Saturday 19 October 2019

கொண்டாட்டம்

*சுந்தர்பிச்சை சொல்லும் 'கரப்பான்பூச்சி' கோட்பாடு*

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு, அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.

மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.
இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.
நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை. *ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.* என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்திருக்கிறது.

*கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்!... அட! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!*

சோர்வு

# மனச்சோர்வு...

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.

மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது… அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது?

நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள்.

நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.

உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது?

உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்?

அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது!

எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை. வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.

துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயேதான் உற்பத்தியாகின்றன.

உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை.

அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும். நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும்.

மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள்.

வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!

எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள்... மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள்... அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.

கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்...

# வெற்றி_நிச்சயம்..

# வாழ்க_வளமுடன்.

Wednesday 2 October 2019

நன்றி

*நன்றியுணர்வின் சக்தி*

வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை,  பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை  சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை  கேட்டது.

"கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.

தன் குருவை  அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்.

இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய ஞானி  "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை பணிந்து வேண்டினார்.

குருவும் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார்.  *அனைத்தும் நன்மைகே  அனைத்திற்கும் நன்றி* என்பதுவே அந்த மாமந்திரம்.

குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும்  அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.

அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.

குருவிற்கு  மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு  கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச் சென்றார்.

குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால் *அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி* என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால்  நிலைமை மாறியது.

பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது.

வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.

*சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது*.

எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று  பதில் கூறினார்.

ஞானியும் தன் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.

ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பித்தார்  சந்திக்கும் எல்லா சூழல்களிலும்

*அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி*

என்று உளமார கூற ஆரம்பித்தார்.

அதுவரை அவர்  பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.

அதை போல் நாமும்  உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் .... என அனைத்திலும், எல்லா  சூழ்நிலைகளிலும், நடப்பவை  அனைத்தும் நன்மைக்கே, எனவே
*நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறுங்கள்*.

இந்த கதையை  மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .

அவர்களது வாழ்விலும் மாபெரும் மாற்றங்கள் வரும்

இந்த எளிமையான மாமந்திரம்  வாழ்வில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வரும்.

தன்னம்பிக்கை  எவ்வளவு சக்தி மிக்கது.

தன்னபிக்கை  ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின் பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.

இந்த மந்திரத்தை அறியாமல்தான் பிறவி மேல் பிறவியாக கர்ம வினையைச் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மாமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உச்சரித்து வருவோமெனில் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கி உணர்வோம்.

வாழ்க வளமுடன் !