Monday 14 June 2021

எஜமானர்

 
உங்கள் வாழ்க்கையின் எஜமானர் யார்❓❓

இந்த வாழ்கை எவ்வளவு வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விசயத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோசம் நெறஞ்சது இல்லை, இன்பமும், துன்பமும் கலந்து இருப்பது தான் வாழ்க்கை. 

ஒரு விசயத்தை நாம தெளிவா புரிஞ்சுக்கணும், நம்ம வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே ஒரு நிகழ்வுகள் தான், அது சந்தோசமா இல்லை கஷ்டமானதா என்பது நம்மளும் நம்மளைச் சுற்றி இருக்கிறவங்களும் ஏற்படுத்துற ஒரு தோற்றம்.

உங்க வீட்டிலேயோ இல்லை பக்கத்து வீட்டிலேயோ சின்ன பையனோ பொண்ணோ இருந்தா ஒரு அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அந்த பையன் என்ன என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாருங்க. விளையாடுவான், கீழ விழுவான் அப்புறம் அவனே எழுந்திருச்சிடுவான், அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான்.

எதாவது ஒரு நிகழ்ச்சியை நினைத்து அவனே சிரிச்சுக்குவான், எத்தனை முறை விழுந்தாலும் சாதாரணமா எழுந்து போயிடுவான். எந்த நேரமும் துறு துறுன்னு எதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, ரொம்ப ஆச்சரியமான விசயமாக இருக்கும் . #மகரயாழ் எப்படி இந்த சின்ன பசங்களாலே ஏதாவது ஒரு வேலையை பண்ணிக்கிட்டே இருக்க முடியுது.

கீழே விழுவதும் பின்னர் எழுவதும் ஒரு சாதாரண நிகழ்வுதான், நீங்களும் நானும் ஒவ்வொரு மனிதரும் கீழே விழுந்து பின்னர் எழுந்திரிக்கிறோம் . ஆனால் , பெரியவர்கள் ஆன பின்பு பின்னர் ஒரு சின்ன தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை .சின்ன தோல்வியிலே இருந்து எழுந்திருக்க முடியாம அழுது புலம்பிக்கிட்டு இருக்கோம்.

குழந்தைகளுக்குத் தோல்வியைப்பற்றி சொல்லி கொடுங்க, வாழ்க்கையிலே ஜெயிக்கிறது எப்படியோ, அப்படித்தான் தோல்வியை சந்திக்கிறதும். வெற்றியோ தோல்வியோ அது ஒரு சாதாரண நிகழ்வுகள் என்று சொல்லிக் கொடுங்க.

எந்த ஒரு தோல்வியிலே இருந்தும் உங்களால் மீண்டு வர முடியும், உங்க மனசுக்குச் சொல்லுங்க இது ஒரு சாதாரண நிகழ்வுதான் , என்னாலே மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றியை அடைய முடியும். நீங்க மனசு வச்சா உங்களாலே முடியும், 

ஏன்னா இது உங்க வாழ்க்கை, "நீங்க தான் உங்க வாழ்க்கையுடைய எஜமான்".*


 

Thursday 10 June 2021

தூக்கம்

தூங்குவதும் ஒரு வகை தியானமே:

வீட்டில் மின் விசிறி ஓடுகிறது.
தொலைகாட்சி சத்தம் போடுகிறது.
ரேடியோ கத்துகிறது.

இந்த சத்தங்களை தவிர்த்து, வேறு பல வகையான சத்தங்களும் வெளியிலிருந்து கேட்கிறது.

இந்த சத்தங்களில், நாம் மிகவும் முக்கியமான ஒன்றை தொலைத்து விடுகிறோம்.

ஆம். நாம், நம்மை தொலைத்து விடுகிறோம்.

நாம் சத்தமான சூழலிலேயே வாழ்கிறோம் என்பதையே கவனிக்க தவறி விடுகிறோம்.

திடீரென, மின்சாரம் 'கட்' ஆகிவிடுகிறது.

மின்விசிறி ஓடவில்லை.
தொலைகாட்சி, ரேடியோ கத்தி உயிரை வாங்கவில்லை.

எல்லா வகை சத்தமும் நின்றுவிட்ட மாதிரி ஒரு சூழல்.

