Friday 30 August 2019

வாழ்வு

நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே என்கிறார் அறிஞர் ஆலன் கோஹென்.

ஒரு விஷயம் உண்மை என்பதோ பொய் என்பதோ நீங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை, காதால் கேட்பதில் இல்லை. தீர விசாரிப்பதில்தான் இருக்கிறது.
விசாரணை என்றால் வேறு யாரிடமும் அல்ல. உங்களிடம்தான்... அதாவது உங்கள் ஆழ் மனதிடம். உங்கள் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை பொறுத்துதான் நீங்கள் காணும் விசயம் அமைகிறது.

என்ன குழப்பமாக இருக்கிறதா? உங்களை சுற்றிலும் இருந்து நீங்கள் அறிந்தும் அறியாத நிலையிலும் ஒரு நிமிடத்திற்கு 400 மில்லியன் தகவல் துணுக்குகள் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்பூலங்கள் மூலமாக உங்களை வந்தடைகிறது. இதில் வெறும் 2000 தகவல்களை மட்டுமே உங்கள் மனதால் கிரகிக்க முடியும். சுற்றிலும் இருந்து செய்திகள் வந்து விழுந்தாலும் உங்கள் மனதுக்குள் இருக்கும் தகவல் வடிகட்டி அவற்றை எல்லாம் பல வகைகளில் பிரித்து வடிகட்டி உங்களுக்குள் அனுப்புகிறது.

உங்களுக்கு எதில் விருப்பமும் ஈடுபாடும் இருக்கிறதோ, உங்கள் கவனம் எதை நோக்கி செல்லுகிறதோ, உங்கள் மனம் எதை ஈர்க்கிறதோ என்பதை பொறுத்து அத்தகைய செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். அதனால்தான் ஒரு விஷயம் குறித்து எல்லோரும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூறுகிறார்கள்.

உதாரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு பலதரப்பட்ட மக்களும் வருகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே பொருளை வாங்குவதில்லை. கணவன்-மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் சென்றாலும் ஒவ்வொருவருடைய தேவையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனமும் தன்னை சுற்றி வரும் செய்திகளில் தனக்கு பரிச்சயமானதை, விருப்பமானதை மட்டும் வடிகட்டி எடுக்குக்கொள்ளும்.

இதில் மனம் எப்படி செயல்படுகிறது?

நீக்குதல், விலக்குதல், பொதுமைப் படுத்துதல் ஆகிய மூன்று விதங்களில் மனம் தகவல்களை வடிகட்டுகிறது. முதலில் நீக்குதல் என்பதை பார்ப்போம். உங்கள் சிந்தனை நேர்மறையாக இருந்தால் உங்களை சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் நேர் மறையானவற்றை மட்டும் தனக்குள் ஈர்க்கும். உங்கள் சிந்தனை எதிர்மறையாக இருந்தால் அத்தகைய எதிர்மறையான செய்திகளை மட்டுமே கவரும்.

உதாரணமாக ஒருவர் உங்களை புகழ்ந்து பாராட்டினால் உங்களுக்கு நேர்மறை எண்ணம் இருந்தால் அதை நினைத்து மகிழும். எதிர்மறை எண்ணம் இருந்தால் இவர் நம்மை புகழ்வது போல் இகழ்கிறாரோ என்று நினைத்து மனம் அங்கலாய்க்கும். அடுத்து விலகுதல், இது உங் களை சுற்றி என்ன நடந் தாலும் இவர்கள் இப்படிதான் சொன்னார்கள், இது இப்படித்தான் நடந்தது என்று நினைக்கும் உங்கள் மனம் அதை தான் விரும்பவது போல் மாற்றி எடுத்துக்கொள்ளும்.

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மேல் அதிகாரியிடம் 2 நாட்கள் லீவு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் அவசியம் லீவு வேணுமா? என்று கேட்கிறார். அந்த சமயத்தில் நீங்கள் நேர்மறை சிந்தனையுடன் இருந்தால் உங்கள் மனம் லீவு தருவார், ஆனால் விளக்கம் கேட்கிறாரே என்று எண்ண வைக்கும். எதிர்மறை எண்ணத்துடன் இருந்தால் லீவு தரமாட்டார் என்று நினைத்து வருந்தச் செய்யும்.

