Thursday 30 January 2020

ரசிப்பு

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்!!*

விரித்த படுக்கை விரிப்பில் 
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்*!!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு 
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன்*!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!*

*கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது*

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ? 

மழலை மொழியில் 
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில் 
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு 
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!*

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை      அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி 
அலைபேசியில் விசாரிப்பு.

*நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.*

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

*நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!*

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

*யாரோ  ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.*

*வாழ்க்கையை ரசித்து அனுப வியுங்கள்*.

Saturday 4 January 2020

அடிமை

*ஓஷோவின் ஞானக் கதைகள் :*
   
 . ஒரு  நாள்  இரவு  ஒரு  சந்நியாசி  அரண்மனைக்கு  வந்தார்.  அரசனின்  அவையிலிருந்து  அறிவைப் பெறுவதற்காக  அவருடைய குரு அவரை அனுப்பியிருந்தார்.  
        அரசவைக்குப் புறப்படுவதற்கு முன் சந்நியாசி  குருவிடம்  கேட்டார்:
         "தவ உலகமாகிய இந்த  ஆசிரமத்தில்  கற்றுக்  கொள்ள முடியாததை எப்படி  ஒரு  அரசனின்  அரண்மனையில் கற்றுக்  கொள்ள முடியும்?"
        குரு  சொன்னார் :
         "பேசாமல்  நான்  சொல்வதைக் கேள். அங்கு  போய் அரசனைக் கேட்டுக் கொள்!"
     சந்நியாசி  அரண்மனையை அடைந்த போது அரசவையில் உள்ளவர்கள்  மது அருந்திக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருந்தார்கள். 
         இவற்றைக் கண்டதும்  சந்நியாசி  துணுக்குற்றார்.
         'நாம் ஏன்  இந்த  சங்கடத்தில்  மாட்டிக் கொண்டோம்? நம்மை முட்டாளாக்கி  விட்டார்கள்.  குரு  என்னை ஏளனத்துக்குள்ளாகும்படி செய்து  விட்டார்.  ஒருவேளை  நான்  இல்லாமல் இருப்பது  அவருக்கு  விடுதலையாய் இருக்கிறது  போலும். ஆனால்  இப்போது  திரும்பிச் செல்வது முறையற்றது' என்று  தனக்குள்ளேயே  சொல்லிக் கொண்டார். 
          அரசன், சந்நியாசியை வரவேற்று மிகவும்  உபசரித்தான். அவரை கண்டிப்பாக அன்று  இரவு அரண்மனையில் தங்கிச் செல்லுமாறு  வற்புறுத்தினான். 'அன்று இரவு அங்கு  தங்கிச் செல்வது அர்த்தமற்றது' என்று  சொன்னார்  சந்நியாசி. 
          "தாங்கள்  நாளை காலை குளித்து உணவருந்திவிட்டுச் செல்லலாம்" என்று  அரசன் கூறினான்.  
        சந்நியாசி  தங்கினார். 
        அன்று இரவு முழுவதும் அவருக்கு  நித்திரை இல்லை.  
        'இது பைத்தியக்காரத்தனம். மது தாராளமாக  உபயோகிக்கப்படுவதும், அழகிய மாதுகள் நடனம் ஆடுவதும், செல்வம் எங்கும் கொட்டிக் கிடப்பதும், ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்த அரண்மனையிலிருந்து எப்படி நான் ஞானத்தைப் பெற முடியும்?  நான்  மிகவுயர்ந்த ஞானத்தைத் தேடிச்  செல்பவன். இன்று இரவை நான் வீணாக்கி விட்டேன்! ' என்று  வருந்தினார்  சந்நியாசி. 
          காலையில்  அவர் எழுந்தவுடன்  அரசன் அவரை அரண்மனைக்குப் பின்னால்  உள்ள  நதியில் நீராட அழைத்தான். 
        அவர்கள் நீராடிக் கொண்டிருக்கும்  போது பயங்கரக் கூச்சலைக் கேட்டனர். 
         அரண்மனை நெருப்புப் பற்றி  எரிந்து கொண்டிருந்தது. தீயின் ஜூவாலைகள் வானளாவிச் சென்றன. 
           அரசன் சந்நியாசியைப் பார்த்து, "இதைப் பார்த்தீர்களா?" என்றான், நெருப்பைச் சுட்டிக் காட்டி. 
          சந்நியாசி  நதியை விட்டு வெளியேறி, "நீங்கள்  என்ன  சொல்கிறீர்கள்? அங்கு  பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?  என்னுடைய துணிகள் அரண்மனையில் இருக்கின்றன. அவையும் தீப்பற்றிவிடும். நான்  ஓடுகிறேன்" என்று  ஓடத் துவங்கினார். 
          அவர்  அரண்மனையை  நோக்கி  ஓடும் போது, 'அரசனது அரண்மனையே தீப்பற்றி எரிகிறது.  ஆனால்,  அவர் நதியில் நின்று  கொண்டிருக்கிறார். நானோ அங்கிருக்கும் கோவணத்துணியை எடுத்து  வர ஓடுகிறேனே' என்று  அவர் மனதில்  பட்டது. திரும்பி வந்தார். 
        தண்ணீரில்  நின்றபடி சிரித்துக் கொண்டிருக்கும்  அரசனது கால்களில் விழுந்தார். பிறகு,
       "உங்களுடைய அரண்மனையே தீப்பற்றி எரிந்து  கொண்டிருக்கிறது. நீங்கள்  இப்படி  நின்று  கொண்டிருக்கிறீர்களே? இதை என்னால் புரிந்து  கொள்ள  முடியவில்லை " என்றார்.  
         அரசன் சொன்னான் :
        " நான்  இந்த  அரண்மனையை என்னுடையதாகக் கருதி இருந்தால் நான்  இந்நேரம்  இங்கு  நின்று கொண்டிருக்க முடியாது. அரண்மனை  என்பது அரண்மனை. நான்  என்பது நான்.  எப்படி அரண்மனை என்னுடையதாக முடியும்? நான்  பிறப்பதற்கு முன்பே  அரண்மனை இருந்தது. நான்  இல்லாமற் போன பிறகும் கூட அரண்மனை இருக்கும். அது  எப்படி  என்னுடையதாக இருக்க முடியும்?  
           நீ அந்தக் கோவணத்துணியை  உன்னுடைய தாகவும்,  அரண்மனை என்னுடையதாகவும் எண்ணினாய். ஆகவே, அவற்றின் பின்னால் ஓடுகிறாய்!" 
           *ஓஷோ*  கூறுகிறார் :
          "மனிதன்  அவனுடைய  நோக்கத்தினாலேயே அடிமையாகிறான். அவன்  அதை மாற்றுவதினாலோ, அல்லது  தகர்ப்பதாலோ விடுதலை  பெற முடியும் .💦

