Saturday 27 April 2019

சூட்சும மந்திரம்

"உங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா"
இதோ அந்த சூட்சும மந்திரம்.

நமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின் வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும் அலை அலையாக  வெளிபட்டுக்கொண்டே இருக்கும்,அல்லது வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது நல்லபடியாக{விளைவு நன்மை} தீயது தீயபடியாக {விளைவு தீமை}.

நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது நமது எண்ணத்திற்கேற்ப நமது எண்ண அலைகளும் மாறுபடுகின்றது.அவை முதலில் நம்மைத் தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக வெளியேறுகின்றது.அப்படி வெளியேறும் அந்த காந்த  அலைகள் நம்மை சுற்றி உள்ள சூழலையும் பாதிக்கின்றது.

சரி முதலில் இந்த முதல்  நிலையை சற்று ஆராய்வோம்.நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக  இருக்கும்போது இந்த மனோ நிலை நம்மை முதலில் தாக்குகின்றது என்று சொன்னேன் அல்லவா.எப்படி என்று பார்போம் வாருங்கள்.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில் காதல் வசப்படும்போது அவர்கள் எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில் இருப்பர்.அந்த ஆனந்தப் பரவசம் அவர்களை தாக்கும்.அதற்கான அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில் காணலாம்.முகம் மலர்ந்து இருக்கும்.உடலில் ஒரு சுறுசுறுப்பு தோன்றும்.தோற்றத்தில் ஒரு கம்பீரம் காட்சியளிக்கும்.உடை உடுத்துவதிலும்,தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும் முனைப்பாக இருப்பர்.சுருங்கச்சொன்னால் எதிலும் ஒரு மிடுக்கு இருக்கும்.இப்போது இவர்களின் மனம் நேர்மரையில் {POSITIVE} இருக்கின்றது என்று பொருள்.

பிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும் பாதிக்கும் என்று சொன்னேன் அல்லவா.சந்தோசத்தில் மலர்ந்து முகம்,சுறுசுறுப்பான செய்கைகள்,அழகான உடை,கம்பீரமான தோற்றம்,அலங்காரம் செய்யப்பட்ட வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு.எதிலும் ஒரு மிடுக்கு.இவை அனைத்தும் காண்போர் அனைவரையும் சுண்டி  இழுக்கும் தன்மை கொண்டவை.புதிய மணமக்களுக்கும் இது பொருந்தும்.சரி இந்த மாற்றம் அனைத்திற்கும் மூலப் பொருள் எது? முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனோ நிலைதான்.

இந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும்,அதையும் சற்று பார்போம் வாருங்கள்.இந்த காதல் ஜோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால் கட்டாயமாக பிறரால் பிரிக்கப் படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.அப்போது மகிழ்ச்சியில் இருந்த அவர்களின் மனோநிலை இப்போது மாலா துயரத்தில் ஆழ்ந்து விடும்.இதன் வெளிப்பாடு,முகத்தில் சோகம், செயலில் சுறுசுறுப்பு இன்மை,தன் சுய அலங்காரத்தை அலட்சியப் படுத்துவர்.சோகமே வடிவாக இருப்பர். அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில்{NEGATIVE} இருக்கும்.இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் செய்கைகளையும்,வருகைகளையும்,தோற்றங்களையும் பிறர் விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால் இவர்கள் எங்கும் அலையாத விருந்தாளியாக இருப்பர்.

கொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல் ஜோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில்  மாற்றம் ஏற்பட்டதும்,அந்த மாற்றம் முதலில் அவர்களை பாதித்தது பிறகு அவர்களின் சுற்று சூழலையும் மாற்றி விட்டது.இவை ஒரு உதாரணாமாக இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.

"கரு-எண்ணத்தை கவனமுடன் கையாளுங்கள்"

!உங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள் உங்களுக்கு ஒரு வசீகரத் தோற்றதை தரவல்லது.
!உங்களது சோகமான எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும் சூழலை தோற்றுவிக்க வல்லது.

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம்
மனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம்
"மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்"
இவை அனைத்தையும் சொன்னவர் "திருமூலர்"

"MIND MOVES MATTER"
"மனம்தான் சூழ்நிலையை உருவாக்குகின்றது"

Monday 8 April 2019

சுகமாக வாழ

வாழ வழி முறைகள்.!
====================================

🎈* காலையில்  முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

🎈* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

🎈* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

🎈* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

🎈* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

🎈* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

🎈* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

🎈* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

🎈* காஃபி , டீ  அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

🎈* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

🎈* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

🎈* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

🎈* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

🎈* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும் இன்றி.

🎈* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

🎈* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

🎈* எளிமையாக வாழுங்கள்.

🎈* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

🎈* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

🎈* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

🎈* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

🎈* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

🎈* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

🎈* பிறருக்காக எதையேனும   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

🎈* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

🎈* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

🎈* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

🎈* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

🎈* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

🎈* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

🎈*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்
படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

🎈இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

Saturday 6 April 2019

நிறைவு

ஆழமான ஆன்மீகத்தேடல்.

ஒரு பழைய கதை …. எனக்கு இந்த கதை எப்போதும் மிகவும் பிடிக்கும்.

ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான். காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது. கௌதம புத்தர் ஞானமடைந்த மரம் அதுதான். அதனால்தான் அது அரசமரம் என்றழைக்கப் படுகிறது.

ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும் மிக புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதை அறிந்தால் நீ மிகவும் வியப்படையக்கூடும். புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான செயல் அல்ல!

இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான். அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப்பார்த்து, சிரித்தபடி, ‘நீ ஒரு முட்டாள்’ எனக் கூறுவார்.

விறகுவெட்டி ஆச்சரியமடைவான். ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக்கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான்.

ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம், “ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது. அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.” என்றார்.

விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்…………..சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துக்கொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான்.

அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.

இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான். ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. அவர் காலை தொட்டு வணங்கினான். அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி, “நீ ஒரு முட்டாளேதான்” என்றார்.

அவனுக்கு குழப்பமாக இருந்தது. “ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான்.

அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார்.

விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான். “ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?” எனக் கேட்டான். அதற்கு அவர், “நீ என்னை செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நம்பவில்லை. பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்” எனக் கூறினார்.

அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான்.

வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, “இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப்போகிறேன் என்று எனக்குத்தெரியவில்லை. உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்.” என்றான்.

அதற்கு அவர், “நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

அதற்கு அவன், “நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான். “ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! அதைத் தவிர வேறில்லை. ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளையே வா.” என்றார்.

இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொணடு வந்து தரும் உணவை நம்பி, -அவர்கள் கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது. யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்!.

இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி கழித்து வந்தான். அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை.

பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, “இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.” என்றான்.

அதற்கு அவர், “அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா.” என்றார்.

அவன், “என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா! என வியந்தான். அதற்கு அவர், “ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய். ஆனால் அதுவும் முடிவல்ல, ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி.” என்றார்.

அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார், வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.

அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். “வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா.” என்றார்.

அவன் “வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்.” எனக் கேட்டான். அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று! இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்றார்.

அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம், “நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது.” என்றான்.

அவர் சிரித்துக் கொண்டே, “இன்னும் நீ முட்டாள்தான்.” என்றார்.

அவன், “இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை” என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப்பற்றி தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவு தூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்,” என்றார்.

அவன் வைரங்களை கீழே போட்டான். “நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை.” என்றான்.

அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி.

தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல.

விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.

ஞானி அவனை உலுக்கி, “இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ……… இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்.” என்றார்.

விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.

அவன் ஞானியைப் பார்த்து, “நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு அவர். “நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன். காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும். எனவே சரியான காலம் முக்கியம்” என்றார்.