எனவே நேர்மறை சிந்தனை கொண்டிருந்தால் எந்த சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் மனம் சாதகமான செய்திகளை மட்டுமே தனக்குள் எடுத்துக்கொள்ளும். அது எப்படி சொல்லப்பட்டாலும் தனக்கு ஏற்ப நேர்மறையாக மாற்றிக் கொள்ளும். நேர்மறையான நல்ல எண்ணங்கள் கொண்டவர்களையே தன்னிடம் ஈர்க்கும்.

அதுவே எதிர்மறை சிந்தனை கொண்டிருந்தால் நல்லதே நடந்தாலும் அதனை எதிர்மறை விஷயமாக எண்ண வைக்கும். எதிர்மறையான மனிதர்களையும் செயல்களையுமே தன்பால் ஈர்க்கும். அவர்கள் மனம் அவ்வாறே செயல்படும். அதனால்தான் இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். சூழ்நிலையை கையாளும் விதத் தில்தான் உங்கள் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. நல்லவற்றை நினைத்தால் நல்லதே நடக்கும். எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தால் எதிலும் அதிருப்தியே நிலவும்.

அடுத்து பொதுமைப்படுத்துதல் குறித்து பார்ப்போம். உங்கள் வாழ்க் கையில் எதிர்மறையான விஷயங்கள் தொடர்ந்து ஒரிரு முறை நிகழ்ந்து விட்டால் அதன் பிறகு உங்கள் மனம் இனி எப்போதும் அப்படியே தான் நடக்கும் என்று நினைத்து வருத்தப்படும். இதனால் அடுத்து எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஒத்துழைக்காமல் முரண்டு செய்யும். உங்கள் மனம் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பொதுமைப் படுத்தி பார்ப்பதால் உண்டாகும் பிரச்சினை இது.

எனவே அடுத்த முறை உங்கள் மனம் “ஏன் எனக்கு மட்டும் எப்போதும் இப்படி நடக்கிறது-?” என வருந்தும் போது, நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து “எப்போதுமேவா இப்படி நடக்கிறது?” என்ற எதிர் கேள்வியை அதனிடம் கேளுங்கள். அவ்வளவுதான். உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற்ற தருணங்களும் நினைவுக்கு வரும். எப்போதும் தோல்வியே தொடரவில்லை. பல முறை வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பது புரியும்.
இப்படி பகுப்பாய்வு செய்தால் மனதுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். அடுத்த முயற்சிக்கு உங்கள் மனம் தயாராகும். பிறகு என்ன? தொட்டக் காரியம் எல்லாம் வெற்றிதான்.

பொதுவாக அனைவரது மனமும் பாராட்டை, தட்டிக்கொடுத்தலை விரும்பும். அதே சமயம் பிறரது குறைகளை கண்டுபிடிப்பதே பாராட்டை பெறுவதற்கான எளிய வழி என்று நினைப்பதால் மனம் குறைகளையே ஈர்க்கிறது. அதுவே மற்றவர்களை மனம் விட்டு பாராட்டும் போது அவர்கள் மனம் மகிழும். அதோடு உங்கள் மனதும் அதனை ஈர்த்து உங்களை மகிழ் விக்கும்.

உங்கள் மனம் நேர்மறை சிந்தனை உடையதாக இருந்தால் நீங்கள் எதை பார்த்தாலும் அதிலிருக்கும் நல்லவை மட்டுமே உங்கள் கண்களுக்கு தென்படும். நீங்கள் எதை கேட்டாலும் அதிலுள்ள நல்லவை மட்டுமே உங்கள் செவியில் நுழைந்து மனதில் புகும். எனவே நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்து இருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள். நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம்.

