Tuesday 28 November 2017

பாசிட்டிவ் எனர்ஜி

பாசிட்டிவ் எனர்ஜி

உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். ’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும்போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது, சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள்தான். நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி. ’அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது. ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது? மனிதனின் சிந்தனை அறைதான்.

இரு சக்திகளும் ஒரே அறையில்தான் வித்தாக விழ்கிறது. அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலிதான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர். எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர். இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும். உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக்கொள்வோம். திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது. அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.

மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.

இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு. ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும்போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத்தானே திரும்பவும் கிடைக்கும். அதற்காக அப்படி நடந்துகொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே வாழும் வீட்டில் சமூகத்தில்,நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்.

Tuesday 14 November 2017

கோபம்

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள்.

ஒருவர் கூறினார்,

நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை.

நான் ஒன்று சொன்னால்,
அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.

மற்றொருவர்,

யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்.

அடுத்தவர்,

நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார்.

இன்னொருவர்,

சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார்.

வேறொருவரோ,

நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.

இப்படி ஒவ்வொருவரும்
தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.

அது சரி...

நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா?
என்றதற்கு,

அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர்.

கோபம்னா என்ன?

கோபம் என்பது
அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு
நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.

அதுமட்டுமல்லாமல்

நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம்

இதே கோபத்துடன் செயல்பட்டால்

நட்பு நசுங்கி விடும்.
உறவு அறுந்து போகும்.
உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன?

சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க.

கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.

இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.

இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி,
ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.

இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம்.
இதே நிலை நீடித்தால்
ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல.
சத்தியமான உண்மை இது.

இதெல்லாம் நீங்க சொன்னீங்க...
உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு
நீங்க சொல்றதும்.

அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது...
அப்படி வாங்க வழிக்கு.

அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.

முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க.

அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க.

அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க...

ஈகோ பார்க்காதீங்க.

நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே.

முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க.
யார்மேல தவறுன்னு சிந்தியுங்க...

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.
அப்படி இல்லைன்னா
அந்த இடத்தை விட்டு நகருங்க...

தனியா உக்காந்து யோசிங்க.
அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள்.

அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம்.
என்ன நடந்துருச்சு பெருசா.
என்னத்த இழந்துட்டோம்.
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.

அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது.
எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க.

வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள்
என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.

நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது.

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,
நீங்க
அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.

தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட.
ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.
இதில் ஆறாவது அறிவை
அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க...

கோபம் வரவே வராது.

நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.

வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

என்னங்க நான் சொல்றது சரியா?
என் மேலே கோபம் இல்லையே!.....

Friday 3 November 2017

பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’
வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.
சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.

நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...

‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.#superlines #thingpossitivealways