நன்கு கவனியுங்கள். இவ்வளவு நாள் நாம் கவானிக்காத ஒரு சத்தம், ஒரு புது வகை சத்தம் மெல்லிதாக கேட்கும்.

அந்த சத்தம் வெளிப் பொருளிலிருந்து வரவில்லை.

மாறாக, அது 'வெளியின்' சத்தம்.

நம் காதுக்கு ஒரு இரைச்சல் போல் கேட்கும்.

அந்த இறைச்சலையே கவனித்தால், அது பெருகும். 

அதில் ஒரு லயம் தோன்ற ஆரம்பிக்கும்.

மிகவும் இனிமையான இரைச்சல் அது.

இப்போதைக்கு அதை இரைச்சல் என்றே குறிப்பிடுகிறேன்.

இந்த இரைச்சலை பிடித்துக் கொள்ளுங்கள்.

தியானத்துக்கு இதுதான், பாதை.

தூக்கத்துக்கு இதுதான் தூக்க மருந்து.

ஒரு தடவை இந்த இரைச்சலை நன்கு அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இரவில் தூங்கும் போது, மின் விசிறி ஓடினாலும் பரவாயில்லை. வேறு சின்ன - சின்ன சத்தங்கள் கேட்டாலும் பரவாயில்லை.

நன்கு கவனியுங்கள் இந்த இரைச்சலும் அங்கு இருக்கும்.

தெளிவாக கேட்கவில்லைஎன்றால், ஒரு பக்க காதை தலையணை மேல் மூடும்படி வையுங்கள். 

இரைச்சல் கேட்கும்.

இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமென்றால், இரண்டு காதுகளையும் மூடுங்கள்.

படுக்கையில் படுத்தபடி, அந்த இரைச்சலையே கவனியுங்கள்.

நன்கு தூங்கி விடுவீர்கள். 

எப்பொழுது தூக்கம் வந்தது என்றே தெரியாது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்து விடும்.

சரி, இங்கு என்னத்தான் நடக்கிறது?

அந்த இரைச்சல் சத்தத்தை கேட்கும்பொழுது, கவனிக்கும்பொழுது மனத்திற்கு வேலை குறைகிறது.

வேலை குறைவதை மனம் ஏற்காது. 

மனத்திற்கு எந்நேரமும் வேலை செய்தாக வேண்டும். 

இல்லாவிட்டால் அது செத்துவிடும்; நீங்கள் ஞானியாகி விடுவீர்கள்.

மனம் விடாது. நாம் இரைச்சலை கவனிக்கும்போது , தியானம் செய்கிறோம்.

விழித்திருந்தால்தானே நாம் தியானம் செய்ய முடியும்!

நாம் விழிப்பை முடிவுக்கு கொண்டுவர மனம் நம்மை தூங்க விடுகிறது. 

நாம் தூங்கிவிட்டால், கனவில் அது ஆட்டம் போடலாமே!

எல்லாமே நாம் மனத்தின் தந்திரம்.

இப்போதைக்கு மனத்தின் இந்த இயல்பை நாம், நாம் தூக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் உண்டு.

நாம் தூங்கும்போது, இந்த இரைச்சலையே கேட்டபடி தூங்கினால், நாம் நம்மை அறியாமல் தியானம் செய்கிறோம்.

தியான நிலையிலேயே தூங்குகிறோம்.

இவ்வாறு தூங்குவதால், உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்தவுடன் நாம் விழித்துக் கொள்வோம்.

இந்த வகை தூக்கத்தில் வரும் கனவுகள் மிகவும் ஆழத்திலிருந்து வருகின்றன. 

ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடலாம். 

அவை வெறும் கனவுகள்தான்.

ஆனால், நாம் தியானத்திற்குள் நுழைய உதவும் கனவுகள் அவை. நம்மை பற்றி நாமே அறியாத பல விசயங்கள் இப்படி ஆழ்ந்த கனவு மூலம் வெளிப்படுகின்றன.

தியானம் செய்வது பிறகு இருக்கட்டும்.

முதலில் நன்றாக தூங்குவோம்.

புற சத்தங்கள் குறைந்தபின், நம் காதில் கேட்கும் அந்த இரைச்சலையே கேட்போம்.

ஆழ்ந்து தூங்குவோம்...

நிம்மதியாக தூங்குவோம்...

தூங்குவதும் ஒரு வகை தியானமே!