Tuesday 20 August 2019

கேளுங்கள்

💐படித்ததில் பகிர்ந்தது💐

*காது கொடுத்துத்தான் கேட்போமே*

ஒரு மனநல மருத்துவருக்கு ஒரு பெண்மணி போன் செய்து தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி அழுகிறாள். பதறிப்போன மருத்துவர் ‘அழாதீர்கள்... ஏன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறீர்கள்’ என கேட்க, அந்தப் பெண்மணி அரைமணி நேரம் மூச்சு முட்ட ஏதேதோ காரணங்களைச் சொல்கிறார்.

‘எதுவானாலும் நாளை முடிவெடுக்கலாம். இப்போது தூங்குங்கள்’ எனச் சொல்லி சமாதானப்படுத்துகிறார் மருத்துவர்.

அடுத்த நாள் மருத்துவர் அந்தப் பெண்மணிக்குப் போன் செய்து நலம் விசாரிக்கிறார்.  ‘தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன் டாக்டர் ரொம்ப நன்றி’ என்று அந்தப் பெண்மணி சொல்ல மருத்துவருக்கோ ஆச்சர்யம். நான் சொன்ன எந்த விஷயம் உங்கள் மனதை மாற்றியது என கேட்டார்.

‘டாக்டர்... நீங்கள் சொன்ன எதுவுமே எனக்கு ஆறுதலாக இல்லை.... இதுவரை நான் சொல்வதை ஐந்து நிமிடம் கூட யாரும் காதுகொடுத்துக் கேட்டதே இல்லை. நீங்கள்தான் நான் சொல்வதை பொறுமையாக கேட்டீர்கள். அதனால்தான் என் மனம் மாறியது’ என்றார் அந்தப் பெண்மணி.

இன்று பலரது பிரச்சனைகளின் தீவிரத்துக்கு மிக முக்கியக் காரணம் அவர்கள் புலம்பித்தள்ள நம்பகமான மனிதர்கள் இல்லாமையே.

கடவுளிடம் நாம் மனதார பிராத்தனை செய்துகொள்வதன் பின்னணியிலும் ஓர் உளவியல் உள்ளது.

கண்ணனின்  பக்தர்கள் அனைவரும்  தங்கள் பிரச்சனைகளை கண்ணனிடம் மனதாரச் சொல்லி தீர்வு கிடைக்கப்பெற்று வந்தார்கள்.  ‘நீ சிரிப்பதைத் தவிர எதுவுமே சொல்வதில்லை. எல்லோருக்கும் எப்படி தீர்வு கிடைக்கிறது?’ என்று பிரம்மன் ஆச்சர்யமாகக் கேட்கிறார்.

அப்போது கண்ணன் பிரம்மனை பூலோகத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

எல்லா வசதியும் இருந்தும் மன நிம்மதி இல்லாத  ஒருவனிடம் கண்ணன், ‘உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்று கேட்கிறார்.

அவன் மடைதிறந்த வெள்ளம் போல் தன்  குழப்பங்களைக் கொட்டித் தீர்த்தான். 

கண்ணன் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார். 

அந்தக் குழப்பவாதியே தன் பிரச்சனைகளுக்குத் தான் செய்ய போகும் தீர்வுகளைப் பற்றியும், சாதக  பாதங்களையும் தெள்ளத்தெளிவாக விளக்கினான்.

அவன் சொல்லி முடித்ததும் அவனது  மனதில் தெளிவு பிறந்தது.  மகிழ்ச்சியாக விடைபெற்றான்.

இப்போது கண்ணன், ‘பார்த்தீர்களா பிரம்மா, அவன் புத்திசாலி. அவன் பிரச்னையை அவனே தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு தீர்வுகளையும் சாதக பாதகங்களையும் தெரிந்தும் வைத்திருந்தான். அதை செயல்படுத்தும் போது தடுமாற்றம் உண்டாகுமோ என்ற கவலையாலேயே அவன் குழப்பத்தில் இருந்தான். நான் அவன் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்து கேட்டேன். தீர்வை அவனே கண்டு கொண்டான்’  என்றார்.

கடவுளிடம் நாம் மனதார வேண்டிக்கொண்டு நம் பணிகளில் கவனம் செலுத்தும்போது நம்பகமானவரிடம் நம் பிரச்சனைகளை சொல்லி விட்டோம் என்ற நிம்மதியினாலேயே தெளிவான மனநிலை உருவாகி நம் பிரச்சனைகளுக்கான தீர்வு தானாகவே நம் அறிவுக்குப் புலப்படும்.

