"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.  மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.  இது ஒரு நீண்ட பட்டியல்." 

"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.   நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.  வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."

"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.  என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்." 

"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல.  நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால்.  நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."  

"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.  இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.  அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார். 

கைதட்டல் ஓயவே இல்லை. 

உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்.  வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்.  உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள்.  சந்தோஷம் உள்ளே உள்ளது.  வெளியில் இல்லவே இல்லை.

பொறுமை

🏵 பொறுமை 🏵

🌺 பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது

உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை

பொறுமை மட்டுமே போதுமானது,

அது மட்டுமே போதும்

பொறுமை என்றால் இணைப்புணர்வு

எந்த வித அவசரமும் இல்லாமல்,

எந்த வித அவசரமும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்

நேசம் மிகவும் மெதுவாக வளரும்,

அதற்கு பொறுமை தேவை

பொறுமை மிகவும் கவனமானது,

பொறுமை சக்தியானது,

பொறுமை விரிவடையக்கூடியது

காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம்

அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை 

அது ஆழமான இணைப்புணர்வு

உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை தேவை

பயணகாலம் அளவிட முடியாதது 

எனவே

அளவற்ற பொறுமை தேவை

பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான் 

ஏனெனில்

அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்

நீ வாழ்வை உள் வாங்குபவனாக மாறும் அந்த கணத்தில்

உனக்கு யாரும் போதனை தர தேவை இருக்காது

நீயே ஒரு புத்தாவாக மாறி இருப்பாய் 🌺

🌹 ஓஷோ 🌹

Wednesday 11 July 2018

விரும்புவது தான் நடக்கும்

**WORLD IS A MIRROR.**

நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியே தான் அவர்களும் நம்மை நடத்துவார்கள்.

இது கதையல்ல…!

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம்!!! அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்தி பெரிதும் பேசப்பட்டது!!

________________________________

ஜூலியோ டயஸ் நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

ஒரு சுரங்கபாதையை கடக்கும்போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, “உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்” என்று மிரட்டுகிறான்.

திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன் ஏஜ் வயது.

அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவனிடம் தனது பர்ஸை ஒப்படைக்கிறார் இவர். அவன் தப்பியோட முயற்சிக்கும் தருணம், அவனை கூப்பிடுகிறார்.

“தம்பி… ஒரு நிமிஷம்… நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியை காட்டி எல்லார்கிட்டேயும் பணம் பறிக்கிறதா இருந்தா இந்த கோட் உனக்கு தேவைப்படும். இதை போட்டுக்க. ஏன்னா… வெளியிலே ரொம்ப குளிரா இருக்கு!” கூறியவாறே தனது கோட்டை கழட்டுகிறார்.

திருடனுக்கு ஒரு கணம் குழப்பம். இவரை வித்தியாசமாக பார்த்தான்.

“நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?”

இவர் ஒரு படி மேலே போய் … “நீ பசியுடன் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உனக்கு ஒ.கே. என்றால் நாம் இருவரும் பக்கத்தில் ஏதாவது கடையில் டின்னர் சாப்பிடலாம்!!” என்றார்.

அவன் இன்னும் அவரை நம்பாமாலே பார்த்தான்.

“இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ ரிஸ்க் எடுத்து உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன். உனக்கு விருப்பம் இருந்தால் டின்னருக்கு வா…”

திருடனுக்கு மேலும் குழப்பம். அவர் வேறு ஏதாவது கத்தியோ ஆயுதமோ மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரை சோதனையிட்டான். அப்படி எதுவும் இல்லை.

அருகில் சாலையோரம் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறார்கள்.

மேனேஜர் முதல் வெயிட்டர் வரை அனைவரும் வந்து இவருக்கு விஷ் செய்கிறார்கள்.

“என்ன இது உங்களுக்கு இப்படி ராஜ மரியாதை தருகிறார்கள்? நீங்கள் தான் ஒருவேளை இந்த இடத்திற்கு சொந்தக்காரரோ?”

“இல்லை.. இல்லை… நான் அடிக்கடி இங்கு சாப்பிடுவது வழக்கம்…! எனவே எனக்கு அனைவரும் நல்ல அறிமுகம்!!”

“வெயிட்டரிடம் கூட பண்போடு நடந்துகொள்கிறீர்களே…?”

“நாம் எல்லோரிடமும் பண்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று உனக்கு பள்ளியில் சொல்லித் தரவில்லையா?”

“தந்தார்கள். ஆனால்… அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று நினைத்தேன்!”