குற்றவுணர்வு

குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.

உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன. 

ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.

அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம். 

மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். 

வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.

நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.

இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்.

தவறு செய்வது மனித இயல்பு.

அதே போல் மன்னிப்பதும் மனித இயல்பு தான்.

நீங்கள் உங்களையே முதலில் மன்னித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி உங்களையே உங்களுக்கு மன்னிக்கத் தெரியாவிட்டால்,பிறரை உங்களால் எப்படி மன்னிக்க முடியும்?

உமர்கயாம் என்ற சுபி புலவர்,தன்னுடைய 'ரூபையாத்'என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தில்,''நான் குடிக்க விரும்புகிறேன்,ஆட விரும்புகிறேன்,பாட விரும்புகிறேன்.நீங்கள் கருதும் சகல பாவங்களையும் செய்ய விரும்புகிறேன்.

ஏனெனில் கடவுள் கருணை உள்ளவர்.

அவர் என்னை நிச்சயம் மன்னிப்பார்.

என்னுடைய பாவச் செயல்களை அவருடைய கருணையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.''என்கிறார்.

உமர்கயாம் ஞானம் அடைந்தவர்.மிகவும் தெளிவான ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்.

அவர் சொன்னதில் உள்ள முக்கிய கருத்து,

''நீங்கள் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்''என்பதே.

**#ஓஷோ*