ஆகவே, பிரச்சனைகளை நம்மிடம் சொல்வோருக்குத் தேவை அறிவுரையோ ஆறுதலோ அல்ல. அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்க உதவும் நம் காதுகளே. 

காசா பணமா.... காது கொடுத்துத்தான் கேட்போமே!

*வாழ்க வளமுடன்*

Monday 19 August 2019

'' ஆழ்மனம்'

'' ஆழ்மனம்''..

இந்த உலகில் எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அல்லது எதை நிறைவேற்ற விரும்புகிறீர்களோ அதன் மீது மட்டுமே தங்களின் அதிகப்படியான கவனத்தைச் செலுத்துங்கள்.

தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விதைத்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் பார்க்கின்ற, கேட்கின்ற, செய்கின்ற எல்லா செயல்களுக்கும் பின்னும் உங்களின் எண்ணம் ஒளிந்திருக்கிறது.

இதை நீங்கள் தினந்தோறும் பரிசோதனை செய்து கூடப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு கடிகாரத்தை வாங்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உங்கள் ஆழ்மனதில் இதை நீங்கள் நினைத்தவுடன் நினைத்த நிமிடத்திலிருந்து அது உங்களைச் சேரும் வரை.,

உங்கள் ஆழ்மனது உங்களையும் கேட்காமலே, எங்கேயெல்லாம் கடிகாரத்தையோ, விளம்பரப் படத்தையோ அல்லது இணையதளத்திலோ உங்கள் ஆழ்மனம் அதை நோக்கிக் கவர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில் நீங்கள் கண்ட அக்காட்சியும் எண்ணமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது எந்தப் புள்ளியில் இவை இரண்டும் சந்தித்துக் கொள்கின்றனவோ அங்கே, அத்தருணத்தில் நீங்கள் அதை வாங்கி விடுவீர்கள்.

ஆனால் உண்மையில் நீங்கள் நாள் முழுவதும் கடிகாரத்தை மட்டும் பார்க்கவில்லை, மற்ற பொருட்களையும் சேர்த்தே தான் பார்த்திருப்பீர்கள்.

இதே போல தான் உங்கள் வெற்றியும்..எந்த இலக்கை நோக்கி எதை வேண்டுகிறீர்களோ அதை எந்த அளவிற்கு அதை உங்கள் ஆழ்மனதிற்கு புரிய வைக்கிறீர்களோ அதைப் பொறுத்துத் தான் உங்களது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

ஆம்.,நண்பர்களே..,

தெளிவான சிந்தனையோடு, தீர்க்கமான முடிவுகளோடு ஆழ்மனதின் அனுமதியோடு, வெற்றியை நோக்கி நல்ல எண்ணங்களுடன் நீங்கள் பயணித்துக் கொண்டே இருக்கலாம்.

வெற்றி உங்களை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

Wednesday 14 August 2019

உறவு

ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான்.

அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை   சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான்.

கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது.
தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை.

சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார்.

டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும்.
வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.

கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர்.

சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

தான் கொடுத்த 500 ரூபாய்   ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார்.

இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி  வந்ததில்  நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது.
அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது.
அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.
அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா?

*ஆகையால்  நண்பா்களே பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே நட்பு உறவு இதற்கு மதிப்பளிப்போம்....*

ராஸ்

மூளையின் ‘ராஸ்’ (Reticular Activating System) நினைவகத்தை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி?

மனித மூளையின் செயல்பாடுகள் அளப்பரியது. உலகத்தின் அதிநவீன கணினியைவிட மனித மூளையின் செயல்பாடு நுட்பமானது, வேகமானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சமீபத்தில் மூளையின் சிறப்பு நினைவுப் பகுதியைப் பற்றி ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ‘ராஸ்’ என சுருக்கமாக அழைக்கப்படும் அந்த நினைவுப்பகுதியே நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதுதான் ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியச் செய்தி. மாணவர்கள் மூளையின் ராஸ் நினைவகத்தை வெற்றிகரமாக பயன்படுத்துவது எப்படி? என்பது பற்றி பார்ப்போம்...

ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் மூலமாக நமது மூளைக்கு தகவல்கள் செல்கின்றன. தினம் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும்வரை, ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நம் முன்னால் நடக்கின்றன. எல்லாமே மூளைக்கு கடத்தப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் மூளை பதிந்து வைத்துக்கொள்வதில்லை. அது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சி வியத்தகு மூளைச் செயல்பாடு ஒன்றை கண்டறிந்து கூறியுள்ளது.

எவற்றை மூளைக்குள் கொண்டு செல்ல வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என்கிற இன்றியமையாத பணியை மேற்கொள்ளும் மூளையின் சிறப்பு நினைவகப்பகுதி ஒன்று இருப்பது விஞ்ஞானிகளால் அறியப்பட்டது. நுண்வலை செயலாற்றும் அமைப்பு என அந்தப் பகுதியை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் ‘ரெட்டிக்யுளர் ஆக்ட்டிவேட்டிங் சிஸ்டம் (ராஸ்-RAS)’ என்றழைக்கப்படுகிறது. இது நமது மூளையின் கீழ்பகுதியில், நரம்பு மண்டலங்கள் மூளையோடு இணையும் பகுதியில் உள்ளது.

நாம் காணும் காட்சிகளில், கேட்கும் ஒலிகளில், நுகரும் மணங்களில், சுவைக்கும் உணவுகளில், உடலால் தொட்டு உணரப்படுவதில் எவைகளெல்லாம் மூளைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கியமான வேலைகள் நுண்வலை செயலாற்றும் அமைப்பிடம் (ராஸ்) உள்ளது. இது நமது மூளையின் வாயில் காவலன் போன்றது. தேவையானதை மட்டுமே உள்ளே அனுப்பும்.

ராஸ் அமைப்பு, நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றோமோ அதை சிரத்தையாக செய்து முடிக்கிறது. தன்னுடைய குழந்தையின் மீது தாய்க்கு அதீத கவனம் இருக்கும். வீட்டில் அனைவருடன் உட்கார்ந்து சத்தமாக பேசிக் கொண்டிருப்பார். உள்ளறையில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் சிறு சிணுங்கல் சத்தம், அங்கிருக்கும் இரைச்சல் மற்றும் சூழல்களைக் கடந்து மற்றவர்களுக்கு கேட்கும் முன்பே தாய்க்கு மட்டும் தெளிவாக கேட்கும். உடனே பதறி அடித்து எழுந்து செல்வார். இதை நாம் பல நேரங்களில் கண்டிருப்போம்.

தாய்க்கு மட்டும் குழந்தையின் குரல் கேட்க என்ன காரணம்? அம்மாவின் கவனம் குழந்தையின் மீது. நாம் எதில் கவனம் செலுத்துகிறோமோ, அதற்கு ‘ராஸ்’ முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே, குழந்தையின் சிணுங்கல் ஒலிமற்ற ஒலிகளையெல்லாம் புறந்தள்ளி தாயின் செவிக்கு சென்றுவிடுகிறது.

இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் சொல்லலாம். நீலநிற உடை அணிந்து செல்லும்பொது, அன்றைக்கு அந்தநிற உடை அணிந்தவர்களை நாம் அதிகம் பார்க்கலாம். ஒருவர் புதிதாக ஷூ ஒன்றை வாங்கி அணிந்திருந்தால் அன்றைக்கு அவர் தன்னை அறியாமலேயே பலரது கால்களை பார்ப்பார். இதுவும் ராஸ் நினைவகத்தின் செயல்பாடுதான்.

சிலர் சிறந்த ஆற்றலாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும் திகழ்வதற்கு மிகமுக்கியக் காரணம் அவர்களது கட்டுப்பாடான செயல்பாடுகள் என்பதை நாம் அறிவோம். அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு பின்னணியில் முக்கிய காரணமாக இருப்பது நுண்வலை செயலாற்றும் அமைப்பு என்கிற ராஸ். அது இயங்கும் விதத்தினை அறிந்துக் கொண்டால் நாம் இந்த தரணியை ஆளலாம்.