சாப்பிட்டு முடிக்கும்போது, அவனிடம், “என்னிடம் கொடுக்க பணம் இல்லை. பர்ஸ் தான் உன்னிடம் இருக்கிறதே. பர்சை திருப்பித் தந்தால் சாப்பிட்டதற்கு பணத்தை செலுத்திவிடுகிறேன். உன்னையும் கண்ணியமாக நடத்துவேன்” என்றார்.

நியாயமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு திருடன் பர்ஸுடன் ஓட்டம் பிடித்திருக்கவேண்டும். ஆனால் அவன் ஓடவில்லை. மாறாக அந்த பர்ஸை அவரிடமே திருப்பித் தந்தான்.

அடுத்து இவர் என்ன செய்தார் தெரியுமா? “உனக்கு ஒ.கே. என்றால் இந்த கத்தியை நான் வாங்க விரும்புறேன்” என்று கூறி இருவர் சாப்பிட்டதற்கும் பணத்தை தந்ததோடல்லாமல் அந்த கத்தியை திருடனிடம் ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டார்.

ஒரு திருடனை மாற்றியது போலவும் ஆச்சு. தன்னையும் காத்துக்கொண்டு தன் பொருளையும் காப்பாற்றிக்கொண்டது போலவும் ஆச்சு.

வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். “மகனே… டயம் கேட்டா நீ வாட்ச்சையே கழட்டிக் கொடுக்குற ஆள்… நீ இப்படி நடந்துகிட்டதலயும் அவன் பதிலுக்கு அப்படி நடந்துகிட்டதலயும் எந்த ஆச்சரியமும் இல்லை!” என்றார்.

குறிப்பு :

ஜூலியோ டயஸுக்கு சாத்தியப்பட்ட இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா……..? படும்! படும்!!

* எதையும் பாஸிட்டிவ்வாக பார்ப்பவர்களுக்கு!

* எந்த சூழலிலும் இன்சொல்லே பேசுபவர்களுக்கு!!

* இடியே விழுந்தாலும் நிலைகுலையாத மனப்பக்குவம் இருப்பவர்களுக்கு!!!

* தன்னைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசிப்பவர்களுக்கு!!!!

நம்பிக்கையும் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். இந்த பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்… அட….நீங்கள் விரும்புவது தான் … நடக்கும் !!

Sunday 8 July 2018

கற்பனை

பிரபஞ்சம் நமக்கு பலவிதமான  பொக்கிசங்களைக் கொடுத்துள்ளது அதில் ஒரு மாபெரும் பொக்கிசம் தான் #கற்பனை.

மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் கற்பனைகள் தான்.

நாம் எதை கற்பனை செய்கிறோமோ அதை நம்மால் நிச்சயமாக அடைந்துவிட முடியும்.

நாம் எப்படி கற்பனை செய்கிறோமோ அப்படியே அது நம்மை வந்தடையும்.

கற்பனை எந்த அளவிற்கு அழகாய் உள்ளதோ அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் அழகாய் மாறும்.

கற்பனையின் வேலையே புதிதாக ஒன்றை படைப்பது தான்.

கற்பனை தான் உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் வசீகரங்களின் முன்னோட்டம் என்றார்
-ஐன்ஸ்டின்.

உங்கள் வாழ்க்கை எப்படி வேண்டும் என்பதை கற்பனை செய்யுங்கள் அதன் படியே ஒவ்வொரு செயலையும் செய்து பாருங்கள்.
கற்பனையின் சக்தி அப்போது தான் புரியும்.

உடல் மற்றும் மனதளவில் யாரையும் காயப்படுத்தாத வண்ணம் உங்கள் கற்பனை இருந்தால் உங்கள் கற்பனை மட்டுமல்ல வாழ்க்கையும் நிச்சயமாக அழகாய், அர்ப்புதமாய் மாறும்.

உறவுகள்

*உறவுகள்... தொடர்கதை!*

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிற தில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன். சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப் போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெசியம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா. இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’ - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது. திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை... வெளியுர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள். சரி.

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?
அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை. ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ - இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யு பண்ண முடியுமா? கன்டின்யு பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும், வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என... யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடரமுடியவில்லை என்பது எவ்வளவு முரண்?! வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை. உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால்... கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க, உற்சாகமாகிப் போனது. யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம்கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என... பொழுதுபோக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள். அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.
‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு... ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.
‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு. ‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா... ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!

உறவுகளைப் பரிசளியுங்கள்... அடுத்த சந்ததிக்கு!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுட னான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் பிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே... பொறாமை பிடிச்சவ...’ என்று நெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக் காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம். ‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங் களே...’ என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளை யும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!