நாம் எதை கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கிறோமோ, அது சம்பந்தமானவற்றை எண்ணற்ற தகவல்களிலிருந்து ‘ராஸ்’ சலித்து பிரித்து எடுத்து நமக்கு தந்துவிடுகிறது. உதாரணமாக, நாம் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், நம்மை அறியாமலேயே ராஸ் நமக்கு எண்ணற்ற உதவிகளை செய்ய தொடங்கிவிடும். அதுசம்பந்தமான செய்திகள், பத்திரிக்கையில் வந்தால் நமது கண்களில் தெளிவாக தெரியும். யாராவது அதை குறித்து பேசினால் நமது கவனம் அதில் செல்லும்.

இதில் வியப்பான செய்தி என்னவென்றால், நாம் எந்த பெருமுயற்சி எடுக்காமலேயே நமக்கு தேவையானதை அறிந்து ராஸ் செயல்படுகிறது. இதுவே, நாமும் முயற்சி செய்து ராஸிற்கு கட்டளைகள் வழங்கினால், நமது இலக்கு விரைவில் எட்டுவது நிச்சயம், நாம் சாதனையாளராவது நிச்சயம்.

ராஸ் நினைவுப் பகுதியை எப்படி பயன்படுத்திக் கொள்வது? என்பதை கவனிப்போம்.

நாம் எந்த ஒன்றை உறுதியாக நம்புகிறோமோ, ராஸ் அதனை சிரத்தையுடன் ஏற்றுக் கொள்கிறது. உதாரணமாக, எனக்கு மேடையில் நன்கு பேச வரும், நான் பேச்சாளராக வருவேன் என்று நம்பினால், ராஸ் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அதன்பின், நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரங்கள் திரட்டுகிறது. ஆயிரக்கணக்கான செய்திகள் நம்மை சுற்றி வந்தாலும், அவைகளில் ராஸ் நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் செய்திகளை மட்டும் நமது மூளைக்கு அனுப்புகிறது. ஒன்றின் மீது நம் நம்பிக்கை இன்னும் அதிகரிக்க, ராஸின் கவனம் அதன் மீது இன்னும் கூடுதலாகி அதிக அளவில் நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுத் தருகிறது. இதனால் நாம் திட்டமிட்ட இலக்கை நோக்கி வெகுவாக முன்னேற முடியும். இப்படித்தான் உலகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் எல்லாம், முதலில் தாங்கள் எடுத்துக்கொண்ட செயலில் முழுநம்பிக்கை வைக்கிறார்கள். இத்தகைய நேர்மறையான எண்ணங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும்.

அதே நேரத்தில், நம்மால் ஒன்றினை செய்ய முடியாது என்று நம்பிவிட்டால், ராஸ் அப்பொழுதும் உண்மையான ஊழியனாக நம்மால் ஏன் செய்ய முடியாது என்பதற்கான தகவல்களை திரட்டி நமது மூளைக்கு அனுப்பிவிடும். அதுமுடியாது என்கிற நமது நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டிவிடும். என்னாலே காலையிலே எழுந்து நடைப்பயிற்சி எல்லாம் செய்ய முடியாது என்று சொல்பவர்கள், என்றைக்கும் நடக்க மாட்டார்கள். எனக்கு கணக்கு பாடம் வராது என்று ஒருவர் நம்பினால், அவருக்கு கணக்குபாடம் வராது. ‘கணக்கு பாடமென்ன பெரிய இதுவா, எனக்கு வரவில்லையென்றால் யாருக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொல்பவர்கள், கணிதத்தை கற்று அறியும் சாத்தியங்கள் அதிகம்’. ஆகவே சாதனையாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ ராஸ் என்கிற மூளை நுண்வலை செயலாற்றும் அமைப்பை திறம்பட பயன்படுத்துகின்றனர். நாமும் ராஸ் நினைவுப்பகுதியை செம்மையாக நேர்மறையாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வோம்!-